ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30
சிறிதளவு உரிமை கிடைத்தால், விடைத்துக் கத்தும் இயல்பினர், அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண்பினர், தடம் புரண்டலையும் தறுதலைக் குட்டிகள் என்றெல்லாம் வருணிக்கிறார் கவிஞர். மக்கள் மக்களாய் வாழ மக்களே தக்க தீர்ப்பைத் தருவரோ என்றும் எண்ணுகிறார்.
எழுத்தாளர்கள் பற்றி மீண்டும் சொல் சாட்டை சொடுக்குகிறார் பெருங்கவிக்கோ.
‘ஏற்று வளர்ப்பதே வாழ்நா ளெல்லாம்
பயிலும் நெறியாய்ப் பாரில் வாழ்பவர்
உயிலில்* ஒருவர்க்கு உரிமை செய்தல் போல்
அயில்வேல் எழுத்தை அடிமை செய்பவர்
ஆளும் வர்க்க ஆட்டம் தோதாய்
நாளும் பாடும் நலிந்த பாடகர்!
சூழ்நிலைத் தோதாய் சுதிஇசை கூட்டித்
தாழ்ந்து காணும் சங்கீத வித்துவான்கள்
சமுதாயப் புண்ணைத் தரம் கீறி ஆற்றும்
அமரத்து வத்தை அறியாக் கூலிகள்
சமயம் வந்தால் தன்னினமேலேயே
இமயப் பழியை எடுத்தே எறிந்து
காட்டிக் கொடுக்கும் கயமை ஊற்றுகள்
வாட்டும் வறுமை மாற்றா வழியினர்’
இவர்களிடையிலும் ஒப்பிலா அறிஞர், உயர்ந்த சான்றோர் பற்பலர் இருக்கிறார்கள். இவர்களோ சிற்பி கையில் செயல்படா உளிபோல் வாழ்கிறவர்கள் என்று குறிப்பிடுகிறார் கவிஞர். இவர்கள் வாயில்லாப் பூச்சிகள் என்றும், தாழும் நிலையே தான் வந்த போலவும், வாயில் இல்லா வீட்டினைப் போலவும் தாயகத்தில் இருக்கும் மாயப் புலிகள் என்றும் கூறுகிறார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply