ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்
(13)
நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார்.
ஆண்மைசால் பேருழைப்பை
அன்னை நம் நாட்டுக்காக்கி,
வீண்பேச்சைக் குறைத்துத் தீய
வீணரை ஒழித்தே அன்பாம்
காண்தகு நிலைகள் எல்லாம்
கடும் உழைப் பொன்றால் என்ற
மாண்பெழில் கொள்கை வெல்லும்
வரலாறு படைக்க வேண்டும்!
முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய மாகும்.
“சக்தியை வீணாக்காமல்
சகத்தினில் நமதுநாடு
மக்களின் சக்தி ஒன்றே
மாஇமயத்தின் உச்சிப்
பக்திபோல் ஒளிரவேண்டும்
பயன்பெறும் ஒற்றுமையை
முக்தியாய் நினைக்க வேண்டும்!
முன்னேற்றம் நாளும் வேண்டும்!”
மேலும் முன்னேற்றம் குறித்து கவிஞர் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி, மனத்தில் பதிய வைக்க முயல்கிறார்.
‘முன்னேற்றச் சக்தி தன்னை
மொத்தமாய்த் திரட்ட வேண்டும்!
முன்னேற்ற நன்மை நல்ல
முறை வாழ்வோர் கொள்ள வேண்டும்!
முன்னேற்றம் நமது நாட்டின்
மூச்சாக இருக்க வேண்டும்!
முன்னேற்றம் யாண்டும் வேண்டும்:
முழுப்பெரும் வெற்றி வேண்டும்!
உழைப்பு வெல்ல வேண்டும்; உற்பத்தி பெருக வேண்டும் தழைத்திட வேண்டும் நம்மின் தகுதிகள்
என்றென்றைக்கும்! ஒழித்திட வேண்டும் தீக்கையூட்டுகள் தருவார் தம்மை என்றும்,
பேசிப் பேசிக் காலமெல்லாம் பெருமை – இழந்தோம்
பேருழைப்பைத் தோழர்களே ஏற்றிப் போற்றுவோம்!”
என்றும் கவிதை முழக்கம் செய்கிறார் அவர்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply