(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி)

மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்
தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தை
முடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.
எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.
மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சில
மாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப்
பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர்.

புறப்பாடு

எல்லாரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கே
தங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை வழியாகத்
திருப்பெருந்துறையை அடைந்தோம்.

நாங்கள் போய்ச் சேர்ந்தபோது ஆருத்திரா தரிசனத்தின் பொருட்டு
எங்களுக்கு முன்னரே பல வித்துவான்களும் சிவபக்திச் செல்வர்களும் அங்கே
வந்து தங்கியிருப்பதைப் பார்த்தோம்.

பிள்ளையவர்களுடைய வரவு எல்லாருக்கும் மகிழ்ச்சியை
உண்டாக்கியது. கோயிலார் மேளதாளத்துடன் வந்து அக்கவிஞர் பெருமானைக்
கண்டு பிரசாதமளித்துத் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆலயத்தில்
சுப்பிரமணியத் தம்பிரான் அவரை வரவேற்றார். அன்று மாணிக்கவாசகர்
மந்திரிக் கோலங்கொண்டு எழுந்தருளியிருந்தார்.

அருவ மூர்த்திகள்

மற்ற தலங்களில் இல்லாத ஒரு புதுமையைத் திருப்பெருந்துறையிலே
கண்டேன். சிவாலயங்களில் சிவலிங்கப் பெருமானும் அம்பிகையின்
திருவுருவமும் மூலத்தானங்களில் இருக்கும். அந்தத்தலத்தில்
சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் எந்த விதமான உருவமும் இல்லை. வெறும்
பீடங்கள் மாத்திரம் இருக்கின்றன. சுவாமியும் அம்பிகையும் அரூபமாக
எழுந்தருளியிருப்பதாக ஐதியம். பூசை முதலியன அப்பீடங்களுக்கே நடைபெற்று வருகின்றன.
சுவாமியின் திருநாமம் ஆத்மநாதரென்பது; அம்பிகைக்குச்
சிவயோகாம்பிகை என்பது திருநாமம். இவ்விருவரும் அரூபமாக அங்கே
கோயில் கொண்டிருத்தலை என் ஆசிரியர்,

“தூயநா மத்தருவ முருவமெவை யெனினுமொரு
தோன்றல் போன்றே
பாயநா னிலவரைப்பின் கணுமமர்வா ளெனல்தெரித்த
படியே போல
ஆயநா தங்கடந்த வான்மநா தக்கடவுள்
அமர்தற் கேற்ப
மேயநா யகிசிவயோ காம்பிகைதன் விரைமலர்த்தாள்
மேவி வாழ்வாம்”

என்று திருப்பெருந்துறைப் புராணத்திற் புலப்படுத்தியிருக்கிறார்.
‘அருவம் உருவம் என்னும் கோலங்களில் எந்தக் கோலத்தில் சிவபெருமான்
எழுந்தருளியிருக்கிறாரோ அக்கோலத்தில் இப்பூமியிலும் அம்பிகை
எழுந்தருளியிருப்பதை வெளிப்படுவதைப் போல, நாத தத்துவங் கடந்து நின்ற
ஆத்துமநாத சுவாமி அரூபமாக எழுந்தருளியிருத்தற்கு ஏற்றபடி தானும்
அரூபத்திருமேனி கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவயோகாம்பிகையின்
திருவடிகளை விரும்பி வாழ்வோமாக’ என்பது இதன் பொருள்.

மாணிக்க வாசகர்

அங்கே மாணிக்க வாசகர் உபதேசம் பெற்றமையாலும் அவர்
பொருட்டுச் சிவபெருமான் சில திருவிளையாடல்களைச் செய்தமையாலும் அந்தத்
தலத்தில் அவருக்கு விசேசமான பூசை, உற்சவம் முதலியன நடைபெறும்.
உற்சவங்களில் மாணிக்க வாசகருக்கே முக்கியத் தானம் அளிக்கப்பெறும்.

மாணிக்கவாசகர் அத்தல விருட்சமாகிய குருந்த மரத்தின் அடியில்
உபதேசம் பெற்றார். அவ்விடத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார்;
குருமூர்த்தியென்று அப்பெருமானை வழங்குவர். அவர் பொருட்டுச்
சிவபெருமான் குதிரைச் சேவகராயினர். அதற்கு அடையாளமாக
அத்திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கனகசபையென்றும்
மண்டபத்தில் இறைவர் அசுவாரூடராக எழுந்தருளியிருக்கிறார். அதற்குக்
குதிரை சுவாமி மண்டபம் என்ற பெயர் பிரசித்தமாக வழங்குகிறது.
அக்கோயிலில் பல இடங்களில் மாணிக்கவாசகர் திருவுருவங்கள்
அமைந்துள்ளன. அம்பிகையின் சந்நிதிக்கு நேரே மாணிக்கவாசகர் சந்நிதிஇருக்கிறது. ஆறு காலங்களிலும் இரண்டு சந்நிதிகளிலும் அபிசேக ஆராதனைகள் ஒரே சமயத்தில் நடைபெறும்.

