70kaiyuuttu,curruption

ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள்

 “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது   வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம்

 திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது. இதற்குக் காரணம் இப்பகுதியில் புறவழிச்சாலை வரும் என்பதால்தான். இதனால் வேளாண் நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது. மனைவணிக உரிமையாளர்கள் தாங்கள் பதிவு செய்;யும் விற்பனைப் பத்திரங்களை முதலில் பதிவு செய்ய இடைத்தரகர்கள் மூலம் சார்பதிவாளருக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் கவனிப்பு செய்கின்றனர். இதனால் அவர்களின் பத்திரங்கள் முறைகேடாக இருந்தாலும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

 கவனிப்பு அதாவது கையூட்டு தராத பத்திரங்கள் இருந்தால் அவற்றில் பிழை கண்டுபிடித்து அதனைத் திருத்திவாருங்கள் எனக்கூறி அலைக்கழிக்கின்றனர். வில்லங்கச் சான்றுகளுக்கு விண்ணப்பித்தால் அலுவலக ஊழியர்ளே இரண்டாயிரம் வரை கையூட்டு கேட்கின்றனர். ஆனால் உரூ.400க்கு மட்டுமே பெறுகைச்சீட்டு வழங்குகிறார்கள். காரணம் கேட்டால் வில்லங்கச் சான்றிதழ் கிடைக்காது. நிலத்தின் மதிப்பைக் குறைத்துப் பதிவு செய்வதற்கு ஒரு விலை! வில்லங்கத்தை மறைத்து வில்லங்கச் சான்று வழங்க ஒரு விலை! என இடைத்தரகர்கள் காட்டில் பணமழை பொழிந்து வருகிறது. வாங்கிய பணத்திற்கு நம்பிக்கைக்கேடு செய்யமாட்டார்கள். இதற்குச் சான்றாக இரவு 7.00 மணிக்குமேல் தான் இந்த அலுவலகங்கள் செயல்படும். பகல்வேளைகளில் நிகழ்பதிவி(வாட்சு-அப்), முகநூல் போன்றவற்றைப் பார்த்து மகிழ்வார்கள். இந்த அலுவலகத்திற்குப் பணம் இப்படித்தான் வாங்கவேண்டும் என வரையறுத்துச் சென்றவர் கன்னிபரமேசுவரி என்ற சார்பதிவாளர். இவர் இப்பகுதியில் பூலத்தூர், அகமலை, கூக்கால் எனப் பல இடங்களில் பலகோடி சொத்துக்கள் வாங்கியுள்ளார். அடித்த கொள்ளை போதும் என்று தற்பொழுது சாணார்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம்

  நிலக்கோட்டை நிலக்கிழாராக வலம் வருபவர்   வட்டாட்சியர். இவர் இரவு, பகல் பாராமல் 24 மணிநேரமும் வலம் வந்து கொண்டே இருப்பார். இதற்காக இவருக்குத் தலைமையமைச்சர் தலைமையில் விரைவில் விருது வழங்கப்படும் என அலுவலக ஊழியர்கள் சான்று அளிக்கிறார்கள். அதிகாலை 5.00 மணிக்கே மணல் அள்ளும் இடங்கள், கற்சுரங்கங்கள் சென்று சல்லிக்கற்கள் கொண்டு வரும் இழுவைகள், செங்கல் சூளைகளுக்கு வேண்டிய மணல், மண்பாண்ட தொழில்களுக்கு வேண்டிய மணல் என அனைத்து வண்டிகளையும் ஆய்வு என்ற பெயரில் நிறுத்திப் பணத்தை வாங்குவதில் சாதனை படைத்து வருகிறார். இவருக்கு  கணவாய்பட்டி ஊர்ச்செயல் அலுவலர், விராலிப்பட்டி ஊர்ச்செயல் அலுவலர் கண்ணாபட்டி ஊர்ச்செயல் அலுவலர் சந்தியா ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். வைகை ஆற்றுப்படுகையில்; அமைந்துள்ள குருவிநத்தம், அணைப்பட்டி, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து வரும் மணல் ஏற்றிவரும்   உழுவை,   சுமையூர்திகளுக்கு 25,000 முதல் 50,000 ஆயிரம் உரூபாய் வரை கப்பம் பெறுகிறார்கள். இதன் தொடர்பாக அவருடைய பேசி எண்ணான 944500081 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோம். அவருடைய ஓட்டுநர் அலைபேசியை எடுத்து, “ஐயா, கோப்பு பார்த்துக்கொண்டிருக்கிறார். முடிந்தவுடன் கூறுகிறேன்” எனக்கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இவ்வாறாகத் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் ஏரிகளில் நீர் வறண்டும் நீர் ஆதாரம் பாதிப்படைகிறது. பாசனக் கிணறுகளிலும், ஆழ்துளைக்கிணறுகளிலும் நிலத்தடி நீர் வறண்டுவிட்டது. கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் உழவர்களும் தங்களது விளைநிலங்களில் உள்ள மண்ணை விற்பனை செய்கின்றனர். நிலங்களில் மண் அள்ளப்படுவதால் மழைக் காலங்களில் சாகுபடி செய்யாத நிலை உருவாகிறது.

அதிரும் மின்வாரிய ஊழல்

  தேனி மாவட்டம், தேவதானப்பட்டி மின்வாரியத்தில் நடக்கும் ஊழலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி முதலான ஊர்கள் தேவதானப்பட்டி மின்வாரியத்தின் கீழ் இயங்கி வருகின்றன. தேவதானப்பட்டி மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களை இப்பகுதி மக்கள் பட்டியலிடுகின்றனர். தேவதானப்பட்டியில் வீட்டுகளுக்கு மின் இணைப்பு வகை 1இலும், கடைகளுக்கு   வகை 5இலும், புதியதாக வீடு கட்டுபவர்களுக்கு வகை 6இலும் உள்ளன. வீடு கட்ட வகை 6இன்படி அலகு ஒன்றுக்கு உரூ10.50 பெறப்படுகிறது. இதனால் புதியதாக வீடுகட்டுபவர்கள் முதலில் வகை 6இன்படி மின் இணைப்பு வாங்கி அதன் பின்னர் வீடு கட்டிய பின்பு வகை 1ஆம் எண்ணிற்கு மாற்றிவிடுவது வழக்கம். இதே போல் இலவச மின்சாரத்திற்குப் பதியவேண்டும், பெயர்மாற்றம் செய்யவேண்டும், புதியதாக மின் இணைப்பு வாங்கவேண்டும் என்றால் அனைத்துப் பிரிவுகளுக்கும் மின்வாரியத்தில் கையூட்டு அளிக்கப் பட்டியல் வைத்துள்ளார்கள். இதற்கு உடந்தையானவர்களுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும். தவறும் நேர்வில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க இயலாது. மின்வாரியத்தின் பணிபுரியும் உதவிச்செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் ஆகியோர் தன் கீழ்ப் பணிபுரியும் 7 மின்கம்பியரைப் பணம் பெற நியமித்துள்ளார். அவர்கள் இலவச மின்சாரம் புதியதாக இணைப்பு பெறுவதற்கு உரூ.4000 பெறுகின்றனர். பெயர் மாற்றம் செய்ய 400 உரூபாய்தான் அரசு வரையறுத்துள்ளது.. ஆனால் அதற்கு 2000 உரூபாய் தர வேண்டும். புதிய மின்இணைப்பு வாங்க வெறும் 600 உரூபாய்தான். அதற்கு 2,000 உரூபாய் தர வேண்டும். கட்டுமானம் கட்டுபவர்கள் 10,000 உரூபாய் முதல் 20,000உரூபாய் வரை தர வேண்டும்.

 இதே போல இப்பகுதியில் நடக்கும் திருமண விழாக்கள், காதுகுத்துதல், திருவிழாக்கள் என எதுவானாலும் கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு மின்கம்பியருக்கு 2000உரூபாயும், உதவிப்பொறியாளருக்கு 5,000 உரூபாயும் கப்பம் கட்டவேண்டும். இவை தவிர சாலையோரக் கடைகள் மின் இணைப்பு பெற பல விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் பணம் கொடுத்தால் தளர்த்தப்பட்டு நூற்றுக்கணக்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு மேற்கொண்டால் போலி வரவுச்சீட்டு மூலம் பெறப்பட்ட மின்இணைப்புகள் புலனாகும்.

பெரியகுளம் நில அளவையர்

  பெரியகுளத்தில் நிலத்தை அளப்பதற்கு நிலஅளவையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலத்தை அளப்பதற்கு மூன்று வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதாவது உடனடி, விரைவு, இயல்பு எனவாகும். உடனடியாக நிலத்தை அளக்கவேண்டுமானால் அதற்குஉரூ.20,000 முதல் 25,000 வரையும், விரைவு என்றால் உரூ 10,000 முதல்.15,000 ஆயிரம் வரையும் தர வேண்டும்.   இயல்பு என்றால் அளப்பதே கிடையாது. இதே முறையைப் பின்பற்றி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரியும் மகேசு என்ற நில அளவை வட்டாட்சியர் ஊழல் பணத்தில் குளித்து வருகிறார்.

