இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி)
11
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.
பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது விலக்காக உள்ளது. ஒரே அரசு மரபினரை(சேர மனனர்களை)ப் பாடிய பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. எனவே தமிழக வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமாயின் தமிழ்ப் புலவர்களின் வரலாறு செம்மையாக எழுதப் பெறல் வேண்டும். அப்பொழுது தான் புலவர்களின் பாடிய செய்யுட்கள் தோன்றிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் தான், முதன் முதலாக தன் வரலாற்றில் ஒரு நிகழ்வை வெளிப்படத் தம் நூலில் பாடியுள்ளார்.
‘ யானும் சென்றேன் என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தானிழல் இருந்தோய் நின்னை’ 3
என்று தம் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தம் வாயினால் கூறுவதை அறிந்து மகிழ்கிறோம்.
இளங்கோவடிகளுக்குப் பின் இடைக்காலச் சோழப் பேரரசில் மாமன்னராகத் திகழ்ந்த முதலாம் இராசராசன் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தம் வெற்றிச் செய்திகளைப் பட்டயங்களில் பொறித்தான். மெய்க்கீர்த்தி என்னும் பெயரில் வெளியிடப்பட்ட அப்பட்டயங்கள் சோழ மன்னர்கள் வரிசையை அறிந்து கொள்ள உதவுகிறது.
முனைவர் உ.வே. சமாமிநாதய்யர் அவர்கள் ‘என் சரித்திரம்’ என்னும் தலைப்பில் தன் வராற்று நூல் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
முனைவர் இலக்குவனார் ‘என் வாழ்க்கைப் போர்’ என்னும் நூலில் தம் வாழ்வின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறியுள்ளார். அந்த நூல் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது.
‘துரத்தப்பட்டேன்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இந்நூல் ஒரு கவிதை நூலாகும். கவிதை வடிவில் தன் உள்ளக் குமுறலை எடுத்துக் காட்டியுள்ளார். யாப்பு இலக்கணங்களைப் புறம்பே நிறுத்திவிட்டுச், சொற்களைப் பிரித்து மக்கள் எல்லார்க்கும் எளிதில் விளங்கும் வண்ணம் இக்கவிதையைப் பாடியுள்ளார் கவிஞர்.
இக்கவிதை நூல் தோன்றக் காரணம்
இலக்குவனார் 1947 ஆம் ஆண்டு ஆகத்து முதல் 1952 வரை விருதுநகர் செந்திற் குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி செய்தார். முறையாக கல்லூரி முதல்வராகும் உரிமையும் கிடைத்தது. ஆனால் இலக்குவனார் நாடார் குலத்தில் பிறக்கவில்லை. ஆதலால் நாடார் அல்லாதவருக்கு நாடார் கல்லூரியில் பதவி கொடுத்தல் கூடாது என்று கல்லூரி நிருவாகம் முடிவு செய்தது. கல்லூரிப் பணியினின்றும் அவரைத் துரத்தியது. துரத்தப்பட்டதால் அவர் அடைந்துள்ள துன்பங்கள் அளவற்றன. தம் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினால்தான் மனம் அமைதி பெறும் என்று எண்ணினார். மக்கள் மன்றத்தில் முறையிட அவர் உள்ளொளி உரைத்தது. அதன் விளைவாக இந்நூல் தோன்றியது.
கவிதை கூறும் பொருள்
இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின் வயது வந்தோர் அனைவர்க்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. மக்களுக்காக மக்களில் ஒருவர் மக்களை ஆட்சி செய்யும் முறைக்கு மக்களாட்சி என்று பெயர். மக்களாட்சியின் முதல் அங்கமாகப் பொதுத் தேர்தல் 1952-இல் வந்தது. இந்தியப் பாராளுமன்றத்திற்கும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் உறுப்பினைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வந்தது.
சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது இந்திய அரசியல் சட்டம். ஆனால் தேர்தல் என்று வரும் போது சாதிகள் பேரால் போட்டியிட முனைகின்றார் சிலர். இதனை,
‘ வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
அன்னியர் வாக்கு வன்னியர் கில்லை
நாடார் வாக்கைப் போடார் பிறர்க்கு
செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு
தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
முதலியார் வாக்கு முதலியார் தமக்கே’ 4
என்று தேர்தல் காலத்தில் நிலவிடும் அரசியல் சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் கவிஞர். தேர்தலில் கட்சி வெறி நெருப்புப் பொறியாகி விடுவதுண்டு.
கற்றறிந்தோர், ஆளுந்திறமையுடையோர் தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி விடுகின்றனர். மாறாகக், கட்டையை நிறுத்தினாலும் கழுதையைக் காட்டினாலும் அதற்கே வாக்கை அளித்திட வேண்டும் என்று கூறிச், சிலர் தம் கட்சி, பெரும்பான்மை பெற்றிட வேண்டியாங்கு உழைக்கின்றனர். மக்கள் “இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நமக்கேன் கவலை?” என்று நாளைப் போக்குகிறார்கள். எல்லாம் விதிப்பயன் என்றும் எண்ணியும், வறுமையும் அடைந்திருப்பதை இயல்பெனக் கொண்டும் செயலற்றிருக்கிறார்கள். எழுத்தறிவு பெற்றிருப்போர் நூற்றுக்கு இருபது பேரே. எனவே, தேர்ந்தெடுக்கும் மக்கள் திறம் அற்றவராக உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவோர், தம் திறனைக் கூறி வாக்குகள் பெற்றிட வழி வகுப்பதில்லை. கல்லாத மக்களின் வாக்குகளைக் குறிகள்(சின்னங்கள்) காட்டிப் பெற்றவிட முந்தும் அவலநிலையே உள்ளது. கூர்ந்த அறிவை வளர்க்காது வாயற்ற ஊமையராய் அழகிய பாவையாய் இருந்து, கட்சி உறுப்பினர் எண்ணிக்கையைக் கைகள் தூக்கிக் காட்டிடும் பொல்லா நிலையே நாட்டில் உள்ளது.
‘ இந்திய மக்களுள் எம்தமிழ் மக்கள்
அறிஞரும் செல்வரும் அவரவர் அளவில்
தந்நலம் இன்றிப் பிறர்நலம் பேணும்
அன்பினர் அரியர்; ஆதலின் ஈங்கே
நாட்டுப் போரில் நாட்டம் இன்றி
வீட்டுப் பணியில் விருப்பம் கொண்டு
உழைப்போர் பலரென உலகோர் அறைவர்’ 5
குறிப்புகள்:
3. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வரந்தரு காதைஅ-ள் 171-185
4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 34-40
5. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 8-86
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12)
Leave a Reply