(ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – வைப்புத் தலங்கள் – தொடர்ச்சி)

கருந்திட்டைக்குடி


தஞ்சை நகரத்தைச் சேர்ந்த சிற்றூர்களில் ஒன்று கருந்திட்டைக்குடி, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அவ்வூர் சுங்கந் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் பெயர் பெற்றது. அது வைப்புத் தலங்களில் ஒன்றென்பது,“கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி” என்ற திருநாவுக்கரசர் பாட்டால் விளங்கும். அவ்வூர்ப் பெயர் இப்பொழுது கரந்தட்டாங்குடி என மருவி வழங்கும்.

தக்களூர்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்‘ என்று திருநாவுக்கரசரால் குறிக்கப்பெற்ற தக்களூர் இப்பொழுது காரைக்கால் நாட்டில் திருநள்ளாறு என்னும் பாடல் தக்களுர் பெற்ற பதிக்கு அருகேயுள்ளது. திருநள்ளாற்று நாதனை வழிபட்ட திருஞான சம்பந்தர் அதனருகே அமைந்த பல பதிகளையும் வணங்கிச் சாத்தமங்கை சார்ந்தார் என்று சேக்கிழார் கூறுதலால்,தக்களூரும் அவரால் வழிபடப்பட்டதென்று கொள்ளத் தகும்.

துடையூர்
திருநாவுக்கரசர் அருளிய தலக்கோவையில் துடையூர் என்பது ஒரு தலம். “துறையூரும் துடையூரும் தொழ, இடர்கள் தொடரா வன்றே” என்னும் திருப்பாசுரப் பகுதியில் துடையூர் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வூர் பழமையான சிவத்தலம் என்பது சாசனத்தாலும் அறியப்படும். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த இலால்குடி வட்டத்திலுள்ள துறையூரே பழைய துடையூராகும். இது பாடல் பெற்ற பாச்சில் (திருவாசி) பதிக்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள திருக்கோயில் கடம்பந்துறை என்று சாசனம் கூறுகின்றது.11

மூவலூர்
மூவலூர் என்னும் ஊரும் இறைவன் கோவில் கொண்ட இடங்களுள் ஒன்றென்பது “மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்மினே” என்றும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். இவ்வூர் மாயவரம் என்னும் மயிலாடு துறைக்கருகே காவிரி யாற்றங்கரையில் உள்ளதென்று திருத்தொண்டர் புராணம் கூறும். இந்நாளில் குற்றாலம் என வழங்கும் திருத்துருத்தியில் அமர்ந்த பெருமானை வழிபட்டுப் பதிகம் பாடிய திருஞான சம்பந்தர், “மூவலூர் உறை முதல்வரைப் பரவி12ப் பின்பு திருமயிலாடு துறையினில் வந்தார் என்று கூறப்படுதலால் பாடல் பெற்ற துருத்திக்கும் மயிலாடு துறைக்கும் இடையே அமைந்தது மூவலூர் என்பது இனிது விளங்குகின்றது. புன்னாக வனம் என்று புராணங்களிற் பேசப் படுகின்ற மூவலூர் மாயவரத்துக்கு அண்மையில் உள்ளது.


முழையூர்
பழையாறையும் முழையூரும் பரமன் கோயில் கொண்டருளும் பதிகள் என்பது, “முழையூர் பழையாறை சத்தி முற்றம்” என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் தெரியலாகும். பாடல் பெற்ற பழையாறையும் வைப்புத் தலமாகிய முழையூரும் ஒன்றை யொன்று அடுத்துள்ள இடங்களாகும்.

சேலூர்
காவிரி நாட்டுத் தலங்களுள் ஒன்று திருச்சேலூர், திருத்தொண்டர் புராணம் இத்தலத்தைக் குறிக்கின்றது. திருப்புள்ள மங்கையில் ஈசனை வழிபட்டுப் பாமாலை திருஞான சம்பந்தர் சேலூரைச் சேவித்துத் திருப்பாலைத் துறை என்னும் பதியைச் சேர்ந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.13 இவ்வூர் தஞ்சை நாட்டுப் பாபநாச வட்டத்திலுள்ள தேவராயன் பேட்டையே என்பது சாசனத்தால் தெளிவுறுகின்றது.14 இங்குள்ள திருக்கோயிற் கல்வெட்டுகளில் திருச் சேலூர் மகாதேவர்க்குப் பழங்காலத்தில் மன்னரும் பிறரும் விட்ட நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன.15 அக்காலத்தில் இஃது இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்த தென்பதும் விளங்கு கின்றது. இன்று அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் மச்சபுரீசுவரர் என வழங்கப் பெறுகின்றார். சேல் என்பது ஒருவகை மீனின் பெயராதலால் சேலூர் என்னும் ஊர் மச்சபுரி என வட மொழியில் பெயர் பெற்றது.16 எனவே, திருஞான சம்பந்தர் வழிபட்ட சேலூர்த் திருக்கோயில் தேவராயன் பேட்டை யிலுள்ள மச்சபுரி ஈசுவரர் கோயிலே என்பது தெளிவாகும்.

ஊற்றத்தூர்
திருச்சி நாட்டைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள ஊற்றத்தூரும் ஒரு பழைய சிவத்தலம் ஆகும். “உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்” என்றெடுத்துப் பாடினார் திரு நாவுக்கரசர். அவ்வூரில் அமர்ந்த இறைவன் தொகுமாமணி நாயகர் என்று கல்வெட்டுகளிற் குறிக்கப் படுகிறார்.17 பிற்காலத்தில் குலோத்துங்க சோழீச்சுரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. இரண்டாம் இராசராசன் அச்சோழீச்சுர முடையார்க்கு உழுத்தம்பாடியூரைத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டிற் காணலாம்.18 ஊற்றத்தூர் என்னும் பெயர் இக்காலத்தில் ஊட்டத்துர் ஆயிற்று.19

காட்டூர்
இன்னும், ஈசனார் கோயில் கொண்டருளும் ஊர்களுள் ஒன்று காட்டுர் ஆகும். “காட்டுர்க் கடலே, கடம்பூர் மலையே கானப் பேரூராய்” என்று சுந்தரர் காட்டுர் காட்டூரிலே காட்சி தரும் பெருமானைப் பாடிப் பரவினார். செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த மதுராந்தக வட்டத்தில் காட்டுர் என்னும் பழமையான பதி யொன்று காணப் படுகின்றது. அங்குள்ள ஈசன் கோவில் திருவள்ளிச்சுரம். அவ்வாலயத்திற்கு இராசராசன் முதலாய சோழ மன்னர் வழங்கிய நிவந்தங்களைச் சாசனங்களிற் காணலாம்.20 எனவே, சுந்தரர் குறித்தருளிய இப்பழம் பதியாயிருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது.


குண்டையூர்
இந்நாளில் திருக்குவளை என வழங்கும் கோளிலி என்னும் பழம் பதி மூவராலும் பாடப் பெற்றதாகும். அவ்வூரின் அருகேயுள்ள குண்டையூர் இனிய சோலை சூழ்ந்த மருத நிலத்தில் அமைந்திருந்த தென்பது சுந்தரர் திருப்பாட்டால் விளங்குகின்றது. அங்குச் சுந்தரர் உணவுப் பொருளாகிய நெல்லை இறைவனிடம் வேண்டிப் பெற்றார்; அதனைத் தம் வீட்டிற் சேர்ப்பதற்கு வேலையாட்கள் இல்லாமையால் திருக்கோளிலிப் பெருமானிடம் போந்து தம் குறையை முறையிட்டார்;
“கோளிலி எம்பெருமான்
குண்டை யூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான்
அவை அட்டித்தரப் பணியே”

என்று பாடினார். இவ்வாறு சுந்தரர் தேவாரத்தில் வைப்புத் தலமாகக் குறிப்பிட்டுள்ள குண்டையூர், இக்காலத்தில் தஞ்சை நாட்டில் நாகப்பட்டின வட்டத்தில் குன்னியூர் என்னும் பெயரோடு விளங்குகின்றது. –


சடைமுடி
திருநாவுக்கரசர், “சடைமுடி சாலைக்குடி தக்களூர்” என்று குறித்தருளிய பாசுரத்திலுள்ள சடைமுடி என்ற ஊர் இப்பொழுது கோவிலடி என வழங்குகின்றது. திருச்சடை முடியுடைய மாதேவர் கோயில், பழைய திருப்பேர் நகரத்தின் ஒருசார் அமைந்திருந்ததென்பதும், அக்கோயில், திருப்புறம் என்று பெயர் பெற்று இருந்த தென்பதும் சாசனங்களாற் புலனாகும்.21 திருப்பேர் நகரம் ஆழ்வார்களாற் பாடப்பெற்ற பெருமாள் கோயிலையும் உடையது. சடை முடியார் கோயில் திருமால் கோயிலுக்குக் கிழக்கே அரை கல் தூரத்தில் உள்ளது.


சிவாலயமாகிய திருப்புறத்தையுடைய நகர்ப் பகுதி திருப்பேர்ப்புறம் என வழங்கிற்று. பண்டைத் தமிழ் மன்னர் காலத்தில் ஒரு பெரும்போர் நிகழக் கண்டது அவ்வூர். கோச்செங்கட்சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர நாட்டு மன்னனை வென்று சிறை பிடித்த களம் திருப்பேர்ப் புறமாகும். எனவே, சைவ, வைணவக் கோயில்களை யுடைமையால் சிறப்புற்ற திருப்பேர் என்ற ஊர் சரித்திர சம்பந்தமும் உடையதென்று தெரிகின்றது.

அடிக் குறிப்பு

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), ஊரும் பேரும்

  1. செ.க.அ.(M. E. R.), 1937-38.
  2. திருஞான சம்பந்தர் புராணம், 486, 487.
  3. இன்னிசைத் தமிழ் புனைந்திறைவர் சேலூருடன் பன்னுபாலைத் துறைப் பதிபணிந் தேகினார்
  4. இவ்வூர், கோயில் தேவராயன் பேட்டை எனவும் வழங்கும். பண்டார வாடைக்கு அருகேயுள்ளது. இதற்கு ஒரு கல் தூரத்தில் இராசகிரி என்னும் இராசகேசரி சதுர்வேதி மங்கலம் அமைந்திருக்கின்றது.
  5. ஏ.ஆர்.இ. (A. R. E.), 1923 ப. 99. 16. சேல்-கெண்டை மீன்.
  6. 492 / 1912.
  7. 531 /1912.
  8. ஊற்றத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ஊறை எனவும் குறுகி வழங்கும். இவ்வூரைத் தலைநகராகக் கொண்ட நாடு ஊறை நாடு எனப்பட்டது. ஊறைப் பதிற்றுப்பத் தந்தாதி” என்னும் பெயரால் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய பிரபந்தம் ஊற்றத்துரைப் பற்றியதாகும். (மீ. ச. முதற்பாகம், 22.)
  9. தெ.இ.க.(S. I. I.), தொகுதி.4,பக்கங்கள் 307-08.
  10. ஆராய்ச்சித் தொகுதி, ப. 245.