அக்கோயிலில் வேறு கோயில்களிற் காணப்படாத மற்றொரு விசேசம்
உண்டு. சிவாலயங்களில் சிவதரிசனத்துக்கு முன் நந்தி தேவரைத் தரிசித்து
அவர் அனுமதி பெற்று ஆலயத்துள்ளே புகுதலும் தரிசனம் செய்து
திரும்புகையில் சண்டேசுவரரைத் தரிசித்து விடை பெற்று வருதலும்
சம்பிரதாயங்களாகும். அக் கோயிலில் அந்த இரண்டு மூர்த்திகளும் இல்லை.
ஆதலால் தரிசனம் செய்பவர்கள் உள்ளே செல்லும்போதும், தரிசித்துவிட்டு
மீளும்போதும் மாணிக்க வாசரைத் தரிசித்து முறையே அனுமதியையும்
விடையையும் பெறுதல் வழக்கமாக இருக்கிறது.

புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற சமத்தானங்களாலும்
பச்சையப்ப முதலியார் முதலிய பிரபுக்களாலும் இத்தலத்திற் பலவகைக்
கட்டளைகள் ஏற்படுத்தப் பெற்றிருக்கின்றன.

நிவேதனம் முதலிய விசேசங்கள்

மற்றச் சிவாலயங்களில் செய்யப் பெறும் நிவேதனங்களோடு
புழுங்கலரிசி அன்னம், பாகற்காய்ப் புளிங்கறி, அரைக்கீரைச்
சுண்டலென்பவையும் அங்கே நிவேதனம் செய்யப் பெறும்.

அங்கே தீபாலங்காரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தினந்தோறும் இரா
முழுவதும் அத்தீபாலங்காரத்தைக் காணலாம்.

சிதம்பரத்தில் சிரீ நடராசப் பெருமானைப் பூசித்து வழிபடுபவர்கள்
மூவாயிரவரென்றும் அவர்கள் தில்லை மூவாயிரவரென்னும்
பெயருடையவரென்றும் அவர்களுள் சிவபிரானே ஒருவரென்றும் கூறுவர்.
திருப்பெருந்துறையிலும் அதைப் போன்ற முறையொன்று உண்டு. இக்கோயில்
பூசகர்கள் முந்நூற்றுவரென்னும் மரபினர். ஆதியில் முந்நூறு பேர்கள்
இருந்தனரென்றும் அவர்களுள் ஆத்மநாத சுவாமி ஒருவர் என்றும் புராணம்
கூறும்.

இப்போது சுவாமிக்கும் அம்பிகைக்கும் பூசை முதலியன செய்து
வருபவர்களை நம்பியாரென்று அழைக்கின்றனர். அவர்கள் செய்வது வைதிக
பூசை. மாணிக்க வாசகருக்கு மாத்திரம் ஆதிசைவர்கள் ஆகமப்படி பூசை
செய்து வருகின்றனர்.

வீரபத்திரர்

அம்பிகையின் சந்நிதியில் வீரபத்திரர் கோயில் கொண்டிருக்கிறார்.
தட்சனுடைய யாகத்தை அழித்த அக்கடவுள் அத்திருக்கோலத்துடன் அம்பிகையின் யோகத்தைப் பாதுகாப்பவராகச் சிவாஞ்ஞையால் அங்கே ழுந்தருளி யிருக்கிறாரென்பது புராண வரலாறு. அம் மூர்த்தியை வழிபட்டுப் பேய்பிடித்தவர்களும் வேறு விதமான துன்பங்களை அடைந்தவர்களும் சௌக்கியம் பெறுவார்கள்

சிற்பம்

கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக அருமையானவை. சிற்பவேலை
செய்பவர்கள் இன்ன இன்ன இடத்திலுள்ள இன்ன இன்ன அமைப்புகள் மிகச்
சிறந்தவையென்றும், அவற்றைப் போல அமைப்பது அரிதென்றும் கூறுவார்கள்.
அங்ஙனம் கூறப்படும் அரிய பொருள்களுள் ‘திருப்பெருந்துறைக்
கொடுங்கை’யும் ஒன்று. கல்லாலே அமைந்த சங்கிலி முதலிய விசித்திர
வேலைப்பாடுகள் பல அங்கே உள்ளன.

