ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல!
மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர்.
தில்லி ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மூலம் தீர்வு பெற்றுள்ளது. இருப்பினும் அங்குள்ள துணைநிலை ஆளுநரின் போக்கால் விடியவில்லை.
மாநில அமைச்சரவை அதிகாரத்தை முறியடிக்க எந்தத் தற்சார்பான அதிகாரமும் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்று தலைமை நீதிபதி தீபக்கு மிசுரா, நீதிபதிகள் கன்வில்கர், சிக்கரி, சந்திரசூடு, அசோக்கு பூசன் (Dipak Misra, Ajay Manikrao Khanwilkar, Arjan Kumar Sikri, Dhananjaya Y. Chandrachud, Ashok Bhushan) ஆகியோர் அமைந்த உச்சநீதி மன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்படியானால் அப்பதவியிலும் குறைநிலை அதிகாரம் கெணாண்ட புதுவை துணைநிலை ஆளுநருக்கும் இது பொருந்தும் என்பதுதான் இயற்கை.
புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் இதுவரை இருந்து வந்த மோதலுக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி இடும் என முதல்வர் நாராயணசாமியும் ஆள்வோரும் மக்களும் கருதினர். ஆனால், துணை நிலை ஆளுநர் கிரண் பெசவாரியா என்னும் கிரண்பேடி அதிகார ஆசையில் மூழ்கிப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.
இந்திய அரசியல் யாப்பு, பிரிவு 239 அ- புதுச்சேரிக்கு உரியது என்றும் பிரிவு 239 அஅ தில்லிக்குரியது எனவும் இருவேறு பிரிவுகளில் இவை வருவதால் தில்லிக்குரியது புதுவைக்குப் பொருந்தாது என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி) மறுதலிக்கிறார்.
பரப்பளவில் பார்த்தால் சென்னைப் பெருநகரைத்தவிர தமிழ்நாட்டிலுள்ள எந்த மாவட்டத்தையும் விடப் பெரியது அல்ல. பெரும்பாலான தனியொரு மாவட்டப்பரப்பில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. சிறிய பரப்பளவு நிலத்தின் துணை ஆளுநராக இருந்து கொண்டு பேரதிகாரத்தைச் செயல்படுத்தும் ஆசைத்தீயில் தன்னைத் தள்ளிக் கொண்டார். இதன் விளைவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும் நியமனம் பெற்ற இவருக்குமான மோதல் போக்கு.
இந்திய ஒன்றியப் பகுதிகள் மொத்தம் 7. இவற்றுள் தில்லி, புதுச்சேரி ஆகிய ஒன்றியப்பகுதிகளில் மட்டும் தேரந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் உள்ளது. எனவே, இங்கே அதிகார மையம் மக்கள் மன்றத்தைச் சார்ந்தே அமையும். இவற்றுள் தில்லியானது தேசியத் தலைநகர ஆட்சிப் பரப்பு (National Capital Territory) என அழைக்கப்படுகின்றது. எனவே, இதன் துணை நிலை ஆளுநருக்குப் புதுவையின் துணைநிலை ஆளுநரை விடக் கூடுதலாக அதிகாரம் உ்ள்ளது. இதனைத் தனக்குச் சார்பாக எதிர்மறையாக விளக்கி இத் தீர்ப்பு பொருந்தாது என்கிறார்.
