ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியத் துணைக்கண்டத்தில் மாநில ஆளுநர் என்பவர் நடைமுறையில் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேயான மாநில நலம்நாடும் தூதுவராக இருப்பதில்லை. மத்திய அரசின், சொல்லப்போனால் மத்திய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக, ஏவலராக, எடுபிடியாக, மத்திய அரசின் சார்பில் மாநில அரசை ஆட்டுவிக்கும் முகவராக இருக்கின்றார் என்பதே அரசியலாரின் – அனைவரின் கருத்தாகவும் உள்ளது. இதற்கு விதிவிலக்கானவரல்லர் தமிழகப் பொறுப்பு ஆளுநர். பொறுப்பு ஆளுநர், பொறுப்பான ஆளுநராக இல்லாமல், தன் முதலாளியான மத்திய ஆளுங்கட்சியின் கட்டளையை நிறைவேற்றும் பணியாளராக உள்ளார். இந்த வகையில் அவரின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்!
தமிழக மாநிலத்தில் நிலவும் குழப்பமான சூழலில் தன் சிந்தனைக்கு வேலை கொடுக்காமல், தனக்கு இடப்படும் பணிகளை நிறைவேற்றும் அவரின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்! ஒரு முறை, இருமுறை அல்ல! பன்முறை அவர் தன் நேர்மையை மெய்ப்பித்திருக்கின்றார். அவற்றின் உச்ச நிலைதான் அண்மையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் அவரைச் சந்தித்து மாநில முதல்வரின் மீதான நம்பிக்கை யின்மையைத் தெரிவித்த பொழுது அவர் நடந்து கொண்டுள்ள முறை.
கலைஞர் கருணாநிதி தலைமையிலான மாநில அரசைக் கலைக்குமாறு மத்தியஅரசு(தலைமையர் சந்திரசேகர்) அறிக்கை கேட்டபொழுது துணிந்து மறுத்தவர் சுருசித்து சிங்கு பருனாலா (Surjit Singh Barnala). அவரைப் போன்ற சிலரை நாம் மறப்பதற்கில்லை. என்றாலும் பொறுப்பு ஆளுநரைப்போன்றே பலரும் உள்ளனர். இவர்களையும் நாம் மறப்பதற்கில்லை. பருனாலா அறிக்கை தர மறுத்ததால் அவரை மாற்றினர். அவ்வாறு மத்திய அரசிற்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதற்காக மத்திய ஆளுங்கட்சி எள்ளென்றால் எண்ணெயாகச் செயல்படும் பொறுப்பு ஆளுநரின் நேர்மையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே தொழிலாளியின் கடமை! அதைச்சரிவரச் செய்யும் ஆளுநரின் நேர்மை பாராட்டிற்குரியது என்பதில் ஐயமில்லை!
பொதுவாக எதிர்க்கட்சியினர் அரசிற்கு எதிரான முறையீட்டை அளித்தால் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்தான். ஆனால், ஆளுங்கட்சியிலேயே ஒரு சாரார் ஆளும் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என்று கருத்து தெரிவிக்கும் பொழுது உள்கட்சிச் சிக்கல் என்று எப்படி ஒதுங்க முடியும்? மத்திய அரசிற்கு வேண்டாதவர் இருந்தால், விரைந்து செயல்பட்டுக் கலைக்கலாம். ஆனால், அடிவருடிகள் இருப்பின் – மன்னிக்கவும் அன்பர்கள் இருப்பின் – அவ்வாறு செய்ய இயலாதே!
உள்கட்சிச் சிக்கலாக இருந்தால் ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும். ஆளுங்கட்சித்தலைவரைக் கூப்பிட்டு, “உமக்கு எதிராக உம் கட்சியினரே நம்பிக்கையின்மையைத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றக் கட்சியைக் கூட்டி, பெரும்பான்மை ஆதரவு இருப்பதை மெய்ப்பியுங்கள்” என்று சொல்லியிருக்க வேண்டும். அதுதானே முறை!
ஆனால், அவ்வாறு சொன்னால், அன்பர் ஆட்சி கலைந்து விடுமே! அதனால் தன் பதவிக்கும் ஊறு நேருமே! எனவே, மத்திய ஆளுங்கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எதிர்ப்புக் குரலை அடக்க முயல்கிறார். இதன் மூலம், தான் மத்திய அரசு காலால் இடும் பணிகளைத் தலையால் செய்யும் நேர்மையாளர் என்பதை மெய்ப்பித்து உள்ளார் என்றுதானே சொல்ல வேண்டும்! மாறாக அவரை வைவதால் என்ன பயன்?
ஆளுநர் நேர்மையால் தமிழகத்தின் நிலை தடுமாறுகின்றது; அலமருகின்றது; தேய்கின்றது; சின்னாபின்னமாகின்றது! அவ்வளவுதானே! போகட்டும்! அவரின் நேர்மைதானே முதன்மையானது! அதனை அவர் காப்பாற்றட்டும்! தமிழ்நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும்!
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 201, ஆவணி 11, 2048 / ஆகத்து 27, 2017
கிழித்து எறிந்து விட்டீர்கள் ஐயா! அருமை!