(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36

 படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார்.

 

 தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான் என்று அழுத்தமாகச் சொல்கிறார். அமிழ்தினில் நஞ்சைக் கலப்பது போல, அன்று முதல் இன்று வரை நடப்பதனாலே தமிழனுக்குத்  தமிழனே பகைவன்  என்கிறார் அவர்.  அவனது குணக்கேடுகள் பற்றியும் கூறுகிறார்.

 

நன்றியைக் கொள்வதிவன் அன்றாட மாச்சு

நம்பின பேருக்குத் துரோகம் செய்வதே மூச்சு

பன்றிகள் போலலைத்து பம்பற்றியே பேச்சு

 

படித்தவன் கூட ஐயோ! பண்பினை விடலாச்சு!

காட்டிக் கொடுப்பதிவன் கைவந்த கலை . என்பான்

கண்மூடித் திற்க்குமுன்னே காதகக் கொலை செய்வான்!

ஊட்டி வளர்த்த தமிழ் உயர்வுக்கு உலை வைப்பான்!

உண்மையைத் துணிந்துசெய உளமஞ்சிச் சிலையாவான்.

 

பெருங்கவிக்கோவின் புதிய பார்வைக்கும், புதிய சிந்தனைக்கும் சான்றாகக் ‘கோவிந்தன் கொடுங்கோலன்’ ‘கடவுள் எனக்குக் கடன்காரன்’ என்று அவர் பாடியுள்ள பாடல்களைக் குறிப்பிட வேண்டும்.

கோவிந்தா கோவிந்தா என்றொருவன் குரல் எழுப்பி, கொடும் வெயிலில் சாலையிலே உருளுகின்றான் வயிற்றுக் காய்!

கோவிந்தா கோவிந்தா என்றே மற்றொருவனும் தான்

கோபுரம்போல் மாளிகையில் பணச் செருக்கில் புரள்கின்றான்

கும்பிட்ட இருவருக்கும் கொடுத்ததிலே வஞ்சமென்றால்

கும்பிட்ட ஒருவன் நீ கொடுங்கோலன், அன்றோ? சொல்!

 

என்றும் திருப்பதி ஏழுமலையானைக் கேட்கிறார் கவிஞர்.

வம்புக்குச் சொல்லவில்லை வடவேங்கடத்தானே!

 வந்து குவிகின்ற பொருள் உனக்கு ஏன்?

வறியார்க்கே தந்துவிடு!

என்றும் கூறுகிறார்.

 

கடவுள் எனக்குக் கடன்காரன் எனக் கூறும் கவிஞர் ஏன் அவ்விதம் கூறுகிறார்?

கடவுளே, நீ எனக்குக் கடன்காரன், அருள் கதவை அடைத்த கொடுங்கோலன்!”

என்று கடவுளிடமே அவர் கூறுகிறார்.

எனக்குத் தானாடா நீ கடன்காரன்? இங் இருப் போர்க்கெல்லாம்தான் கடன்காரன் என்றும் சொல் கிறார். அது எப்படி?

உனக்கும் உதவினேன் உண்டியல் பெயரால்

உதவிக்கு உதவி உதவாச் செயலால்

நீ எனக்குக் கடன்காரன்

என்கிறார்.

பிறந்தது முதலாய் இறந்தநாள் வரைக்கும், பெரும் பெரும் அனுபவம் பெற்றுவிட்டேன்; வரம் அருள்வாய் என வணங்கி விட்டேன். வந்ததும் பறித்தாய் நொந்து கெட்டேன் என்று பாடுகிறார் கவிஞர்.

உலகைப் படைத்தவன் நீயே என்றால்

உயிர்களுக் கெல்லாம் கடன்காரன் நீ!

என்றும் கடவுளுக்கு நினைவுபடுத்துகிறார்.

(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்