அனைத்து மகளிர் காவல்நிலையம்

  அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பொதுவாக பொய்வழக்காக மணக்கொடை(வரதட்சணை) வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதற்கு எந்தவித விசாரணையுமின்றி வழக்கு பதிவு செய்து கைது செய்வார்கள். கைது செய்யப்பட்ட பின்பு பிணையில் வெளிவந்து அதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கை பார்த்துக்கொள்வார்கள். இதற்கு விதிவிலக்காக நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மணக்கொடை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் நிபந்தனைப் பிணையில் கையெழுத்திடவேண்டும். அதற்கு 200 பக்க ஏடு ஒன்றை வாங்கிக்கொடுத்து அதில் நாள்தோறும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் போல் உள்ளேன் அய்யா எனக்கூறி கையெழுத்திடுவார்கள். கையெழுத்திட்ட பின்னர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், சார்-ஆய்வாளர், தலைமை எழுத்தர் ஆகியோர் தங்கள் வீட்டிற்கு வேண்டிய மளிகைப்பொருட்கள், கரிக்கோல், மை எழுதி, தாள், வணிகப் பெயர் பொறிக்கப்பட்ட புலவு சாப்பிட்டு முடித்தவுடன் பெப்சி-கோக்கு மற்றும் வெற்றிலைச்சுருள் வாங்கிச் சுவைத்து விட்டு நிபந்தனைப் பிணையில் கையொப்பம் போட வருபவர்களிடம் அன்றாடம் வாகனத்திற்கு எரிபொருள் போடவேண்டும் என பணத்தைக் கறந்துவிடுவார்கள் எனப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.

வேளாண்மைத்துறை

  தேனி மாவட்டத்தில் கையூட்டு கொழிக்கும் துறைகளில் முதன்மை வகிப்பது வேளாண்மைத்துறையும், தோட்டக்கலைத்துறையும்தான். வெட்டாத கிணறு, கட்டாத வீடு, போடாத சாலை என அனைத்திற்கும் பணம் பார்க்கும் துறை இந்தத்துறை. தேனியில் வேளாண்மைத் துறை உதவிச் செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. உழவர்களுக்கு அரசு வழங்கும் நல்கைகள் இந்த அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. உழுபொறி மற்றும் வேளாண்பொருட்களை உழவர்கள் ஏதேனும் முகவாண்மையிடம் நல்கையைக் கழித்துத் தொகையை மட்டும் செலுத்திவிட்டு இடுபொருட்களை வாங்கிக்கொள்வார்கள். தொடர்பான முகவாண்மை இந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை அளித்து, நல்கை கழித்து உழவர்களுக்கு வழங்கி இடுபொருட்களான மீதத்தொகையை பெற்றுக்கொள்வது வழக்கம். அந்த வகையில் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் தனியார் முகவாண்மை வைத்துள்ள வேலுச்சாமி என்பவருடைய மகன் இரவிச்சந்திரன் உழவர்களுக்கு நல்கையில் இடுபொருட்கள் வழங்கியது தொடர்பாக தனது முகவாண்மைக்குக் கிடைக்கவேண்டிய தொகையைப் பெறுவதற்காகத் தேனி வேளாண் உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தார்.

  இரவிச்சந்திரனுக்குச் சேரவேண்டிய உரூ.2இலட்சத்து 45 ஆயித்திற்கான வங்கி வரைவோலை உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பே வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வரைவோலையை கொடுப்பதற்கு உரூ.25 ஆயிரம் கையூட்டு கொடுக்கவேண்டும் என்று இரவிச்சந்திரனிடம் அங்கு வேலை பார்க்கும் உதவிப் பொறியாளர் இராதாகிருட்டிணன் கேட்டுள்ளார். இதுகுறித்து இரவிச்சந்திரன் தேனி ஊழல் ஒழிப்புக்காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்துக்காவல்துறையினர் அவரிடம் வேதியல்மை தடவிய உரூ.20 ஆயிரம் பணத்தைக் கொடுத்து அனுப்பினர். அந்தப்பணத்துடன் இரவிச்சந்திரன் தேனி வேளாண் உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது கையூட்டுப் பணத்தை உதவிச் செயற்பொறியாளர் வாங்கியபோது, தேனி ஊழல் ஒழிப்புக்காவல் துணைக்கண்காணிப்பாளர் சான் கிளமண்ட், ஆய்வாளர் முத்துராசு, சார் ஆய்வாளர் கோதண்டராமன் ஆகியோர் இராதாகிருட்டிணனனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

 70vaigaianeesu