ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 16 : . ஆகமங்களின் தோற்றம் – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
வேதாந்தம்
வேதத்தின் முடிந்த முடிவு வேதாந்தம். வைதீகக் கருமத்தின் முடிந்த முடிவு ஞானம். இறவாப் பெருநிலையை அடைவதற்குரிய மார்க்கம் அறிவுடைமை. “ அவனை அறிவதன் மூலமே, இந்நில உலகில், ஒருவன் இறவாப் பெரு நிலையை அடைகிறான். அவனை அடைவதற்கு இது தவிர்த்து வேறு வழி இல்லை “ (“தம் எவம் வித்வான் அமர்த பஃகவதி நான்யஃக பந்தா அயனாய வித்யதே என்கிறது சுருதி) ஆகம நெறியின் முடிந்த முடிவே பக்தி . இறவாப் பெருநிலையை அடைவதற்கான வழி, அவன் மீது இடைவிடாத் தியானம் ஒன்றே ஆம் (அனன்ய சிந்தா) அல்லது சிரீகிருட்டிணன் ‘வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கூறுமாறு, ஒருவனைப் பற்றியே சிந்தித்தல், (ஏகபக்தி). உபநிடதத்தில் கற்பிக்கப்படும் முப்பத்திரண்டு வித்தைகளும், ஒருவன் தன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதன் முன்னர், அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாட்டு நெறிகளின் வடிவங்களாம்.
ஆகமங்களின், முதலாவதும், இரண்டாவதுமான நூல்கள் (சரியை, கிரியை) சிவன் அல்லது விட்ணுவை வழிபடுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் பக்தி நெறியின் கட்டுப்பாட்டு நிலைகள், பல இடங்களில் யோகப் பயிற்சி வடிவிலான தத்துவார்த்த கடமைகளையும் உடன் கொள்ள வேண்டியிருப்பதால், ஆகமங்களின் மூன்றாவது நூல், யோகநிலை பற்றிக் கூறுகிறது. ஈண்டு ஞானம் எனக் கூறப்பட்டது, மேலே குறிப்பிடப்பட்ட ஞானம் அன்று. மாறாக, ஆகம நெறிக் கோட்பாடுகளில் புதையுண்டு கிடக்கும் தத்துவார்த்தக் கொள்கைகளை விளக்குவது என்ற பொருள் உடையதாம். இந்தத் தத்துவம், வேதாந்தத் தத்துவத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. காரணம், பின்னது, இப்பிரபஞ்சத்திற்குப் பின்னால், ஒரேயொரு உண்மைப் பொருளை மட்டுமே, அதாவது பிரம்மாவை மட்டுமே உண்மை என ஏற்றுக் கொள்கிறது. முன்னது, முப்பொருள் உண்மைகளை “தத்வ த்ரயம்” அதாவது, ஈசுவரன், தனி மனிதன், செயல் ஆகியவைகளை, உண்மைப் பொருள்களாம் என ஏற்றுக் கொள்கிறது.
இவ்வாறு ஒவ்வோர் ஆகமமும், யோகபதம், ஞானபதம் என இரண்டைக் கொண்டுள்ளன என்றாலும், உபநிடதங்கள், ஞானமார்க்கத்தின் சமயத் திருநூல் தொகுதியாதல் போல, ஆகமங்கள், தொடக்கத்தில், பத்தி மார்க்கத்தின் சமயத் திருநூல் தொகுதியே ஆகும். ஆகமத் திருமுறை நூல் பலர்க்கு உரியதாம். உபநிடதம், குறிப்பிட்ட சிலர்க்கு மட்டுமே உரியதாம். ஆகம நெறி எளிய நெறி. உபநிடத நெறி கடின நெறி. சிரீ கிருட்டிணன் பின்வருமாறு கூறுவது காண்க. ‘’அருவுருவாம் இறைவன் மீது இதயத்தை நிறுத்தி வழிபடுவார், அனுபவிக்க வேண்டிய துன்பம் மிகப் பெரிதாம். அகவுணர்வுகளுக்குப் புறஉருவம் கொடுத்து, வழிபடுவார்க்கு, இறைவனை அருவுருவ நிலையில் நிறுத்தி வழிபடும் நெறி, மிகப்பெரிய துன்பத்தைத் தரும். . . . . . (கிலெசொதிகரசு தெசாம் அவ்யக்தாசக்த செதசாம் அவ்யக்தாஃகிகதிர் – துக்கம் தெஃகவத்துபிர் அவாப்யதெ.
