ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32
உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன.
இதோ ஓர் எடுத்துக்காட்டு:
உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம்
உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை
கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக்
குடல் நிரப்பி ஆனந்தம் அடைகின்றோரே அந்தோ
திண்டாடும் ஏழைமகன் விடுதி வாசல்
தெருவோரம் நின்றானே கவனித் தீரா?
முண்டங்காள் உம் கண் என்ன குருடா? அந்த
முழுப்பசியுள் மகன்பசியை எண்ணி னீரா?
நாட்டின் நிலைமையை நினைத்துப் பெருங்கவிக்கோ பாடியுள்ள பாடல்கள் சுடுசரங்களாகவே பாய்கின்றன. தன் கருத்துகளை வெளிப்படையாக முழக்கமிடுவதில் அவர் எவருக்கும் அஞ்சுவதேயில்லை. இன்றைய நிலையைச் சுட்டிக்காட்டும் பாடல்கள் சில இதற்குச் சான்று கூறும் –
பெருங்கொள்ளைக் காரரெல்லாம் இன்று நாட்டின்
பெருஞ்செல்வன் ஆகிவிட்டார்! இன்பே இல்லாக்
கருங்கல்போல் நெஞ்சுடையா ரெல்லாம் இன்று
கருணைமிகு வள்ளலெனப் பெயரெ டுத்தார்!
அருஞ்செயலைச் செய்கின்றோன் சாக, ஒன்றும்
அறியாத அயோக்கியனோ உயர்ந்து வாழ்ந்தான்!
துரும்பாக இவரையெலாம் மதிக்கும் நாளே
தொழத் தகுநல் சான்றோர்க்கு விழாநாள்
… … … … ஏதுசெய்தும்
தம்படிகள் சுருட்டுவதே நோக்கம் வைய
அரங்கத்தில் உழைப்போர்கள் வாட, உண்மை
அயராது போற்றுபவர் ஓட, தீய
கரங்கொண்ட கயவர்கள் வலிமை கொண்டார்!
கவினுலகை ஆள்கின்றார் விடிவுண்டாமோ?
சந்தையிலே விற்கின்ற பொருளாய் நம்மைச்
சனநாயகப் பெயரால் வாட்டி ஆட்டு
மந்தையென மேய்க்கின்றார்! அறிஞரெல்லாம்
வால்பிடித்து வாழ்கின்றார் ஆள்வோர் தம்மை!
சிந்தனையைக் கூர்மை செய்வோர் இலையா? உண்டு!
தினக்கூலி வாங்கியவர் ஊமையானார்!
நிந்தனைகள் கூறுவதாய் நினைக்க வேண்டாம்!
நிலையீது! இதை மாற்ற என்பா போர்வாள்!
எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருப்பது மக்களின் இயல்பாக இருக்கிறது. இந்த நிலை கவிஞருக்குச் சீற்றம் தருகிறது. அவருடைய சிந்தனைச் சீற்றம் மூடி மறைக்காத சொற்களாகப் பாய்ந்து புரள்கிறது. அவற்றில் பெருங்கவிக்கோவின் முற்போக்கு எண்ணம் கனல்கிறது.
வஞ்சச் செயலால் வாழும் சிறுமதியர்
தஞ்சமாய் எல்லாம் தனி இறைவன் செயலென்பார்!
கூடிக் கெடுக்கும் குணங் கெட்டார் கூடத்தான்
நாடியே எல்லாம் நனி இறைவன் செயலென்பான்
பேடிக்குணத்தார் பித்தலாட்டக் கொடியவர்கள்
வாடிக்கை யாயெல்லாம் வாழிறைவன் செயலென்பார்!
அடுத்துக் கெடுப்பவர்கள், அடங்காது நடப்பவர்கள்
படுத்துக் கிடந்தே பால்தேனும் பழரசமும்
விதவிதமாய் உண்பவரும் வெல் இறைவன் செயலென்பான்
கூனிக் குறுகிக் கும்பி வயிற்றுக்காக
ஆனமட்டும் போராடி அயர்ந்தாரும் கூடத்தான்
எல்லாம் இறைவன் இனிய செயல் என்கின்றான்!
குடிப்பதற்குக் கூழ்கூடக் கும்பிக்கு இல்லாமல்
வெடித்துக் குமுறுகின்ற வீரன் ஏழைமகன்
துடிக்கும் பொழுதினிலும் தூயஇறை செயலென்பான்
படித்த படிப்பும் பாடமெலாம் ஈதொன்றே!
கட்டழகி இன்பம் கனியழகி நஞ்செய்யிலே
நட்டு உழைக்கும் நனியழகி நம் நாட்டில்
உடுத்துதற்கும் கூட ஓராடை நூலாடை
எடுக்க முடியாமல் ஏழ்மையிலே வாடுகின்றாள்!
எல்லாம் இறைவன் செயலென்றே! ஆனாலும்
வல்லச் செருக்குடைய வனிதை மாடியிலே
உல்லாச மாயிருக்கும் ஓரத்துச் சன்னலுக்கும்
சில்லாடைப் பட்டாலே திரையிட்டு வாழ்கின்றாள்!
இவர்களும் கூடத்தான் இறைவன் செயலென்பார்!
தவமும் பாவமும் சரிசமமா சிந்தியுங்கள்!
என்ன கொடுமை? இழிவான மடமையிது!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply