(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்! – தொடர்ச்சி)

நிலம் பெயராப் பொருள்களாம் மரம், செடி, கொடிகளும், நீர்வாழ்வனவும், பறப்பணவும், நிலத்தில் ஊர்வனவும் நடப்பனவும் ஆகிய அனைத்தும், உயிர் உடைய பொருள்கள் என்ற ஒருமைப்பாட்டால் ஓர் இனம் எனக் கருதப்படினும், அவ்வுயிரினம் அனைத்திலும் மனித இனம் உயர்வுடையது எனக் கருதப்படுவதற்குக் காரணமாய் நிற்பது மனித இனம் பெற்றிருக்கும் பகுத்துணர் அறிவே ஆகும்.

தக்கனவும், தகாதனவும், ஏற்பனவும் மறுப்பனவும் கலந்தே காட்சி அளிக்கும் உலகில், தக்கன இன்ன தகாதன . இன்ன, ஏற்பன இன்ன மறுப்பன இன்ன எனத் தெளிவாக உணர்ந்து தக்கனவும் ஏற்பனவும் கொண்டு, தகாதனவும் மறுப்பனவும் கைவிடத் துணைபுரியும் அறிவினைப் பெற்றிருப்பதினாலேயே, மனித இனம் ஏனைய உயிரினத்தினும் சிறந்து விளங்குகிறது. ஆகவே, மனித இனத்திற்குச் சிறப்பளித்து நிற்கும் அவ்வறிவு மாசு படாப் பெருமை யுடையதாக இருக்கவேண்டும் என்பது இன்றியமையாதது. மனித இனத்திற்கு மாண்புதரும் அவ்வறிவு, அம்மனித உணர்வு, தான் விரும்பும் பொருள் மீதெல்லாம் சென்று அலைந்து கெட்டொழியாவாறு அணைபோட்டுத் தடுத்து, நல்லனவற்றின் மீது மட்டுமே நாட்டம் கொள்ளத் துணை நிற்றல் வேண்டும். அந்நிலையில்தான் அஃது அறிவு எனப்படும்; அதுதான் அதற்கு அழகும் இயல்பும். “சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரிஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு” என வள்ளுவர் வகுக்கும் அறிவின் இலக்கணம் காண்க.

அறிவின் அந்த இயல்பு, அதற்கு இயல்பாகவே வந்து வாய்ந்துவிடாது. அது அந்த அறிவினைத் தாங்கி நிற்கும் மனிதன் சார்ந்து நிற்கும் சூழ்நிலையினாலேயே உருவாகும்.

மனித இனம், தனித்தனியாக இருந்து வாழ இயலாது. மனித இனத்தின் தேவைகளும், அது வாழும் உலகச் சூழ்நிலையும் கலந்துறை, வாழ்விற்கே வழிகோலியுள்ளன. அவ்வாறு கலந்து வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒத்த இயல்புடையவராகிவிடார். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றாலும், அவரவர் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் அவரவர்பால் அமைந்து கிடக்கும் சிறப்புகள் வேறுபடுவதற்கு ஏற்ப, அவரவர் குணநலனும் வேறு பட்டே தீரும். ஆகவே, இவ்வியல்பால் நல்லவர்களையும், தீயவர்களையும் ஒருசேரக்கொண்டிருக்கும் உலகம்.

நல்லனவும், தீயனவும் தேர்ந்து உணர்வதே அறிவுக்கு இலக்கணமாம் என்றாலும், அவ்விலக்கணம் அதற்கு இயல்பாகவே உண்டாகிவிடாது. அது, அவ்வுணர்வைத் தன்னளவிலேயே பெற்றிருப்பதில்லை. அது, மக்கள் இனத்தோடு கலந்து பழகும் நிலையிலேயே அவ்வுணர்வைப் பெறுகிறது. அறிவு சார்ந்த தன் வண்ணம் ஆகிவிடும் இயல்புடையது. மனித இனம், தன்னைச் சார்ந்து நிற்பார் அறிவைத் தன்வயம், ஆக்கும் பேராற்றல் வாய்ந்தது. ஓரினத்தோடு-அது நல்லவர் இனமாயினும் சரி, தீயோர் இனமாயினும் சரி-அதனுடன் கலந்துவிட்ட பின்னர், கலந்துவிட்டவரின் அறிவு, அவ்வினத்தாரின் அறிவின் இயல்பினை ஏற்றுக் கொள்ளாது, தன் பண்டைய தனித் தன்மையை நிலைநாட்டி நிற்க இயலாது. கலந்தது நல்லோர் அவை ஆயின், அவ்வறிவு நல்லறிவாம். கலந்தது தீயோர் கூட்டமாயின் அவ்வறிவும் தீதாம்.

