(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும்   தொடர்ச்சி)

ஊரும் பேரும் 45

தலமும் கோவிலும்

கருவூர்-ஆனிலை

    பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி புனைந்து கொண்ட பஞ்ச நகரங்களுள் ஒன்று என்பர்.

அங்குள்ள சிவாலயம் ஆனிலை என்னும் பெயருடையது.1 “அரனார் வாழ்வது ஆனிலை யென்னும் கோயில்” என்பது சேக்கிழார் திருவாக்கு.

அக் கோயிலுக்குப் பசுபதீச்சரம் என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

 கருவிலி-கொட்டிட்டை

     பிறப்பும் இறப்பும் அற்றவன் ஈசன் என்று சைவ சமயம் கூறும். அந்த முறை பற்றியே இளங்கோவடிகளும் “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று சிலப்பதிகாரத்தில் சிவபெருமானைக் குறித்துப் போந்தார். பிறப்பற்ற தன்மையைக் கருவிலி என்னும் சொல் உணர்த்துவதாகும். அதுவே ஒரு பாடல் பெற்ற தலத்தின் பெயராகவும் வழங்குகின்றது. தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் கருவிலி என்னும் ஊர் உள்ளது. பரமன் பெயரே பகுதிக்கு அமைந்தது போலும்!. அங்கு ஈசன் கோயில் கொண்ட இடம் கொட்டிட்டை என்று  தேவாரம் கூறும்.2 அக்கோயிற் பெயர் சாசனங்களிலும் வழங்குகின்றது.3 இந் நாளில் அவ்வூர்ப் பெயர் கருவேலி என மருவியுள்ளது.

குருகாவூர்-வெள்ளடை

     சோழ நாட்டில் சோலையும் வயலும் சூழ்ந்த குருகாவூரில் ஈசன் கோயில் கொண்ட இடம் வெள்ளடை என்று பெயர் பெற்றது.4

                “வளங்கனி பொழில்மல்கு

                வயலணிந் தழகாய்

                விளங்கொளி குருகாவூர்

                வெள்ளடை யுறைவானை

என்று பாடினார் சுந்தரர்.

 திருஆனைக்கா-வெண்நாவல்

     திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள திருஆனைக்கா என்னும் சிவத்தலம் பண்டைச் சோழ மன்னரால் பெரிதும் கொண்டாடப்பட்ட தென்பர். ஈசனார்க்குப் பல மாடக் கோயில் கட்டி மகிழ்ந்த கோச்செங்கட் சோழன் சிவனருள் பெற்ற இடம் திரு ஆனைக்காவே யாகும்.5 காவிரிக்கரையில் அமைந்த ஆனைக்காவில் இறைவன் வெண்ணாவல் மரத்தில் விளங்கிய தன்மையையும், சோழ மன்னனுக்கு அருள் புரிந்த செம்மையையும் திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

         “செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்

         அங்கட் கருணை பெரிதா யவனே

         வெங்கண் விடையாய்எம் வெணாவலுளாய்

என்று தேவாரத்தால் வெண்ணாவலே ஈசன் கோயில் என்பது நன்கு

விளங்குகின்றது. இக் கோயில் வடமொழியில் ஜம்புகேசுரம் எனப்படும்.

சாத்தமங்கை-அயவந்தி

     இக் காலத்தில் செய்யாத்த மங்கையென வழங்கும். திருச்சாத்த மங்கை தேவாரப் பாடல் பெற்ற பழம்பதி. அழகிய சோலை சூழ்ந்த அப்பதியினை

ஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி” என்று சேக்கிழார்

குறித்தருளினார். சாந்தை என்பது சாத்த மங்கையின் குறுக்கம். அப்

பதியில் அமைந்த திருக்கோயிலின் பெயர் அயவந்தியாகும். “அந்தண்

பொழில்புடைசூழ் அயோகந்தி என்று திருநாவுக்கரசர் குறித்துப் போந்த ஆலயம் இதுவே.

     அயவந்தியில் அமர்ந்து அடியாரது அரந்தை கெடுத்தருளும்

இறைவனை,

       “கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம்

        அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே

என்று திருஞான சம்பந்தர் பாடி யருளினார். எனவே, அயவந்தி என்பது

சாத்தமங்கையில் உள்ள ஆண்டவன் கோயில் என்பது இனிது அறியப்படும்.

கறையூர்-பாண்டிக்கொடுமுடி

     கொங்கு நாட்டைச் சேர்ந்த திருப்பாண்டிக் கொடுமுடி பாடல்

பெற்றதொரு பழம்பதி. காவிரியாற்றின் கரையில் இனிதமைந்துள்ள இப் பதியை,

         “பரந்திழி காவிரிப் பாங்கர்ப்

         காண்டிக் கொடுமுடி யாரே” என்று பாடினார் திருஞான சம்பந்தர். இங்ஙனம் ஈசனார் அமர்ந்தருளும் பாண்டிக் கொடுமுடி என்னும் திருக்கோயில் கறையூர் என்ற ஊரைச் சேர்ந்த தென்பது தேவாரப் பாட்டால் விளங்குவதாகும்.

         “கற்றவர்தொழு தேத்தும் சீர்க்கறை

         யூரில் பாண்டிக் கொடுமுடி

         நற்றவா உனைநான் மறக்கினும்

         சொல்லும்நா நமச்சி வாயவே

என்பது சுந்தரர் தேவாரம். இக் காலத்தில் கறையூர் என்னும் பெயர்

மறைந்து, கெடுமுடி என்ற கோயிற் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.

எனினும், இறைவன் கறையூரில் உறைகின்றான் என்பது,

        “கறையூர் கருப்பறியல் கன்றாப் பூரும்

        கயிலாய நாதனையே காண லாமே

என்ற திருநாவுக்கரசர் வாக்கால் தெளியப்படும்.

திருந்துதேவன்குடி-அருமருந்து

    இந் நாளில் வேப்பத்தூர் என வழங்கும் திருந்து தேவன் குடியில்

அமைந்த ஈசன் கோயில் அருமருந்து என்னும் பெயர் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. அருமருந்துடைய  ஆண்டவனைப் பாடினார் திருஞான சம்பந்தர்.

       “திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி

       அருமருந்தாவன அடிகள் வேடங்களே

என்று அவர் பாடியுள்ள பான்மையால் அருமருந்து என்பது முதலில் இறைவன் திருநாமமாக அமைந்தது. பின்பு அவர் கோயில் கொண்ட தலத்தைக் குறிப்பதாயிற்றென்று தோற்றுகின்றது.

நல்லூர்-பெருமணம்

  சைவ உலகம் தலைக்கொண்டு போற்றும் திருத் தொண்டராகிய

திருஞான சம்பந்தர் இறைவனது சோதியிற் கலந்த இடம் நல்லூர்ப் பெருமணம் என்று அவர் வரலாறு கூறுகின்றது. நல்லூர் என்னும்

ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் பெயர் பெருமணம் என்பதாகும்.

       “நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய

       வேதன் தாள்தொழ வீடெளி தாமே.”

என்று திருஞான சம்பந்தர் பாடுதலால் இவ்வுண்மை விளங்கும். பெருமணம் என்னும் சிறந்த திருக்கோயிலைத் தன்னகத்தே யுடைய நல்லூர், பெருமணநல்லூர் என்றும் வழங்கலாயிற்று. இந் நாளில் அப் பழம் பெயர்கள் மறைந்து ஆச்சாபுரம் என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது.

நாகை-காரோணம்

    காரோணம் என்னும் பெயர் பூண்ட திருக்கோயில் தமிழ் நாட்டில் மூன்று உண்டு. அவற்றுள் ஒன்று, சோழநாட்டுக் கடற்கரையில் அமைந்த நாகப்பட்டினத்தில் உள்ளது. தேவாரத்தில் அது ‘கடல் நாகைக் காரோணம்’ என்று போற்றப்படும்.

     “கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதியேத்தப்

     பெற்றவர் பிறந்தார் மற்றுப்பிறந்தவர் பிறந்திலாரே

என்று திருநாவுக்கரசர் அதன் பெருமையை எடுத்துரைத்தார். காயாரோகணம் என்னும் சொல் காரோணம் என மருவிற்றென்பர்.

குடந்தை-காரோணம்

    கும்பகோணம் என்னும் குடமூக்கில் பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று காரோணமாகும்.  

  “தெரிய வரிய தேவர் செல்வம்

         திகழும் குடமூக்கில்

         கரிய கண்டர் கால காலர்

         காரோணத் தாரே

என்று அத் திருக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.

கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் காசி விசுவநாதர் கோயில் என்னும் பெயர் கொண்டு விளங்கும் ஆலயமே பழைய காரோணம் என்பர்.

காஞ்சி-காரோணம்

    காஞ்சி மாநகரில் அமைந்த திருக்கோயில்களுள் ஒன்று காயாரோகணம். அயனும் மாலும் அந்தம் வந்துற்றபோது அங்குள்ள ஈசனிடம் ஒடுங்குதலால் காயாரோகணப் பெயர் அதற்கு அமைந்ததென்று காஞ்சிப் புராணம் கூறும்.6 “காஞ்சிக்கு உயிரெனச் சிறந்த உத்தமத் திருக்காரோணம்” என்று புராணம் கூறுமாற்றால் அதன் பெருமை இனிது விளங்குவதாகும்.

                    அடிக் குறிப்பு

1. “கண்ணுளார் கருவூருள் ஆனிலை

அண்ணலார் அடியார்க்கு நல்லரே”

திருஞான சம்பந்தர், தேவாரம்.

2. “கங்கைசேர் சடையான்தன் கருவிலிக்

கொங்கு வார்பொழில் கொட்டிட்டை சேர்மினே”

எனப் பணித்தார் திருநாவுக்கரசர்.

3. 224 / 1923.

4. வெள்ளடை யென்பது வெள்விடையின் திரிபென்று கொள்வாரும் உளர்.

5. மற்றொரு சோழமன்னன் காவிரியில் நீராடும்பொழுது கழன்று விழுந்த மணியாரத்தைச் சிவார்ப்பணம் செய்தலும், அது திருமஞ்சனக் குடத்திற் புகுந்து ஆனைக்காவுடையார்க்கு அணியாயிற் றென்பர். இதனை,

     “தார மாகிய பொன்னித் தண்துறை யாடிவிழுந்தும்

     நீரின் நின்றபடி போற்றி நின்மலா கொள்ளென

     ஆரங் கொண்ட எம்மானைக் காவுடை ஆதியை

என்ற சுந்தரர் தேவாரத்தால் அறியலாம்.

6.   “இருவரும் ஒருங்கே இறவருங் காலை

     எந்தையே ஒடுக்கி ஆங்கவர்தம்

     உருவம்மீ தேற்றிக் கோடலால் காயா

     ரோகணப் பெயர்அதற் குறுமால்”

          – காஞ்சிப்புராணம், காயாரோகணப் படலம்,6.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்