(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 தொடர்ச்சி)

தலைப்பு-ஆரியச்சூழ்ச்சி, பெரியார், முத்துச்செல்வன் ;thalaippu_aariya-chuuzhchi_muthuchelvzn

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

5/9

  “இன்று தமிழ்நாட்டில் ’சமசுகிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை – பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

  தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமசுகிருதம் பயன்படுகிறதா? ” என்று கேட்டுத் தமிழ்நாட்டவரிடம் ஓர் எண்ணத் தூண்டலை உருவாக்கினார் தந்தை பெரியார். (சமசுகிருதம் ஏன்? கட்டுரை)

  “பார்ப்பனர்கள் வகுத்த அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 14 மொழிகளில் சமசுகிருதமும் ஒன்று என்று சர்வசாக்கிரதையாக எழுதிவைத்திக் கொண்டிருகின்றனர். இதுவே பெரிய மோசடி எண்ணத்தின் விளைவு என்பேன். ‘சமசுகிருதம் பேசுகின்றவர்கள் இந்தியாவிலேயே மொத்தம் 441 பேர் – அஃதாவது  கிட்டத்தட்ட 500 க்கும் குறைந்தவர்கள்’ என்று புள்ளிவிவரத்தை திரு பி..சி.கேர் தலைமையில்  ஏற்படுத்தப்பட்ட இந்திய ஆட்சி மொழி ஆணையததின் அறிக்கை(Official Language Commission Report) தெரிவிக்கிறது. இதுகூடப் புரட்டு என்றுதான் கூற வேண்டும். சமசுகிருதத்தை வழக்கில் பேசுபவர்கள் இந்த நாட்டில் யாருமே இல்லை என்று கூறி அன்றைய இந்தியா-ஆண்டு நூல் 1960 (India Year Book 1960) வெளியிட்ட மொழிவாரிப் பட்டியலில் சமசுகிருதம் பேசுவோர் 0.01 இலக்கம் பேர் என்று குறிப்பிட்டு விழுக்காட்டளவில் வெறுமையாக விடப்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டியுள்ளார் பெரியார். அந்த எண்ணிகை இன்றும் கூட மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உயர்வில்லை என்பதைப் புள்ளிவிளக்கங்கள் தெரிவிக்கின்றன. 100 கோடிக்கும் மேலான அளவில் மக்கள் உள்ள இந்தியாவில் 14 ஆயிரம் பேர் மட்டுமே சமற்கிருதத்தைத் தங்கள் தாய்மொழியாக அறிவித்துள்ளதாகப் புள்ளிவிளக்க அறிக்கை கூறுகிறது.

  இதனை விளக்கித் தந்தை பெரியார், “அப்படி இருந்தும் கூட, மேலே பல நூறாயிரக்கணக்கான மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்குக் கிடைக்காத சலுகை இன்று இதற்குத் தரப்படுகிறதே, காரணம் என்ன?” என்று கேட்டு அதற்குரிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.

  “சமசுகிருதம் ஒரு செத்தமொழி(dead Language)  என்ற உண்மை பல்லோராலும் மறுக்காமல் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அதை உயிர் ஊட்டுவதற்காகப் பார்ப்பனர்களைக் குடியாட்சித் தலைவர்களாகவும், மந்திரிகளாகவும், நீதிபதிகளாகவும் கொண்டுள்ள இந்த ஆட்சியினர், சமீப காலமாகச் செய்துவரும் ‘பகீரதப்’ பிரயத்தனங்களும் அதற்காக மற்ற மக்களிடத்தில் கசக்கிப் பிழிந்து வாங்கும் வரிப்பணத்தைக் கரியாக்குவதையும் பற்றி இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் தலைவர்களோ மொழிவல்ல அறிஞர்களோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவே இல்லை” என மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் பெரியார்.

 பொதுமக்கள் தலைவர்களை மட்டுமல்லாமல் ‘மொழிவல்ல அறிஞர்களையும்’ சாடியுள்ளார் பாருங்கள். அதாவது மொழியியலாரும் தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தத் தயங்கும் நிலை அன்றும் இருந்திருக்கிறது; இன்றும் இருக்கிறது.

  வேண்டு மென்றே தமிழைத் தாழ்த்தியும் பழித்தும் அதே நேரம் ஆரியத்தை உயர்த்தியும் கூறும் ஆரியச் சூழ்ச்சி குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுவதைப் பாருங்கள்:

  “ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும் இத்தமிழ் நாட்டில் பெரு வழக்காய் விட்டது.(- குறள்நெறி (மலர்1 இதழ்18): ஆவணி 17,1995: 1.9.64. நன்றி அகர முதல.)

  தமிழ்காப்பிற்காக அறிஞர்களும் தலைவர்களும் கூறுவதை ஆரிய வெறுப்பு என்பாருக்குத் தந்தை பெரியார் பின்வருமாறு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

  1938-இல் சென்னைக் கடற்கரையில் இராசாசி இந்திக்கு ஆதரவாகக் கூட்டிய ஒரு கூட்டத்தில்  முத்துரங்க (முதலியார்) என்பார் இந்திக்கு எதிர்ப்பான குரல் “ஆரியத் துவேசம்” என்று கூறியதற்குத் தந்தை பெரியார், “மறைமலை அடிகளும், தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும் கிளர்ச்சிக்குக் காரணம் ‘ஆரியத் துவேசம்’ என்று சொன்னாராம். கனம் ஆச்சாரியாரும் இந்தி எதிர்ப்பவர்களைப்பற்றி இப்படியே சொல்லுகிறார். தமிழரிடையே ஆரிய பாசையைப் புகுத்துவதும், அது கூடாதென்றால். ‘ஆரியத்துவேசம்’ என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் என்றால், இது மிகவும் இழிவான சமாதானம் என்பேன். தோழர் மறைமலை அடிகளும் பாரதியாரும் வெகு காலமாக இதனை ஆட்சேபித்து வருகிறார்கள். இதைக் கண்டித்துப் பல புத்தகங்கள் போட்டு இருக்கிறார்கள். அன்றியும் இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு ‘ஆரியத் துவேசம்’ இருப்பது ஓர் அதிசயமா என்று கேட்கிறேன்” என்று விடை இறுத்தார். (சென்னைக் கடற்கரையில் 26.6.1938 சொற்பொழிவில்; விடுதலை 30.6.1938)

 மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார்,  பாவாணர், பேராசிரியர் இலக்குவனார் போன்ற தமிழ் உணர்வுள்ள, துணிந்து கருத்துகளை முன் வைக்கவல்ல அறிஞர்கள் இன்று சிலரே உளர். ஆயினும் அந்த எண்ணிக்கை உயர வேண்டாமா? தந்தை பெரியார் கூறுவது போல “மொழிவல்ல  அறிஞர்கள்” உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

(தொடரும்)

பெங்களூரு முத்துச்செல்வன்