எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!
எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி
– வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!
தங்கள் ஆசைகளை மக்கள் கருத்துகளாகவும் கட்சித் தொண்டர்கள் அல்லது பொறுப்பாளர்கள் கருத்துகளாகவும் கதைவிடும் இதழ்களில், செயலலிதா, எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்து, வாசனுக்குப் புத்தி புகட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 அகவை முதியவரான எசு.ஆர்.பாலசுப்பிரமணிம்போல் பதவி ஆசை கொள்ளாமல் கட்சி நலன் கருதுபவர் என இதன் மூலம் வாசனுக்குப் பெருமைதான் சேர்ந்துள்ளது.
காங்கிரசு அல்லது தமாகா வில் இருந்துகொண்டே அதிமுகவாக நடந்து கொண்ட எசு.ஆர்.பாலசுப்பிரமணியம் அக்கட்சியில் சேர்ந்ததே நல்லது. ஆனால், முதலில் அக்கட்சியில் சேரவில்லை எனக் கூறி வந்தவர், பதவிப் பேரம் முடிந்ததும் சேர்ந்து பதவியும் பெற்றுள்ளார். வாசன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் – தன் கட்சி தோல்வியைச் சந்தித்தாலும் – கண்டிப்பாக மாநிலங்களவை உறுப்பினராவர் என்பது தெரியும். ஆனால், பதவிப்பற்றைவிடக் கட்சி அடையாளத்தைக் காப்பதில் கருத்துசெலுத்தினார்; தனக்குப்பதவி கிடைப்பதைவிடக் கட்சியினருக்கு மதிப்பு இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே, அதிமுக கட்சிச்சின்னத்தில் போட்டியிட்டு, அடையாளத்தை இழந்து பதவி பெறுவதைவிடக் கட்சியின் தன் மதிப்பே உயர்ந்தது எனக் கருதினார். அதிமுக தலைவி, பலருக்கு அடைக்கலம் தருவதுடன் பதவியும் தருபவர் என்பது அறிந்த ஒன்றுதான். கூட்டணி உடன்பாட்டின் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது உறுதியாக வரக்கூடியது. இன்றைக்குக் கட்சிமாறிக்கு வழங்கப்பட்ட பதவி மூலம், கட்சி நலன் கருதி இவ்வாய்ப்பைத் துறந்தவர் என்ற தன்மான உயர்வை வாசன் பெற்றுள்ளார்.
இதனால் கட்சியில் சலசலப்பு எதுவும் இல்லை என்றும் கட்சித்தலைவர் பற்றிய பெருமித உணர்வு ஏற்படுவதாகவும், பதவி வணிகர்கள் சிலர் இங்கில்லாமல் வேறு கட்சிகளுக்குச் செல்வதன் மூலம் கட்சி தூய்மையடையும் என்றும் தமாகா தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply