ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9)
2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)
‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத் தக்கது.
வண்டமிழ் விதைக்கின்றேன்-பொல்லார்
வசைகள் பொறுத்தே மலரும் எண்ணம்
வளர்த்துக் களிக்கிறேன்.
ஏக்கப் பெருமூச்சேற்றே தோளில்
என்பணி தொடர்கின்றேன்-மேன்மை
ஆக்கம் விளைக்கும் அறநெறிப் பாதை
ஆர்த்தே நடக்கின்றேன்.
என்மொழி என்னினப் பெருமை காட்ட
எங்கும் செல்கின்றேன்-ஈனர்
புன்மொழி பொறுத்தே புனர்வாழ்வமைக்க
புகுவழி வெல்கின்றேன்”
“என் பயணங்கள் ஏதோ உல்லாசமாக நாடு பார்க்க வேண்டும் என்று செல்லும் உல்லாசப் பயணமல்ல இலக்குகளையும் நம் மொழி இனமேம்பாட்டையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டும் ஒப்பற்ற நோக்கங்களுக்காகச் செல்லும் இலட்சியப் பயணமாகும் என்றும் கவிஞர் அறிவுறுத்துகிறார்
. “நுகத்தடியைக் கழுத்தினிலே மாட்டிக் கொண்டு
நோய் தரும் பேர் துன்பத்தைத் தாங்கி நின்று
அகத்திலெழும் உணர்ச்சி யெனும் கலப்பை கொண்டு
அறிவென்னும் உழவனாகித் தமிழ்நிலத்தை.
மகத்துவத்தின் பிறப்பிடமாய் ஆக்க ஓடும்”
பெருங்கவிக்கோவின் இலட்சியப் பணிகளை தமிழ் நாடும் தமிழ் இனமும் உணர்ந்து போற்றும் நன்னாள் எந்நாளோ?
அதுபற்றி எல்லாம் எண்ணிப் பார்க்க நேரம் இல்லாது, கருமமே கண்ணாகத் தமிழ்ப் பணி புரிந்து கொண்டிருக்கும் கவிஞர் சேதுராமனின் மனம் அபூர்வ மாக எப்போதாவது பெருமிப் பெருமூச் செறிவதும் இயல்பாக இருக்கிறது. அவரும் மனிதர் தானே? “அல்லும் பகலும் அடித்துப் புரண்டு தமிழ்ப் பணி செய்தாலும் அறிந்து கொள்பவர்கள் மிகமிகக் குறைவு. செல்வாக்குள்ள இதழ்கள், எத்தனை முறை நாம் உலகம் சுற்றினாலும் ஏறெடுத்துப் பார்க்கவும் அறிந்து கொள்ளவும் எண்ணமிலாத இருண்ட மனமுடையனவாக உள்ளன. நல்ல தகுதியை, வெல்லும் முயற்சியோடு உருவாக்கிக் கொண்டாலும், தமிழ் மண் ஊமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. உயரிய செயலாற்றல் மிக்கவர்களை இனங் கண்டு ஊக்குவிக்கும் பொறுப்பு. அரசுக்கும், சமுதாயத்துக்கும் உண்டு. இதனை இவ்விரு தரப்பினரும் சரியாக நிறைவு செய்யாத நிலை. இத்தகைய மனப்புழுக்கங்களில் துடித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்’ என்று “அவர் தனது உள்ளத்தின் உணர்வை ‘கெய்ரோவில் பெருங்கவிக்கோ’ என்ற நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“எழுதும் கவிஞர் மட்டுமல்ல பெருங்கவிக்கோ எழுதிய எழுத்துகளுக்குச் செயல் வடிவம் தரும் தமிழ்’ மறவராகவும் திகழும் வா.மு.சே.வை வையகத் தமிழர்கள் உணர்ந்து, ஒல்லும் வகையில் உதவுவது தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும் நன்மையை விளைக்கும்” என்று அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் (‘தமிழ் நடைப் பாவை அணிந்துரையில்) கூறியிருப்பது உண்மையே உயர்வு நவிற்சியன்று. .
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply