ilakkuvanar_and_tholkappiyamattai01

தொல்காப்பிய மொழிபெயர்ப்பு:

தமிழ்ப்பெருமக்களுக்குப் பெருமை நல்கும் பெருஞ்செயல்

பேராசிரியர் சி.இலக்குவனாரின்

தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப்

பேரறிஞர் அண்ணா அணிந்துரை

 

                இன்றமிழ்ப் புலமைமிகு இலக்குவனாரின் இவ் வாராய்ச்சி நூலை நோக்கியவுடனே விழுமம் எனும் எழிற்றமிழ்ச் சொல்லே எவருடைய உள்ளத்திலும் இயல்பாக எழும். வினைநயங் கெழுமிய இவ்வாராய்ச்சி வியப்பூட்டுகின்ற ஓர் இலக்கியக் கருவூலம் எனினும் மிகையன்று. பன்னூற் புலமையுடைய பண்டாரகர் இலக்குவனார்க்கு இஃதோர் எளிய வெற்றியேயாம்.

 

                இஃது அறப்பழமையும், அழியா அழகும் நனி உயர்வும் பொலியும் நற்றமிழ் இலக்கணப் பேழையாகிய ஒல்காப் புகழ்த் தொல்காப்பியத்தின் மொழி பெயர்ப்பு மட்டுமன்று; பண்டாரகர் இலக்குவனார் அவர்கள் இப்பைந்தமிழ் ஆராய்ச்சி மூலம் பழந்தமிழ் நாட்டின் உண்மை நிலையினை ஒரு சொல்லோவியமாகவே தீட்டிக் காட்டியுள்ளார் எனலே சாலும்.

 

                தமிழ்ப் பழங்குடி மக்களாகிய நமக்கு நம் மொழியின் இலக்கியப் பரப்பை உள்ளிய அளவிலேயே பெருமகிழ்ச்சி கொள்வதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அத்தகு பேரிலக்கியங்களின் அடிக்கல்லே தொல்காப்பியமெனும பழந்தமிழ் இலக்கணமாம்.

 

                மொழியின் அடிப்படைக் கூறுகள் பொதுளிய தொல்காப்பியம் போன்ற இலக்கண நூலை மொழிபெயர்ப்பது என்பது எளிய செயலாமோ‚ அரிதினும் அரிதே‚ நுண்மாண் நுழைபுலமும், அ‡கி அகன்ற அறிவுக் கூர்மையும், ஆய்வுத் திறலும் பெற்றவராலன்றோ இத்தகு பெருஞ் செயலை ஆற்றவொல்லும்‚ அத்தகைய பேராற்றலைப் பெருமளவில் பெற்றிருக்கின்ற பெற்றியைப் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் இவ்வாராய்ச்சிக் கருவூலம் மூலம் தெற்றெனக்காட்டியுள்ளார்.

 

                பண்டாரகர் இலக்குவனார் அவர்களைத் தமிழுலகம் ஏற்கெனவே நன்கறியும். அவர் ஓர் அரிய ஆராய்ச்சியாளர்; அஞ்சா நெஞ்சுடை அருந்தமிழ்க் குரிசில்; நேர்மையின் நிலைக்களன். இந்நூல் அன்னாரது பல்லாண்டுக் கல்விச் செறிவையும் இலக்கியத்திறனாய்வின் தெளிவையும் ஒப்பு நோக்கும் கருத்தோட்டத்தையும் தெளிவுறக்காட்டும் நல் ஆடியாகவே மிளிர்கிறது.

 

                அருந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் அளிப்பதன் தலைக்கீடாகப் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் பெருந்தொண்டாற்றி யிருக்கிறார் என்றே கூறல் வேண்டும். ஆங்கிலம் அறிந்த மக்கள் பழந்தமிழ்நாட்டின் உயர்வினை உள்ளபடி உணர்தற்கும், உணர்ந்த வழி பாராட்டற்கும் இந்நூல் பெரிதும் துணைபுரியும் என்பது வெள்ளிடை மலை.

 

                தொல்தமிழ் இலக்கணப்பெட்டகமாம் தொல்காப்பியத்தை எண்ணிப் பெருமையும் சிறப்பும் பெறுகின்ற பெரும் பேற்றினைத் தமிழ் மக்கள்; பெற்றிருக்கிறார்கள். இவ்வுலகில் எண்ணற்ற நாடுகள் அவற்றின் மொழிகளைச் செம்மைப்படுத்த முனையுங் காலத்திற்கும் பன்னூறாண்டுகட்கு முன்னரே பைந்தமிழ் மக்கள் எத்தகு கால உச்சியை எய்தியிருந்தார்கள் என்பதை அறுதியிட்டுத் தெற்றெனப் புலப்படுத்தும் ஆற்றலினை ஆங்கிலப் பேரறிஞர்கட்கு இவ்வாராய்ச்சி நூல் நல்கி ஆன்ற துணை நிற்கும் என்பது தெள்ளிது.

 

                பொதுவாக இலக்கிய மாணவர்களும் குறிப்பாகத் தமிழ் மக்களும், தண்டமிழ்ப் புலவர் பெருந்தகையாகிய இலக்குவனார்க்கு நன்றி செலுத்தப்பெரிதும கடப்பாடுடையர் என்பதை உரைக்க வேண்டுவதின்று.

 

                இவ்வாராய்ச்சி நூற்கண் காணக் கிடக்கின்ற பல்வேறு கருத்துகளை நிரல் படுத்துகின்ற ஆற்றல் என்பால்இன்று. உள்ளத்தே எழுகின்ற பாராட்டுணர்ச்சிகளை மிகச் சுருக்கமாகப் பாங்குற வெளிக்காட்டும் வழியினையும் அறியேன். இப்பெரும் ஆராய்ச்சி, தமிழ்ப் பெருமக்களுக்குப் பெருமை நல்கும் ஒரு பெருஞ்செயல் என்று உரைப்பதிலே நான் நிறைவெய்துகிறேன். இன்றைய தமிழின் மறுமலர்ச்சியாராய்ச்சி கண்டு பாராட்டும் பண்புடையோர், இவ்விலக்கியப் பெருநூலின் நற்பயனை நனிமுறையில் எய்துவர் என்றே நான் நம்புகிறேன்.

 

                தொல்தமிழ் இலக்கணமாம் தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் வழங்கியுள்ளமைக்காக, வண்டமிழ்ப் புலவராம் பேராசிரியர் இலக்குவனார்க்கு என் உளமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

 

anna04கா.ந. அண்ணாதுரை கலை.மு., நா.உ.

மொழிபெயர்ப்பாளர் : பேரா. வீ.முத்துச்சாமி

குறள் நெறி 15.1.65 / தை 02, 1886