(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)

thalaippu_ilakkuvanarinpazhanthamizh_maraimalai7

எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.

  தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும் ஔவும் ஒலிக்கும் முறையைக் கூறுவதற்கு வேற்றுமொழிநூலின் துணையை நாடவேண்டியது எற்றுக்கு’ (மே.ப. ப.153) என வினவுகிறார் பேராசிரியர்.

  இங்கேயும் ‘பிராகிருத பிரகாசா’ நூலிலிருந்துதான் தொல்காப்பியம் பெற்றுள்ளது என வையாபுரியார் கருதுகிறாரே தவிர, தொல்காப்பி- யத்திலிருந்து பிராகிருத பிரகாசா பெற்றிருக்கக்கூடும் என எண்ணிப்பார்க்க மறுக்கிறார்.

  பிராகிருத இலக்கண நூலாரைக் கீழைக் குழுவினர் என்றும் மேலைக்குழுவினர் என்றும் இருவகையாகப் பிரிப்பர்.  புருசோத்தமர், கிரமதீச்வரர், இராமசர்மர், மார்க்கண்டேயர் ஆகிய கீழைக்குழுவைச் சேர்ந்தவர்களுள் ஒருவரே வையாபுரியார் குறிப்பிடும் வரருசி என்பது இங்குக் குஇறிப்பிடத் தக்கது.  ஏமச்சந்திரர், சிம்மராசா, திரிவிக்கிரமர், இலக்குமிதாரா ஆகியோர் மேலைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.   அனைவருள்ளும் காலத்தால் முற்பட்ட சந்தர் இயற்றிப் பாமகரால் உரைவகுக்கப்பட்ட ‘பிராகிருத லட்சணம்’ தொன்மைவாய்ந்த பிராகிருத இலக்கணநூலாகும்.  காலத்தால் முற்பட்ட இந்நூலை விடுத்துத் தொல்காப்பியர் ‘பிராகிருதப்பிரகாசா’ வை மொழிபெயர்க்கக் காரணம் என்ன? அந்த இரண்டு நூற்பாக்களுக்காக வேறொரு மொழியின் இலக்கணநூலை நாடுமளவு தமிழில் இலக்கண வளம் குறைந்திருந்ததா? என்பன போன்ற வினாக்களுக்கு வையாபுரியார் கூற்றில் விளக்கமில்லை.

 

  மேலும், தொல்காப்பியம் எழுத்து, சொல் ஆகிய இரு படலங்களும் மிகச் செம்மையாக, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்திகள் முறைமைப் படுத்தப்பட்டு நூற்பாக்களின் வரிசைமுறையை மாற்றிச் சிந்திக்கவேண்டிய தேவையின்றிக் கோவைப்பட அமைந்துள்ளன .

 

  கணினியில் செய்தி- நிரல்களை எழுதுவோர் பின்பற்றவேண்டிய முறைமையைத் தொல்காப்பியர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளமை பெரிதும் போற்றத்தக்கது.  BNF என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம்முறைமையைப் பாணினி கடைப்பிடித்துள்ளதாகவும், ஆகவே சமற்கிருதம் உலக மொழிகளிலேயே கணினிப் பயன்பாட்டுக்குப் பெரிதும் உகந்தமொழி எனவும் மேலைநாட்டார் பாராட்டுவதைக் காண்கிறோம்.  [The Backus-Naur Form (Panini-Backus Form) or BNF grammars used to describe modern programming languages have significant similarities to Panini grammar rules] பாணினிக்கு முன்னரேயே தொல்காப்பியர் இத்தகு சீர்மையைத் தமது நூலில் பயன்படுத்தியுள்ளதை நாம் எடுத்துக்கூறத் தவறிவிட்டமையாலும், பாணினியை அவர்கள் உலகுக்கு முறையாக அறிமுகம் செய்தமையாலுமே, மேலைநாட்டார் கவனம் இங்குத் திரும்பவில்லை.

  தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க  தமிழின் இலக்கணச்சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.  தமிழைக் கணினிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக்கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்புமுறையேயாகும்.  இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்தமுடியவில்லை. இங்ஙனம் அமைந்துள்ள எழுத்துப்படலத்தில் இரு நூற்பாக்கள் வேற்றுமொழி இலக்கணநூலிலிருந்து இரவல் வாங்கப்படவேண்டிய தேவை என்ன?

 

(தொடரும்)

 பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

நன்றி : செம்மொழிச்சுடர்