[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(20)

6. மதங்களைச் சாடும் சிந்தனை வேகம்

  உள்ளத்தில் பெருக்கெடுக்கும் உணர்வின் ஊற்றுக்களாகப் பக்திப் பாடல்கள் பாடியுள்ள பெருங்கவிக்கோ முழுக்க முழுக்க ஆத்திகக் கவிஞர் அல்லர். சிந்தனை வேகம் பொங்கிப் பாயும் சுடர் அறிவுக் கவிதைகளை மதங்களைச்சாடியும், போலிமதவாதிகளை வன்மையாகக் கண்டித்தும் அவர் பாடியிருக்கிறார். இவர் ஒரு நாத்திகரோ என்ற மயக்கத்தை உண்டாக்கும் அவற்றை மட்டுமே படிக்க நேர்ந்தால். கவிஞரை நன்கறிந்த கவிக்கொண்டல் மா. செங்குட் டுவன் இது குறித்து தெளிவுபடுத்தியிருப்பது நினைவு கூரத்தக்கது.

“அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களில் சிலருக்குப் பெருங்கவிக்கோ பெரியநாத்திகராகத் தோன்றுவார். இன்னும் சிலருக்கு பெரிய ஆத்திகராகத் தெரிவார். யார் என்ன நினைத்தாலும் அதைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. தமது உண்மை மனச்சாட்சி வழியே அவர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் இறை நம்பிக்கையுடையவர்தாம். ஆனால், இன்றைய ஆத்திகவாதிகள் கூற்றுகளையெல்லாம் அப்படியே ஏற்றுக் ‘கொள்ளும் கண்மூடித்தனமான பக்தர் அல்லர் பகுததறிவாளர் நுழைய முடியாத இடத்தில்கூட நுழைந்து ஆத்திகக் கோட்டையையே தகர்க்கும் அதிர்வேட்டுக் கவிஞர் அவர். பகுத்தறிவுப் பக்தர் என்று அவரைக்கூறலாம்.” (மா. செங்குட்டுவன்-முத்தமிழ் மாமணிகள் கவிதைத் தொகுப்பின் அணிந்துரையில்.)

 மதங்களுக்கு எதிரான அதிர்வேட்டுகளாகவே கவிஞரின் கவிதைகள் அமைந்துள்ளன.

 

மதத்தை ஒழிப்பதற்கு மார்தட்டி அழைக்கின்றேன்

எதற்கும் நான் அஞ்சாமல் என்னருமைத் தாய் நாட்டீர்

அழைக்கின்றேன் அழைக்கின்றேன்!

என்று முழக்கம் செய்கிறார் கவிஞர்.

எற்றுக்கு மதம் வேண்டும்? சொல்லுங்கள்!

மதங்கள் பல தோன்றினவே? மடமை ஒழிந்ததுவா?

சாதிகள்பல சாய்ந்தனவா; சமஉரிமை வந்ததுவா?

சாதிமுறை ஒழிந்ததென்று சாற்றுதற்கு நியாய  முண்டா?

நாதியற்ற ஏழையரை நலியாமல் காத்ததுண்டா?

பொய்மை ஒழிந்ததுவா? புரட்டும் அடங்கியதா?

மெய்மை நிலைத்ததுவா? மேன்மை வளர்ந்ததுவா?

பொறாமையும் வஞ்சகமும் பொக்கெனவே போனதுவா?

சூதுகளும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் மாய்ந்தனவா?

வாதுகளும் வம்புகளும் வாய்ச்சண்டை – ஒழிந்தனவா?

எத்தனையோ மதத்தலைவர் இத்தரையில் தோன்றினரே

அத்தனை பேரும் அரற்றிவிட்டுச் சென்றனரே!

என்னதான் பெரும்பயனை இந்தப்பூமி கண்டதையா?

சிந்தனைத் திறன் எழுப்பும் சூடான கேள்விகள்தான் நியாயமான சிந்தனைகள், ஆனால் இப்படி எல்லாம் எடுத்துச் சொன்னால், “நாத்திகன் என்றிடுவீர். நாத்தடிக்க ஏசிடுவீர்; கூத்தான சுடு சொல்லால் கொட்டிடுவீர்; ஆள் சேர்த்து வந்து அரற்றிடுவீர்” என்றும் உணர்ந்து சொல்கிறார் அவர். அதற்காக அவர் தயங்க, வில்லை. மேலும் சூடான கணைகளை எறிகின்றார்.

எந்த மதத்தலைவர் இந்த நல்உலகத்திலே

முந்தை மனிதர்களை முறைப்படி நடக்கவைத்தார்?

சுயநலத்திற்காகத் தோற்றுவித்த மதங்க ளெல்லாம்.

வியந்துமே பாராட்டி வேண்டிநின்றீர்! மதிகெட்டீர்

மனிதர்களில் வேற்றுமையேன்? மதங்கள் வந்து பிரிப்பதும் ஏன்?

தனியாகப் பிரிந்துபல சாத்திரங்கள் சாற்றுவதேன்?

உலகத்தில் பிறந்திட்ட ஒப்பிலா மனித ரெல்லாம்

பல மதத்தார் ஆகாமல் ஒருமிதமாய் ஆனால் என்?

சண்டை சச்சரவும் சாய்ந்து மடிந்திடுமே

விண்டிடா மகிழ்ச்சி வெள்ளம் விரைவில் ஏற்படுமே!

என்று கவிஞர் குறிப்பிடுவது மக்கள் மனசில் பதிய வேண்டிய உண்மை ஆகும். அண்ட மெல்லாம் என் மதமே ஆணிவேர் என்று சொல்லும், பண்டை மதமிருந்து வந்த மதம் வரைக்கும், எந்த மதத்தில் ஊழல் இல்லாமல் போச்சுதப்பா என்று கேட்டு, ஒவ்வொரு மதத்திலும் நிலவுகிற குறைபாடுகளை விரிவாகவே சுட்டிக் காட்டுகிறார் பெருங்கவிக்கோ. வெறுமனே குறை கூறிக் கண்டித்துப் பாடி விட்டு ஒதுங்கி நிற்கவில்லை அவர். நல்வாழ்வுக்கு வகை செய்யக் கூடிய நல்ல யோசனையை அவரே முன் வைக்கிறார்.

 

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்