(உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி- தொடர்ச்சி)

நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது.

மணிமந்திர ஒளடதங்களால் எவ்வளவோ முயன்றும் ஆசிரியரது நோய் குறையவில்லை. அப்பால் திருவாவடுதுறைக்கே வந்துவிடும்படி சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்ப அவர் அங்ஙனமே வந்து சேர்ந்தார். அங்கும் உசிதமான அளவில் சிகிச்சை நடைபெற்று வந்தது. மடத்திற்கு வருபவர்கள், பிள்ளையவர்களைத் தவறாமல் வந்து பார்த்து அவரது அசௌக்கியத்தை அறிந்து வருந்தினார்கள்.

ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குத் தம்முடைய குமாரர் வேண்டுகோளுக்கு இசைந்து ஆசிரியர் மாயூரம் சென்றார். செல்லும்போது அவருடன் சில மாணாக்கர்கள் போனார்கள். ஆசிரியருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் தீபாவளியில் அணிந்துகொள்ளும்படி புதிய வத்திரங்களைச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பினார்.

நான் திருவாவடுதுறையிலே தங்கியிருந்தேன். என் சிறிய தந்தையாரோடு தீபாவளி குளியல் செய்தேன். மடத்தில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆதீனகர்த்தர் தீபாவளி ஆடைகள் வழங்கினார். என்ன காரணத்தாலோ எனக்குக் கிடைக்கவில்லை. துலாமாதம் ஆனவுடன் ஆசிரியரை அழைத்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் என்னை மாயூரத்திற்கு அனுப்பினார். நான் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டதும், அவர் முதலில் என்னை, “தீபாவளிக்கு உமக்கு மடத்திலிருந்து வேட்டி கிடைக்கவில்லையாமே?” என்று கேட்டார். அந்த விசயத்தை அவர் எப்படியோ தெரிந்துகொண்டிருந்தார். அதனால் எனக்கு விசேச வருத்தம் ஒன்றும் இராவிட்டாலும் அவருக்கு மாத்திரம் அது பற்றிய உறுத்தல் மனத்தில் இருந்தே வந்தது. “மடத்தில் படிக்கும் பிள்ளைகள் எல்லாருக்கும் வத்திரம் வழங்கும்போது உம்மை மட்டும் மறப்பதற்கு நியாயம் இல்லையே! உம்மிடம் சந்நிதானத்திற்கு எவ்வளவோ பிரியம் இருக்கிறதே. கவனிக்க வேண்டாமா?” என்று அவர் சொன்னார்.

“பெருங்கூட்டத்தில் மறந்து போயிருக்கலாம்; அல்லது கொடுத்ததாக எண்ணி இருக்கலாம். இதற்கு வேறுவிதமான காரணம் இராது” என்று நான் சமாதானம் சொன்னேன்.

“சமாதானம் வேண்டா. உண்மையான அன்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு அடிக்கடி நேருவதில்லை. அப்படி நேரிடும்போது அதை வெளியிடாவிட்டால் அன்பு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளுவதில் பயன் ஒன்றும் இல்லை. பணக்காரர்களுக்கு அலட்சியமாகப்படும் ஒரு சிறு விசயம் உண்மை அன்பை எதிர்பார்ப்பவர்களுக்கு மிக்க மனக்குறையை உண்டாக்கிவிடும்” என்றார்.

ஆசிரியருக்கு அவ்விசயத்தில் எவ்வளவு வருத்தம் இருந்ததென்பதை அவர் வார்த்தைகள் புலப்படுத்தின. அதற்கு மூலகாரணம் என்பால் அவருக்கு இயல்பாக உள்ள பேரன்பே. அச்சமயத்தில் நான் சொல்லும் சமாதானமெல்லாம் அவருடைய சினத்தை அதிகமாக்குமென்று உணர்ந்து பேசாமல் இருந்துவிட்டேன்.

ஆசிரியர் அதோடு நிற்கவில்லை. அருகில் இருந்த ஒருவரை அழைத்து அவர் கையில் பணத்தை அளித்துக் கடைக்குச் சென்று ஒரு புதிய பத்தாறு வத்திரம் வாங்கிவரச் செய்து தாமே அதற்கு மஞ்சள் தடவி என் கையிலே கொடுத்து, “இதைக் கட்டிக்கொள்ளும்” என்று அன்புடன் கூறினார். நான் அவ்வாறே அதைத் தரித்துக்கொண்டேன். தீபாவளி எனக்கு இரண்டு தடவை ஏற்பட்டது. திருவாவடுதுறையில் எல்லாரோடும் குளித்து யாவருக்கும் பொதுவான தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று மாயூரத்தில் ஆசிரியர் முன்னிலையில் அவர் அன்புப்பார்வையில் மூழ்கி அவர்தம் அருமைக் கையால் அளித்த வத்திரத்தைத் தரித்து ஒரு தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, “இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்று சொல்லி ஒரு பெருமூச்சுவிட்டார். அப்போது நெடுநாளாக இருந்த குறை ஒன்று நீங்கப் பெற்றவரைப் போலவே அவர் தோன்றினார்.

நான் வந்த காரியத்தை மெல்ல அவரிடம் சொன்னேன். “இன்னும் சில தினங்கள் இங்கே இருந்துவிட்டுப் போகலாம் நீரும் இரும்” என்று அவர் சொல்லவே, அங்ஙனமே சில தினங்கள் மாயூரத்தில் தங்கியிருந்தேன்.

ஒருநாள் மாயூரம் கடைவீதியில் ஓரிடத்தில் இராமாயணம் ஏழுகாண்டங்களும் ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். இராமாயண பாடம் நடைபெற்று வந்த சமயமாதலாலும் நெடுநாட்களாக இரவல் புத்தகத்தைப் படித்து வந்தமையாலும் அவற்றைக் கண்டவுடனே வாங்கிவிட வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அந்த ஆவலைப் பூர்த்தி செய்துகொள்ள என்னிடம் பணம் இல்லை. விலையை விசாரித்தேன். “ஏழு உரூபாயில் ஒரு பைசா கூடக் குறையாது” என்று கடைக்காரன் சொன்னான். எப்படியாவது அப்புத்தகங்களை வாங்கிவிட வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. ஒரு வழியும் தோற்றவில்லை.

பிறகு அங்கிருந்து நேரே திருவாவடுதுறைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்று என் சிறிய தகப்பனாரிடம் விசயத்தைச் சொல்லிப் பணம் கேட்டேன். அப்பொழுதுதான் சம்பளம் அவருக்கு வந்திருந்தது. சம்பளமே ஏழு உரூபாய்தான்: அவர் சிறிதும் தடை சொல்லாமல் என் கையில் அதைக் கொடுக்கவே மீண்டும் மாயூரத்திற்கு வந்து கடைக்காரனிடம் போய்க் கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் உத்தர காண்டத்தையும் பெற்றுக்கொண்டேன். திருவாவடுதுறைக்குப் போய் வந்ததனால் உண்டான இளைப்பு அப்புத்தகங்களைப் பெற்ற சந்தோசத்தில் மறைந்துவிட்டது.
புத்தகங்களைக் கைக்கொண்டு முகமலர்ச்சியோடு ஆசிரியரை அணுகி அவற்றை அவரிடம் அளித்தேன்.

“என்ன புத்தகங்கள்?”

“கம்பராமாயணம். அவ்விடத்துக் கையால் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விலைக்கு வாங்கினேன்.”

“விலை என்ன?”

“ஏழு உரூபாய்.”

“பணம் ஏது?”

நான் திருவாவடுதுறைக்கு நடந்து சென்று பணம் வாங்கிவந்ததைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன், “அடடா! இதற்காக இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? என்னிடந்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே! அவற்றை எடுத்துக்கொள்ளலாமே? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? சரி, வாங்கியாய்விட்டது. நன்றாகப் படித்துப் புகழடைய வேண்டும்” என்று சொல்லி அவற்றை என் கையில் அளித்தார்.

அவற்றைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். சில பாடல்களைப் பாடமும் கேட்டேன். எப்பொழுதும் போன்ற நிலையில் ஆசிரியர் இருந்திருப்பின் அப்போது இரண்டு காண்டங்களை நான் பாடம் கேட்டிருப்பேன். அவர் தளர்ச்சியை அறிந்து நான் வருந்தினேன். என் உள்ளத்துள்ளே ஒருவகையான பயம் குமுறிக்கொண்டே இருந்தது.

சில தினங்களுக்குப் பின் மேனாப்பல்லக்கில் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்தார். அவருடன் இருந்த மற்ற மாணாக்கர்களும் நானும் அவரைத் தொடர்ந்து வந்து சேர்ந்தோம்.

(தொடரும்)