(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20)   தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21)

 

வீண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம்.

எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன்!

வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே

கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக

சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்திப்

புனிதம் அடைவோம் போற்றிப்புகழ் அடைவோம்என

ஆசையாய்க் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய்

 

என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை வெளிப் படுத்துகிறார்.

 

  எந்த ஒரு மதத்தையும் ஏற்படுத்த எண்ணாமல் சிந்தனையில் மனிதர்களைத் திருத்துதற்கே எண்ணிப் பாகுபாடு பார்க்காமல், ஒர வஞ்சம் எண்ணாமல், சீரான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல், மற்றையோரும் மதத்தை நினைக்காமல், நற்றவக் கொள்கைகளை நவின்று சென்றிட்டால், நம் மனித இன இதயம் திறந்திருக்குமே என்று அவர் ஏக்கம் தெரிவிக்கிறார்.

 

பெரிய மனத்துடனே பிற்போக்குக் கொள்கைகளை

உடனே எரித்திடுவீர் உண்மை நெறியனைத்தும்.

திடமுடன் ஏற்றுச் சிந்தை மகிழ்ந்திடுவீர்!

காலங்கள் மாறுவதும் கருத்துக்கள் மாறுவதும்

ஞாலத்தில் நாமின்று நம்கண்ணால் காண்கையில்

மதத்தலைவர் கூறிட்ட மட்டாகக் கொள்கையையும்

விதித்தவிதி அதுவென்று வீறாப்புப் பேசிநிதம்

மதத்திமிரை வளர்க்கின்றீர்; மாண்புசால் புதுக்கொள்கை

உதிக்கவில்லை உங்களுடைய ஒளியில்லா இதயத்தில்

பழஞ்சோறு புளித்துவிட்டால் பசியாற்ற எண்ணுவீரா?

பழங்கொள்கை பதமிழந்தால் பள்ளத்தில் தள்ளினால் என்?

எத்தனையோ ஆண்டுகள் முன் ஏற்றிட்ட கொள்கை யெல்லாம்

இத்துணை புதுஉலகுக் கேற்றவையாய், இருந்திடுமோ?

ஏற்றது போக ஏலாத கொள்கை யெலாம்

மாற்றி யமைத்தாலென்? மதியைத் தூண்டினாலென்?”

 

என்று அவர் கேட்பது நியாயமான கேள்விகளேயாகும். பண்டைத் தமிழகத்தில் மத பேதங்களும், கடவுளர் வணக்கமும் இருந்ததில்லை என்பதையும் பெருங்கவிக்கோ தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி யுள்ளார்.

 

நன்னெறியை வள்ர்த்தார் செந்நெறியை மேல் வளர்த்தார்

ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்.

முன்பே உரைத்ததுநம் முதுதமிழ்க் குடியன்றோ

அன்பை அறிவை அறநெறி முழக்கத்தை

பண்பைப் பட்டறிவை பயன்தரு முயற்சிகளை

திண்மை ஊக்கத் தெறிவைத் திறமாக்கி

வாழ்வியல் முறையை வடித்தெடுத்தார் நம்தமிழர்

பாழ்மதங்கள் தந்த பகைமைக் கருத்துகளை

ஏற்றதும் தமிழர் ஏன் மறந்தார் நம் நெறியை?

என்று அவர் வருத்தப்படுகிறார்.

 

(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்