(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09:   தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இயல் – 4

இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு

  இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார்.

‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென

   நாலியற் றென்ப பாவகை விரியே’         (தொல்-செய்)

என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.

  1. நெடுங் கவிதைகள்
  2. வாழ்த்துக் கவிதைகள்
  3. கையறுநிலைக் கவிதைகள்
  4. அங்கதக் கவிதைகள்
  5. இசைப் பாடல்கள்
  6. கதைப் பாடல்கள்

என ஆறு பிரிவாகப் பகுத்துப் பொருள் நலம் காணலாம்.

  1. நெடுங் கவிதைகள்

  நெடுங் கவிதைகள் என்ற பிரிவில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை துரத்தப்பட்டேன், மாணவர் ஆற்றுப்படை, அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து என்ற மூன்று கவிதைகளாகும். இம் மூன்று கவிதைகளும் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தவை. இவற்றுள் ‘துரத்தப்பட்டேன்’ என்ற கவிதை ஆசிரியரின் வரலாற்றைக் கூறும் கவிதையாகும். இதனை ஒரு புதுக்கவிதை என்று இயம்பலாம். காரணம் சில இடங்களில் யாப்பு விதிகட்குப் புறம்பாக அமைந்துள்ளன. தன் வரலாற்றுக் கவிதைகள், தமிழ் மொழியில் அரிதாகவே காணப்படுகின்றன.

  “தமிழுக்கு ஒரு சிறப்பு மூல இலக்கியங்கள் பல உடைமை. எனினும் அவற்றைத் தந்துதவிய புலவர்களின் வரலாறு நமக்குக் கிடையாது. இது தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்கு நீங்காக் குறையாகும்.”1  என்று கூறுவர் முனைவர் வ.சுப. மாணிக்கம்.

  தமிழ்ப் புலவர்கள் வரலாறு அறியப்படாத காரணத்தால் நம்முடைய மொழியின் தொன்மை மறைக்கப்பட்டன. சில வேளைகளில் மறக்கப்பட்டன. எனவே புலவர், கவிஞர் அனைவரும் தத்தம் வரலாற்றை எழுதி வைக்க வேண்டும். கவிதையாயினும் உரைநடையினும் எவ்வடிவமானாலும் எழுதி வைப்பது நல்லது. பேசும் சொற்கள் மறைந்து விடுகின்றன. ஆனால் நாம் எழுதும் எழுத்துகள் நிலைத்து நிற்கின்றன. பல்லவ மன்னர் கல்வெட்டுகளும், பிற்காலச் சோழர் கல்வெட்டுகளும் அவர்தம் வரலாற்றை இன்றும் சிறப்புடன் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்குவனாரின் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் கவிதை உன்னத இடத்தைப் பெற்ற விளங்குகிறது எனலாம். பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றியதாலும் தந்தைப் பெரியாரிடம் பற்றுக் கொண்டமையாலும், தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்னும் நினைப்பால் தன்மதிப்பு இயக்க மாநாடுகளில் பேசியதாலும் இலக்குவனார் அடைந்த இன்னல்கள் மிகுதி.

  பார்ப்பனர் காங்கிரசு இயக்கத்தில் பெரிய செல்வாக்கு பெற்று விளங்கினார்கள். தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்கவே நீதிக்கட்சி தோன்றிற்று. எனவே பார்ப்பனர் செல்வாக்கைக் குறைக்கத் தோன்றிய நீதிக்கட்சியின் கொள்கையில் விருப்புக் கொண்டனர் இலக்குவனார்.

  1952-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது திருவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தேர்தலில் நீதிக் கட்சியைச் சேர்ந்த  கோவை அறிஞர் கோ.து.நாயுடு நின்றார். காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த காமராசர், நாயுடுவை எதிர்த்து நின்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்த இலக்குவனார் கோ.து. நாயுடுவை ஆதரித்தும் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த காமராசரை எதிர்த்தும் தேர்தல் பணி செய்தார்.

  காமராசர் நாடார் குலத்தவர். காங்கிரசுக் கட்சிக்குப் பணியாற்றிய நாடார்கள் எல்லாம் ஒன்று கூடினர். நாடார் குலத்தின் தலைவரை எதிர்த்துத் தேர்தல் வேலை செய்த ஒருவரை நாடார் கல்லூரியில் பேராசிரியராக வைத்திருப்பதா? கூடாது என்று மொழிந்தனர். இலக்குவனாரை நாடார் கல்லூரியினின்று நீக்க முயன்று, இறுதியில் வெளியேற்றி விட்டனர். இலக்குவனார் துரத்தப்பட்டதன் சமூகப் பின்புலம் இதுதான்.

  இலக்குவனார் பாடிய நெடும் பாடல்களுள் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையே நீண்ட கவிதையாகும். இஃது அறுநூற்று ஐம்பத்தேழு அடிகளை உடையது. மனத்தில் தோன்றிய எண்ணங்களை(உள்ளக் குமுறலை) அகவற்பா அமைப்பில் எளியநடையில் வெளிப்படுத்தியுள்ளார், கவிஞர். புலமை பெற்றோர் மட்டுமின்றி எல்லாருக்கும் எளிதில் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாப்பிலக்கண விதிகளைச் சிறிது புறத்தே நிறுத்திவிட்டுச் சொற்களைப் பிரித்தே எழுதியுள்ளார்.

  இக்கவிதை மூலம் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி நமக்குத் தெற்றென விளங்குகிறது. தன் வாழ்க்கை வரலாறு மேல்நாட்டு இலக்கியங்களில் சிறப்பாக இடத்தைப் பெற்றுள்ளன. தன் வாழ்க்கை வரலாறு தமிழ் இலக்கியத்தில் இன்னும் உயர்ந்த இடத்தைப் பெறவில்லை.2

குறிப்புகள்:

  1. முனைவர் வ.சுப. மாணிக்கம், இரட்டைக் காப்பியங்கள், சிலப்பதிகாரத்தின், செல்விப் பதிப்பகம், காரைக்குடி, 1960, ப-35.
  2. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், முன்னுரை, குறள்நெறி வெளியீடு, மதுரை, 1971, ப-6.

(தொடரும்)

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11)