மதிப்பிற்குரிய கிரண் பெசவாரியா என்னும் கிரண்(பேடி) அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எனவே இயல்பாகவே அரசியல் ஈடுபாடு இவருக்கு இருப்பதில் வியப்பில்லை. பொதுப்பணி என்பது தொண்டு; தொண்டு என்பது பயன்கொடுக்கவே! பயன் கொள்ள அல்ல! (Public service is service and service is to serve, not take.) என்னும் நல்ல முழக்கத்தையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். காவல் துறையில் பல்வேறு உயர்நிலைகளில் பணியாற்றி நற்பெயரும் எடுத்துள்ளார். இருப்பினும் விருப்ப ஓய்வு பெற்றுப் பாசகவில் சேர்ந்த பொழுது இவரைப்பற்றிய மறு எண்ணமும் பலருக்கு ஏற்பட்டது. தில்லி முதல்வராகக் கனவு கண்டு மக்கள் அக்கனவைச் சிதைத்த பின்னர் புதுவையின் துணை நிலை ஆளுநராக ஆனார். “ஆட்டிற்கு வாலை அளந்து வைத்தவன் அறிவாளி” என்பர். அதுபோல் இவருக்கு மிகச் சிறிய ஒன்றியப் பகுதியின் துணை நிலை ஆளுநர் பதவிதான் வழங்கப்பெற்றது. இவர் அமைச்சரவையுடன் இணைந்து வழிகாட்டி மக்களுக்குத் தொண்டாற்றினால் நற்பெயர் விளைந்திருக்கும். மாறாக அதிகாரப்பசி கொண்டவர்போல் இவரது செயல்பாடுகள் அமைவதால் இதுவரை ஈட்டிய நற்பெயருக்கும் களங்கமே வருகின்றது. இவரது இயல்பான பணிகளும் ஊடக வெளிச்சத்தில் பெரும் பிம்பமாகக் காட்டப்பட்டதோ என்னும் ஐயம் வருகிறது.
அடக்கி ஆளும் எண்ணம் கொண்டவர் எப்படி மக்களை அரவைணத்துச் செல்வார் என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். போனது போகட்டும். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் கருத்திற்கிணங்கவே செயல்பட வேண்டும் என 535 பக்கத் தீர்ப்பை உச்சநீதிமன்ற ஐவர் ஆயம் வழங்கிய பின்னும் அதிகார மோகத்தைக் கைவிட மனம் வரவில்லையே! அல்லது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் சொல்லிப் பார்க்கிறாரா?
சட்ட மன்றம் இல்லாத ஆட்சிப் பொறுப்பாளர்(Administrator) பதவி மட்டும் உள்ள ஏதேனும் பிற ஒன்றியப் பகுதிக்கு இவர் மாற்றல் கேட்டுச் சென்றால் அங்கே மக்கள்மன்றத் தலையீடு இன்றித் தான் விருமபியவாறு அதிகாரம் செலுத்தலாம். தான் விரும்பும் முன்முறை(மாதிரி)ப் பகுதியாகக்கூட மாற்றலாம். அவ்வாறில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் அமைச்சரவையும் உள்ள பகுதியில் துணை நிலை ஆளுநராக இருந்து கொண்டு மோதல் போக்கைத் தொடருவது அவருக்கு அழகல்ல!
இவரது ஆய்வுப்பணிகளும் அதிகாரிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகளும் அமைச்சரவை அல்லது முதலவரின் கருத்துகளுக்கு எதிரான செயல்பாடுகளும் கோப்புகளைப் புறக்கணித்தல் அல்லது புதிய கோப்பை உருவாக்கல் போன்ற அலுவலக நடைமுறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்பொழுது தேர்ந்தெடுக்கப்படாத அரசு ஒன்றை நடத்துவதும் வல்லமையாளர் போன்ற தோற்றத்தையோ இடைக்கால மன மகிழ்வையோ தரலாம். ஆனால், காலப்போக்கில் வரலாற்றில் அழியாப்பழியையே தரும் என்பதை அவர் உணர வேண்டும்.
மத்திய ஆட்சியின் துணை இருப்பதால் மரபுமீறி. தன்நிலைக்குத் தாழ்வான பணிகளை ஆற்றுவது இவரது பணிகளுக்குச் செம்மை சேர்க்காது. மக்கள் நலப் பகைவர் என்னும் பெயர் வாங்கிப் பயன் என்ன? மக்கள் உள்ளங் கவர்ந்த மங்கையர்க்கரசி என்னும் பெயரல்லவா வாங்க வேண்டும்! எனவே, மாண்பமை துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி) இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொண்டு ஆட்சியாளருடன் இணை்ந்து மக்கள்பணி யாற்றுவாராக!
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (திருவள்ளுவர், திருக்குறள் 965)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை: அகரமுதல: ஆனி 17-23, 2049 / சூலை 01-07, 2018
Leave a Reply