- -பகவத் கீதை – 12:5
வைதீக வழிபாட்டு முறை, மக்களில், நான்கு வருணங்கள் பிரிக்கப்படுவதைத் தேவைப்படுத்திற்று. வேத, வேதாந்தங்களைக் கற்பதிலிருந்து, நான்காவது வருணமக்களை ஒதுக்கி வைப்பதற்கும் கொண்டு சென்றது. மக்களை நான்கு வருணங்களாகப் பிரிப்பது, வருணாசிரம தரும வளர்ச்சிக்கும், அந்நான்கு வரணத்தவர்க்கும் ஆசிரமங்களை வகைப்படுத்துவதற்கும் வழி வகுத்துவிட்டது. இதன் விளைவு, சந்நியாசம், பிராமணர் ஒருவர்க்கு மட்டுமே உரிமையுடையது. மோட்சம், சந்நியாச வாழ்க்கையில் இடம் பெறும் தனிப்பயிற்சிக்குப் பின்னரே அடையக்கூடும் என்ற கோட்பாடுகளாயின. இக்கோட்பாட்டின் முடிந்த முடிவு, வைதீக நெறிப்படி, மோக்ஷம் பிராமணர்களால் மட்டுமே அடையக் கூடியது என்பதாகிறது.
ஆகம நெறி, இக்கோட்பாட்டுக்கு எதிராக நிற்கிறது. எவன் ஒருவனும், ஏன், ஒரு சண்டாளனும் கூட, விட்ணு அல்லது சிவனின் திருமேனி அல்லது சின்னத்தைக் கொண்டு வந்து வைத்துப் பூசை செய்யலாம். சிவனடியார்கள் வரலாறு கூறும் தமிழ்ப் பெரிய புராணம், கோயில்களில், சிவனை வழிபட்ட, இழிகுலத்துச் சைவ அடியார்களைக் குறிப்பிடுகிறது. காளத்தித் திருக்கோயிலில் உள்ள சிவனுக்குக் கண்ணப்ப நாயனார், இறைச்சி உணவைப் படைத்துள்ளார். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான, பெரும்பாலும் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணன், சீரங்கம் திருக்கோயிலைக் சூழ உள்ள தெய்வத் திருமண்ணில் நடப்பதற்கும் தகுதி அற்றதாம் அளவு இழிவுடையவராகக் கருதப்படும், கால்களைக் கொண்ட இழிகுலத்தவராகக் கருதப்பட்டவர். ஆகமங்கள், நான்கு சாதிக் கொள்கையை ஏற்கவில்லை.
ஆனால் உண்மையில் வேதத்தின் ஒரு பகுதியாகிய வேதாந்தம், சூத்திரர்களுக்குக் காட்டப்படாது மறைக்கப் பட்ட ஒரு நூலாகும். இதை உறுதிப்படுத்தும், ஒரு தனிப் பிரிவையே ‘பாதராயணம்” கொண்டுளது, காரணம், சூத்திரர்கள், தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும், சடங்கு நெறிகளுக்குத் தகுதி படைத்தவரல்லர், ஆகவே, அவர்கள், வேதங்களை, ஓதவும் கேட்கவும் விலக்கப் பட்டனர். (வேதம் – சூத்திரம் – 1:335-38) ஆகமங்கள் இதற்கு மாறாக, அனைத்து மக்களுக்கும் உரிமையுடையவாம். அதன்படி இன்றும் சிவ தீட்சை பெற்ற ஒரு பறையன், அத்தீட்சையைப் பிராமணன் ஒருவனுக்குக் கொடுத்து, அப்பிராமணனுக்குக் குருவாகவும் ஆகலாம். ஆகம நெறியாளர்களிடையே சந்நியாச நிலைகளும் பரவலாயின. வைணவ சந்நியாசிகள், ஏகாந்திகள்” என்றும், சைவ சந்நியாசிகள், சிவயோகிகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆகமங்களின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லா இனத்தவர்க்கும் உரியதான பக்தி நெறி, ஒரு இல்லறத்தானையும், வாழ்க்கைப் பெருங்கடலைக் கடந்து கரை சேர்க்க வல்லதாம் ஆதலின், சந்நியாச நிலை, மோட்சம் அடைவதற்கான அடிப்படைத் தேவையன்று. பக்தர்கள் சந்நியாசிகள் ஆகின்றனர் என்றால், அதற்குக் காரணம் யோகப் பயிற்சி, ஆகம நெறியோடு இரண்டறக் கலக்கவில்லை ஆயினும், அதன் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மேலும், யோகப்பயற்சி, சந்நியாச வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளக் கூடியதாயிற்று.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Leave a Reply