ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) – தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.)
2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)
வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும்
வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக
வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண்
வாயடியும் கையடியும் கொண்ட பேரை
மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி
மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய்க்
கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம்
கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்!
பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின்
பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை
அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ
அரும்புமீசை முறுக்கிடுவோம்! கொடுமை எனறால்
எஞ்சாமல் எரியிடுவோம்! தமிழே ஆளும்
எழில்நாட்டை ஆக்கிடுவோம்! வேற்றுமைதான்
கிஞ்சிற்றும் இல்லாமல் செய்ய இன்றே
கிளர்ந்தெழுங்கள் இளைஞர்களே அஞ்ச வேண்டாம்.
என்ன நாம் செய்துள்ளோம்; முறையாக இவ்வுலகு, நம்மையும் நம் மொழியையும் அறிவதற்காக நாம் என் செய்தோம் என்று சிந்திக்கச் சொல்கிறார் கவிஞர்.
முப்பது நாட்டின்மேல் முன்சென்று நம் தமிழர்
செப்பரும் வாழ்முறை சேர்ந்துள்ளார்-இப்படியாய்ச்
சேர்ந்தாரைச் சேர்த்துத் திசைத்தமிழர் ஒன்றாக்கி
தேர்ந்த ஒற்றுமை செய்தோமா?
என்ற கேள்வியை முன் வைத்து அவரே விடையும் உரைக்கின்றார்.
அங்கங்கே சென்றே அவரவர் பாடாக்கி
தங்கள் சுயநலமே தான்முனைந்தார்-எங்கணுமே
வைய மெலாம் வாழ்ந்தும் வகைமோசந் தன்னலத்தால்
நையச்செய்தாரே நலம்.
ஆகவே, உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒருங்கி ணைப்பது முதன்மைக் கடமையாகும் என்று உணர்ந்த கவிஞர், பெரிதும் முயன்று, 1977-ஆம் ஆண்டில் ‘பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்’ அமைத்தார். உலகின் பல நாடுகளிலும் இம்மன்றத்தின் கிளைகள் அமைத்து நன்கு செயல் படச் செய்தார். கவிஞரின் உலகளாவிய தமிழ்ப் பணி இதுவாகும்.
பன்னாட்டுத் தேர்தமிழர் பாங்குறவை நாம் வளர்க்க
இந்நாளில் மன்றம் எடுத்தேனே-தன்னலம்
கிஞ்சிற்றும் இல்லை கிழமை தவறவில்லை
வஞ்சக மில்லை மனம்
என்று இப்பணி பற்றி அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
‘உலகத் தமிழர் உணர்வுகொள்!” என்று முழக்கம் செய்யும் கவிஞர், இழநத புகழைத் தமிழினம் மீட்டு வளமான, கீர்த்தி மிக்க, வருங்காலத்துக்கு வழி அமைக்க வேண்டும் என்று ஊக்குவித்து, உற்சாகப் படுத்துகிறார். அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
நல்ல இதழ்