‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்
‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை…..
பதினெட்டு வருடங்களுக்குப் பின்பு, ‘உயிர்ச்சுழி’ இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதல் பதிப்பினைச் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பில் தேவைக்கு ஏற்பச் சில படிகள் மறுஅச்சு செய்து வெளியிடப்பட்டாலும் முறையான இரண்டாம் பதிப்பாக இதைக் கொள்ளலாம்! ஆம்! பதினெட்டு வருடங்கள் என்பது மிகப் பெரிய கால இடைவெளிதான்!
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை மீண்டும் வாசிக்கின்ற போது, ஒரு பழைய ஒளிப் படத்தினைக் காண்பது போன்ற பரவசமும், அது உண்டாக்கும் ஏக்கமும் தான் மிஞ்சுகிறது. எல்லாவற்றையும் கடந்து போகக் கூடிய ஆற்றல், காலத்திற்கு மட்டுமல்ல, கலை வெளிப்பாட்டிற்கும் உண்டு. காலம் தந்த மனிதர்கள் இவர்கள் என்றாலும், அந்த காலத்தாலே கடந்து விடமுடியாதவர்களாக நிலைக்கின்றபோது, அவர்கள் வழியாகவே ஒரு கலைப் பண்பு துளிர்த்து விடுகிறது! சொல்லப்பட்டவர்களும், சொல்லப்பட்ட விதமும், சொல்லப்பட்டதில் இருந்து சொல்லப்படாதவையும் மனத்தில் ஒரு சித்திரத்தைத் தோற்றுவித்துச் செல்கிறது!
திருகலான மொழியோ, புதிர்த்தன்மை கொண்ட மொழியோ, பூடகமோ, தத்துவச்சாயலோ, கோட்பாட்டுப் பின்புலமோ இல்லாத புனைவு, இது. அப்படித்திட்டமிட்டு உருவாக்கப்பட்டதும் அல்ல, இது. அதன் இயல்பிலே வெளிப்பட்டவை, அவரவர் வாழ்வு அவரவருக்கு வெளிச்சம், அவரவர் கண் வெளிச்சத்திலே தான் உலகின் வெளிச்சத்தினைக் காணமுடியும்!
‘மாறுதடம்’, ‘நான்+ நீ’ கால மாற்றத்தில் மனிதர்களின் மாறுபட்ட முகங்கள், ‘மரம்’ ‘ஈரம்’ ‘உயிர்ச்சுழி’ ‘ஒருவரும் ஒருவனும்’ ‘வேடிக்கை மனிதர்கள்’ கதைகளில் இருப்பவர்கள் என்றும் இருப்பவர்களாக இருக்கிறார்கள், அவர்களோடு தான் நாமும் இருக்கிறோம். ‘சந்திப்பிழைகள்’ கதையில் காலத்தின் பாய்ச்சலை நீங்கள் பார்க்கலாம், இந்த இருபது வருடத்தில் தொழில் நுட்ப மாற்றமும் மனித வாழ்வின் இயங்கு தளங்களின் மையங்களைக் காணலாம். மற்றபடி ஒட்டு மொத்தத் தொகுப்பில் பூத்துக்கிடக்கும் ஈர வாடை ஏற்கெனவே நான் புழங்கியதுதான். இந்த தொகுப்பு வெளிவந்த போது இதற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பினை இப்போது நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன், அப்படியான ஒரு வாய்ப்பினை மீண்டும் உருவாக்கித் தந்த புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace) மு.வேடியப்பன் அவர்களுக்கு என் அன்பினையும் நன்றியையும் பதிவு செய்கிறேன்.
பாரதிபாலன் , 23.05.2019
புத்தகம் கிடைக்குமிடம்
புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace)
6, மகாவீர் வளாகம், முனுசாமி சாலை
க.க.நகர், சென்னை 600 078
பேசி 087545 07070
இவற்றையும் காண்க:
படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி
மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் – வல்லிக்கண்ணன்
Leave a Reply