பெய்யும் மழை நீர்க்கு, அது மண்ணை அடையும் வரை சுவையும் கிடையாது, நிறமும் கிடையாது. அது மண்ணைத்-தொட்டவுடனே அதற்குச் சுவையும் கூடிவிடுகிறது; நிறமும் கலந்துவிடுகிறது. அவ்வாறு கூடும் சுவையும், கலக்கும் நிறமும் ஒரே இயல்புடையவை அல்ல. மழைநீர் தொட்ட மண்ணின் இயல்புக்கு ஏற்ப, வேறு வேறு சுவையும் வேறு வேறு நிறமும் வாய்த்துவிடுகின்றன. மழைநீர் தொட்ட மண் செம்மன்னாயின், நீர், செந்நீராகிறது; கருநிறமாயின் நீர் கருநீர் ஆகிறது; மழை தொட்ட மண் உவர்நிலமாயின், மழைநீர், ஒன்றிற்கும் உதவா உவர் நீராகிறது; ஆற்றுப் படுகையாயின், உண்ணத் தெவிட்டாச் சுவைநீர் ஆகிறது. இவ்வாறு சார்ந்த நிலத்தின் நிறம் சுவைகளைத்தான் ஏற்றுக் கொள்கிறதே ஒழிய, அந்நிலத்தின் நிறம் சுவைகளை மாற்றிவிடும் இயல்பு மழை நீருக்கு இல்லை.

இவ்வாறு. மழைநீர் தன்னளவில் நிறமும், சுவையும், பெறாது நிற்பினும், சார்ந்த நிலத்தில் சுவைகளுக்கு ஏற்ப மாறிவிடுவது போலவே, அறிவும், நன்மை தீமைகளை, அது தொடக்கத்தில் பெற்றிருக்கவில்லை எனினும், அது சார்ந்து நிற்கும் இனத்தின் ஈர்ப்பாற்றலுக்கு ஏற்ப நன்மை தீமைகளை ஏற்றுத் திரிந்துவிடும்.

தன்னோடு கலந்துவிட்டார் அறிவைத் தன்வயம் ஆக்கிவிடும் ஆற்றல் இனத்திற்கு இருப்பதாலும், அந்நிலையிலிருந்து மாறி எந்த இனத்தோடு சேர்ந்தாலும் தன் தனித் தன்மையை இழந்துவிடாது பெற்று நிற்கவல்ல ஆற்றலோ, தான்சார்ந்து நிற்கும் இனத்தின் இயல்பைக் கெடுத்துத் தன்வயம் ஆக்கும் ஆற்றலோ, அறிவுக்கு இல்லாததாலும், சார்ந்து நிற்கவேண்டிய இனத்தினைத் தேர்ந்துகொள்வதில் மனிதன் விழிப்பாயிருக்க வேண்டும்.

இது உவர்நிலம் ஆகவே ஈண்டுப் பெய்யக்கூடாது – இது நன்னிலம் ஆகவே கண்டுப் பெய்யலாம் என உணர்ந்து பெய்யும் அறிவு நிலையைப் பெற்றது அன்று மழை; அதனால் இடம் நோக்கிப் பெய்யாது, எங்கும் பெய்து, இரு நிலைகளையும் பெற்றுவிடும் மழை நீரைக் குறைகூற இயலாது; ஆனால், அறிவு அத்தகையதன்று; நல்லன தீயன உணரும் ஆற்றல் வாய்ந்தது. அதனால், அது, நல்லோர் தீயோர்களை இனங்கண்டு உறவு கொள்ளுதல் வேண்டும்: தீயோர் இனத்தினைக் குறுகாது நல்லார் இனத்தை நாடி அடையும் அறிவே நல்லறிவாம். இவ்வளவு அருமையான கருத்துக்களையும்-

நிலத்து இயல்பால் நீர் திரிந்தற்று ஆகும்; மாந்தர்க்கு

இனத்து இயல்பதாகும் அறிவு.” என்ற குறள் வெண்பாவால் உணர்த்தியுள்ளார் வள்ளுவப் பெருந்தகையார்

(தொடரும்)