வந்த வித்துவான்கள்

இவற்றைப் போன்ற பல சிறப்புகளை உடைமையால் அந்தத் தலம்
சிவபக்தர்களால் அதிகமாகப் போற்றப்பட்டு வருகிறது. நாங்கள்
சென்றிருந்தபோது திருவாதிரைத் தரிசனத்துக்காக வந்திருந்தவர்களில் பலர்
என் ஆசிரியரிடம் பேரன்பு பூண்டவர்கள்.

தேவகோட்டையிலிருந்து வன்றொண்டச் செட்டியாரும், வேம்பத்தூரிலி
ருந்து சிலேடைப்புலி பிச்சுவையரும், சிங்கவனத்திலிருந்து சுப்பு
பாரதியாரென்பவரும், மணல் மேற்குடியிலிருந்து கிருட்டிணையரென்பவரும்
வந்திருந்தார்கள்.
இவர்கள் யாவரும் பிள்ளையவர்களைக் கண்டு அளவற்ற
சந்தோசத்தை அடைந்தார்கள்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு நாங்கள் எங்களுக்காக ஏற்பாடு
செய்யப்பெற்றிருந்த விடுதிக்குச் சென்று தங்கினோம். வன்றொண்டர்
முதலியோர் வந்து ஆசிரியரோடு சல்லாபம் செய்தார்கள்.

வன்றொண்டரென்பவர் தனவைசிய வகுப்பினர். கண்பார்வை யில்லாதவர். தீவிரமான சிவபக்தியும் கடினமான நியமானுட்டனங்களும் உடையவர். தமிழ்வித்துவான். சிறந்த ஞாபக சக்தியுள்ளவர். பிள்ளையவர்களிடத்திலும் ஆறுமுக நாவலரிடத்திலும் பாடம்
கேட்டவர். எதையும் ஆழ்ந்து படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்
இயல்புடையவர். பிள்ளையவர்களிடத்தில் அவருக்குப் பெருமதிப்பு இருந்தது. பிச்சுவையரென்பவர் வேம்பத்தூர்ச் சோழியர்; ஆசு கவி. எந்தச்
சமயத்திலும் எந்த விசயத்தைப் பற்றியும் கேட்போர் பிரமிக்கும்படி செய்யுள்
இயற்றும் ஆற்றலுடையவர். திருப்பெருந்துறையில் அவரை நான் முதலிற்
பார்த்தபோதே விரைவாக அவர் செய்யுள் இயற்றுவதைக் கண்டு
ஆச்சரியமடைந்தேன்.

சிங்கவனம் சுப்புபாரதியாரென்பவர் பரம்பரையாகத் தமிழ்
வித்துவான்களாக இருந்த பிராமண குடும்பத்தில் உதித்தவர். பிள்ளை
யவர்களிடம் பல வருசங்கள் பாடம் கேட்டவர். இலக்கண இலக்கியங்களில்
தேர்ந்த புலமையுள்ளவர். ஒரு பாடலை இசையுடன் எடுத்துச் சொல்லிக்
கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி பிரசங்கம் செய்யவல்லவர்.
அவருடைய பேச்சிலிருந்தே திறமையை, அவருடைய சாமர்த்தியத்தை நான்
அறிந்து கொண்டேன். அவர் பாடல் சொல்லும் முறை என் மனத்தைக்
கவர்ந்தது.

மணல்மேற்குடி கிருட்டிணையரென்பவர் சிறந்த தமிழ் வித்துவான்.
செய்யுள் செய்வதிலும் பல நூல் ஆராய்ச்சியிலும் நல்ல ஆற்றலுடையவர். பல
பிரபந்தங்கள் செய்தவர்.

பிச்சுவையரும் சுப்பு பாரதியாரும் தாம் இயற்றிய சில பிரபந்தங்களை
ஆசிரியரிடம் படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு
சிறப்புப் பாயிரமும் பெற்றார்கள்.

ஆருத்திரா தரிசனம்

திருவாதிரையன்று குரு மூர்த்தியின் தரிசனம் கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது. சுப்பிரமணியத் தம்பிரானுடைய நிருவாகத் திறமையை
அன்று கண்டு வியந்தோம். ‘திருவாவடுதுறை ஆதீனத்தால் அந்தத் தலத்துக்கு
மதிப்போ, அன்றி அந்தத் தலத்தால் ஆதீனத்துக்கு மதிப்போ’ என்று
சந்தேகம் ஏற்படும்படியான அமைப்புகள் அங்கே காணப்பட்டன. அங்கே
அக்காலத்திற் சென்றவர்கள் சில தினங்களேனும் தங்கித் தரிசனம் செய்துதான்
செல்வார்கள். அவ்வாறு தரிசனத்தின் பொருட்டு வேற்றூர்களிலிருந்து
வருவோர்களுக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் அத்தலத்தில்
அமைந்திருந்தன.

திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம் ஆரம்பித்தற்கு நல்ல நாள்
ஒன்று பார்த்து வைக்கப்பெற்றது. இடையே ஆசிரியர் அப்புராணத்தின்
பகுதிகளை இயற்றி வந்தார். நான் அவற்றை எழுதும் பணியைச் செய்து
வந்தேன்.

சிவகுருநாத பிள்ளை

எங்களுடன் இருந்த சவேரிநாத பிள்ளை கிறித்தவராக இருந்தாலும்
விபூதி அணிந்து கொள்வார். திருப்பெருந்துறையில் யாவரும் அவரைக்
கிறித்தவரென்று அறிந்து கொள்ளவில்லை. சிவ பக்தர்கள் கூடியிருந்த
அவ்விடத்தில் அவரும் ஒரு சிவ பக்தராகவே விளங்கினார். சைவர்களோடு
பந்தி போசனம் செய்வதில்லை; தோற்றம். பேச்சு, நடை உடை பாவனைகள்
எல்லா விசயங்களிலும் அவருக்கும் சைவர்களுக்கும் வேறுபாடே தோற்றாது.
ஆயினும் ‘சவேரிநாதர்’ என்ற பெயர் மாத்திரம் அவர் கிறித்தவரென்பவதைப்
புலப்படுத்தியது. பெயரிலும் சைவராக இருக்க வேண்டுமென்று அவர்
விரும்பினார்.

திருப்பெருந்துறைக்குச் சென்ற சில தினங்களுக்குப் பிறகு தம்
விருப்பத்தை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துக் கொள்ளலானார். “இங்கே
எல்லாம் சைவ மயமாக இருக்கின்றன நானும் மற்றவர்களைப் போலவே
இருந்து வருகிறேன். என் பெயர்தான் என்னை வெளிப்படுத்தி விடுகிறது.
அதை மாற்றிச் சைவப் பெயராக வைத்துக்கொள்ளலாமென்று எண்ணுகிறேன்.
புராணம் அரங்கேற்றும்பொழுது ஐயா அவர்கள் எதையேனும் கவனிப்பதற்காக
என்னை அழைக்க நேரும். சிவநேசச் செல்வர்கள் நிறைந்துள்ள கூட்டத்தில்
கிறித்தவப் பெயரால் என்னை ஐயா அழைக்கும்போது கூட்டத்தினர் ஏதேனும்
நினைக்கக்கூடும்” என்றார். “உண்மைதான்” என்று சொல்லிய ஆசிரியர்,
“இனிமேல் சிவகுருநாதபிள்ளையென்ற பெயரால் உன்னை அழைக்கலாமென்று
தோன்றுகிறது. உன் பழைய பெயரைப் போலவே அது தொனிக்கிறது” என்று
நாம கரணம் செய்தார். சவேரிநாத பிள்ளைக்கு உண்டான சந்தோசம்
இன்னவாறு இருந்ததென்று சொல்ல இயலாது.

சவேரிநாதபிள்ளை குதித்துக் கொண்டே என்னிடம் ஓடி வந்தார்.
“இங்கே பாருங்கள்; இன்று முதல் நான் முழுச்சைவன். என் பழைய பெயரை
மறந்து விடுங்கள். நான் இப்போது சிவகுருநாதன். உங்களுடைய வைணவப்
பெயரை மாற்றிச் சாமிநாதனென்று ஐயா வைத்தார்களல்லவா? அந்தப்
பாக்கியம் எனக்கும் கிடைத்தது. என் கிறித்தவப் பெயரை மாற்றிச்
சிவகுருநாதனென்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஆசிரியர் நம் இருவரையும்
ஒரே நிலையில்வைத்து அன்பு பாராட்டுவதற்கு அடையாளம் இது. இரண்டு
பேர்களுக்கும் அருத்தம் ஒன்றுதானே? சாமிநாதனென்றாலென்ன?
சிவகுருநாதனென்றாலென்ன? இரண்டும் ஒன்றே” என்றார்.

ஆசிரியர் செய்த காரியத்தால் உண்டான வியப்போடு அவர் பேச்சால்
விளைந்த இன்பமும் சேர்ந்து என் உள்ளத்தைக் கவர்ந்தது

(தொடரும்)