ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) – தொடர்ச்சி]
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்
(16)
4. உலகம் தழுவும் நோக்கு
தாய்மொழிப் பற்றும் தம் இனப் பற்றும் கொண்டுள்ள பெருங்கவிக்கோ, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வை வலியுறுத்துவதுடன், உலக ஒற்றுமையை வளர்ப்பதிலும் கருத்துடைய கவிஞராகத் திகழ்கிறார்.
உலக ஒற்றுமை ஓங்கிட வேண்டும் வையம்
ஒன்றே எனப்புவி ஒழுகிட வேண்டும்.
கலகம் செய்யும் கயமைகள் எல்லாம் இன்றே
கண்டிப்பாக நீங்கிட வேண்டும்
மக்கள் எல்லாரும் ஒரு தாய் மக்கள் பூமி
மானுடம் எல்லாம் ஓர் குடும்பம்!
செக்கர் வானிலோர் சூரியன் போல பாரின்
தேசம் ஒன்றாய் ஒளிர்ந்திட வேண்டும்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்-என்றே
நவின்றதும் முதன்முதல் எம் தமிழினம்
ஓதும் இதைச் செயல் உறுதிப் பாட்டினால் – இணைவம்
ஒரேகுடை ஆட்சி காணல் நம் கடன்
போர்கள் ஒழியவேண்டும், எங்கும் அமைதி நிலவிட வேண்டும் என்று ஆசைப்படும் கவிஞரின் உள்ளம் கொதிப்படைகிறது. தற்கால உலக நிலை கண்டு. சீற்றம் விளைகிறது. அதன் பயனாக
உலகினை ஏறெடுத்தே
உணர்வுடன் பார்க்கின்றாயா?
கலகங்கள்! கயமைச் சூழ்ச்சிக்
கல்லெறி கொடுமை! ஈதே
நலமுறப் பயன்படுத்தும் .
நயவஞ்சர் மேலோர் என்றால்
நிலமிங்கே எதற்கு? தோழா
நிமிர்ந்துவா நெருப்பை வைப்போம்!”
இந்த நிலை கண்டு குமுறி எழுந்து, இடித்துரைத்து, நலிவுகள் சாக ஆவன செய்ய வேண்டியவர்கள் படித்த மக்கள் அவர்கள் நிலை எப்படி உள்ளது? கோபத்துடன் சுட்டுகிறார் கவிஞர்,
படித்தவர் பதவி யுள்ளார் .
பகடைக்காய்! எவராண்டாலும்
பிடிப்பதும் பல்லிளித்துப்
பேடிபோல் சென்று நன்றாய்
நடிப்பதும், அதனால் வாழ்ந்து
நாள் கழிப்பதும்தான் வேலை!
இடிப்பவர் இல்லை! தோழா
எழுந்துவா இடிப்போம் நாமே!
மக்களைப்புலியெனச் சீறி,பொங்கும் புயலென மாறி, நிலைமைகளை மாற்றும்படி அறிவுறுத்துகிறார் கவிஞர்.
ஓங்கும் உயரிய எண்ணம் கொண்டு ழைப்போம்
நன்றே செய்திட நாளும் முயல்வோம்
விஞ்சும் நயங்கள் கண்டே நன்மை திளைப்போம்,
ஒன்றினை ஒன்று தான் தழுவியே வாழும்!
இந்த உலக இயற்கையைக் கற்றிட வேண்டும்!
அன்றன்று சிந்தனை புதுக்கிட வேண்டும் உயிர்
அருமை சமைத்திடும் ஆற்றல்கள் வேண்டும்!
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply