இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல்
பதிப்புரை 1/2
ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், ஈரத்தமிழ், உரையார் தமிழ், உரையுறை தமிழ், ஏரினார் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்டமிழ், ஒண்தீந் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குலமுத்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத் தமிழ், கொழுந்தமிழ், சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சந்த நிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகிய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந் தமிழ், சீர்மன்னு செந்தமிழ், சீர்மிகுந்த தமிழ், சீரின்மலி செந்தமிழ், செஞ் சொற்றமிழ், செந்தண்டமிழ், செந்தமிழ், சொல்லார் தமிழ், ஞாலமிக்க தண்டமிழ், ஞானத்தமிழ், தகைமலி தண்டமிழ், தண்ணார் தமிழ், தவமல்கு தமிழ், தன்னார்வம் செய்தமிழ், திருநெறிய தமிழ், திருமுத்தமிழ், தீந்தமிழ், துய்ய தமிழ், துளங்கில் தமிழ், தூய தமிழ், தெய்வத் தமிழ், தென்தமிழ், தென்தீந்தமிழ், தென்னன் தமிழ், தேக்குறு தமிழ், தேமரு தமிழ், தேன் உறை தமிழ், தேனேரார் தமிழ், நல்லவாய இன்றமிழ், நல்லிலைத் தமிழ், நலங்கொள்தமிழ், நற்றமிழ், நிகரில்லன தமிழ், படமலி தமிழ், பண்ணாருந் தமிழ், பண்பட்ட செந்தமிழ், பந்தமார் தமிழ், பரவார் தமிழ், பரவிய தமிழ், பலமிகு தமிழ், பழுத்த செந்தமிழ், பாரினார் தமிழ், புகழ் நின்ற தமிழ், பூந்தமிழ், பெருந்தமிழ், பைந்தமிழ், பொய்யாத் தமிழ், பேரியல் இன்றமிழ், மருவிய தமிழ்,மறையிலங்கு தமிழ், மறை வளரும் தமிழ், முடிவிலின் தமிழ், முத்தமிழ், மூவாத் தமிழ், மேன்மைத் தமிழ், வண்டமிழ், வளமார் தமிழ், வியன் தமிழ், விலையுடை அருந்தமிழ் முதலிய தமிழைக் குறிக்கும் சொற்கள் தமிழின் வளத்தையும் சிறப்பையும் அறியச் செய்கின்றன. இவை போல் பழந்தமிழ் என்பது தமிழின் பழமையைப் புலப்படுத்துகின்றது. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் தொன்மைச் சிறப்பு மிக்க தமிழின் வரலாற்றுக்கு முற்பட்ட பழந்தன்மையையும் தாய்மையையும் வளமையையும் நடுநிலையுடன் ஆராய்ந்தும் மொழியியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டும் தமிழ்க்காப்புத் தளபதி செந்தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள், பழந்தமிழ் என்னும் இந்நூலைச் சிறப்பாகப் படைத்துள்ளார்கள்.
மொழியின் சிறப்பு முதலான 11 தலைப்புகளில் வகுத்தும் தொகுத்தும் மொழிக் குடும்பங்கள், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப் புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு, தமிழ் மறுமலர்ச்சி ஆகியன குறித்துச் சீரான சிறப்பான நடையில் நமக்கு இந்நூலைப் பேராசிரியர் அவர்கள் அருளியுள்ளார்கள்.
மொழிகளின் வரிவடிவ வரலாறு, தமிழ் வரிவடிவத்தைப் பின்பற்றி ஆரிய மொழி தன் எழுத்தமைப்பை உருவாக்கிக் கொண்டது, மொழி நிலைகள், ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ள பாங்கு, முதலானவற்றை மொழிச்சிறப்பு தலைப்பில் குறிப்பிடும் பேராசிரியர் அவர்கள், ஒரு நாட்டில் வழங்கும் மொழி அந்நாட்டில் எல்லா நிலைகளிலும் பயன்படு மொழியாக இருந்தால்தான் அம் மொழி, காலத்தை வென்று நிலைத்து நிற்கும் என்பதையும் சுட்டிக்காட்டி நம் நாட்டில் தமிழ் அனைத்து நிலைகளிலும் ஆட்சி செய்ய வேண்டியதன் இன்றியமை யாமையை நமக்குப் புரிய வைக்கிறார்.
மொழிகளும் மொழிக்குடும்பங்களும் என்னும் தலைப்பில் மொழிக் குடும்ப வகைப்பாட்டையும் அவற்றின் கீழ் வரும் மொழிகளையும் மொழி பேசுவோர் எண்ணிக்கையையும் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலப் பணிப்பெண் தேவை என்பதற்காக வீட்டுத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கலாமா என்று வினா எழுப்பி, தமிழ் மொழியின் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமிழ்க் குடும்ப மொழிகளைச் சித்தியன் குடும்பத்தில் சேர்த்து அறிஞர் காலுடுவல் வரையறை செய்தது தவறென்றும் இது தனிக்குடும்பத்தைச் சார்ந்தது என்றும் பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார். ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை உள்ளத்தில் பதியும் வண்ணம் விளக்கித் தமிழே உலக மொழிகளின் தாய் என்று முடிக்கிறார்.
பழந்தமிழ் என்னும் தலைப்பில் எகிப்து, அசீரியா, பாபிலோனியா, பெரிசியா, சீனா, பாலத்தீனம், கிரேக்கம், உரோமம் முதலிய நாடுகளின் இலக்கியத் தோற்றக் காலத்தையும் தமிழ் நிலமாகிய ஆரப்பா, மொகஞ்சதரோ நகர மக்களின் மொழியாகிய தமிழின் இலக்கியத் தோற்றத்தையும் ஆரியம் வருவதற்கு முன்னர் இந்தியக் கண்டம் முழுவதும் தமிழே வழங்கி வந்தது என்பதையும் சிந்து வெளிப்பகுதிக் கல்வெட்டுகளில் காணப்படும் சொற்கள் யாவும் தமிழே என்பதையும் ஆரியம் கடன் கொண்டுள்ள தமிழ்ச் சொற்களின் ஒரு பகுதியையும் ஆரியம் வரும் முன்பே செழித்துத் தழைத்திருந்த தமிழ் இலக்கிய வளம் பற்றியும் பழந்தமிழ்ச் சொற்களில் ஏற்பட்ட மாற்றங்களைத், தமிழ்மொழி மறைந்ததாகக் கருதக் கூடாது என்பதையும் தக்க ஏதுக்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் விளக்கியுள்ளார்.
மொழி மாற்றங்கள் என்னும் தலைப்பில் இலக்கணக் கூறுமாற்றம், சொற்பொருள் மாற்றம், சொல் வடிவ மாற்றம் என மூவகையாகப் பகுத்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார். இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னரே பல்வகையாலும் உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் பெற்றுச் சிறப்பாகத் தமிழினம் வாழ்ந்து வந்ததை ஆரிய நூல்களாலேயே நன்கு அறிய முடிகிறது என்பதை விளக்கும் பேராசிரியர், பிற மொழிச் சொற்களைத் தேவை கருதிப் பிற மொழியினின்று கடன் வாங்குதல் குற்றமின்று எனவும் ஆனால், கடன் பெறுங்கால் வரையறைக்குட்பட்டுக் கடன்பெறல் வேண்டும் என்றும், கடனைக் கடனாகவே என்றும் கருதுதல் வேண்டும் என்றும், ஒல்காப் புகழ் தொல்காப்பியர் அறிவுறுத்தும் பாங்கில் செய்யுள் ஈட்டச் சொல் நூற்பா அமைந்துள்ள சிறப்பையும் விளக்குகிறார். மொழிநூலறிஞர் மரியாப்பாய் (Mario Pei) ஆங்கில மொழி வளர்ச்சிக்காகக் கூறுவது தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பொருந்துவதை மேற்கோள் மூலம் விளக்கித் தமிழ் பேசத் தெரிந்ததாலேயே அறிஞர் என எண்ணாமல் தமிழை நன்கு கற்றறிந்தவர்களையே துணையாகக் கொள்ள வேண்டும் எனச் சொல்லாமல் சொல்லுகிறார்.
பழந்தமிழ்ப் புதல்விகள் என்னும் தலைப்பில், தமிழ்ச் சேய்மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு, துதம், கோதம், கோண்டு, கூ, ஒரியன், இராசுமகால் முதலான மொழிகளின் தோற்றத்தை அறிஞர் காலுடுவல் அவர்களின் ஆய்வுத் துணையுடன் விளக்குகின்றார். அதே நேரம், தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றை அறிஞர் காலுடுவல் அறியும் வாய்ப்பினைப் பெறாமையால் சில தவறான முடிவிற்கு வந்ததைச் சுட்டிக் காட்டித் தமிழின் தாய்மையை உணர்த்துகிறார்.
பழந்தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பில் சங்க இலக்கியச் சிறப்பையும் ஆரியர் வருகைக்கு முன்னரே வாழ்ந்த 268 அறிஞர்களின் 885 பாடல்கள்தொகுக்கப்பட்டுள்ள விவரத்தையும் விளக்கி அமைவதுடன் ஆரியச் சார்புடன் அறிஞர் நீலகண்ட சாத்திரியார் தெரிவித்துள்ள கருத்துகளுக்கும், வேண்டுமென்றே இலக்கியக் காலத்தைப் பின்னுக்குத் தள்ளும் தமிழ்ப்பகைஞர் வையாபுரியின் கருத்துகளுக்கும் நடுநிலை அறிவியல் முறையிலான ஆய்வு நோக்கில் மறுப்புகளைத் தெரிவித்து, அறிஞர் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கிய இலக்கண நூல்கள் இருந்தமையைத் தெளிவுபடுத்துகிறார்.
(தொடரும்)
சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply