எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 1/3 தொடர்ச்சி)
எப்படி வளரும் தமிழ்? 2/3
கல்வித் துறையில்
இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம் ஆட்சி செய்கின்றன. இந் நிலையில் தாய்மொழியுணர்வு தலை தூக்குமா? பிஞ்சு நெஞ்சங் களிலேயே மொழியுணர்வு வேரோடு கல்லியெறியப் படுகிறதே! அப்பேசும் பொற்சித்திரங்கள், தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றழைக்கும் இன்னொலி, நம் செவியில் தேனாக வந்து பாய வில்லையே! அயன்மொழி வேரூன்றிய அவ்விளைய உள்ளங்களிலே ‘என் மொழி தமிழ், நான் தமிழன்’ என்ற உணர்வுகள் எப்படி யரும்பும்? நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இவர்கள் வளர்ந்து உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள்வரை அயன் மொழியிலேயே பயில்வாராயின், தாய் மொழியில் அறிவியலை எவ்வாறு வளர்ப்பர்? இரண்டுங் கெட்ட நிலையிற்றானே தடுமாறுவர். அத்தி பூத்தாற் போல ஆங்கொருவர் ஈங்கொருவர், தமிழில் அறிவியல் வளங் காட்டுவார் உளரேயெனில், விதிவிலக்காக அவர் காணப்படுத லன்றி மற்றொன்றில்லை.
அரியணையில் அமர்ந்திருப்போர் தமிழ், தமிழ் என்று வாய்ப்பறை சாற்றினும் கல்வித் துறையிலிருந்து வெளிப்படும் ஆணைகள், அறிக்கைகள் எம்மொழியில் வருகின்றன? தமிழிலா வருகின்றன? அவ்வாணைகள், மாவட்டக் கல்வி அலுவலர்க்கே தெளிவாக விளங்காமல் தடுமாறச் செய்வதும் உண்டு. ஒரு மாவட்ட அலுவலர் ஒருவகையாகப் பொருள் கொள்ளுவார். அடுத்த மாவட்டத்தவர் வேறுவகையிற் பொருள்சொல்வார்; இறுதியில் தணிக்கைக்கு வருவோர், ‘இரண்டுந் தவறு’ என்று மற்றொரு புதுப் பொருள் தருவார். மொழி வளர்க்கும் பண்ணை யாகிய கல்வித் துறையே சீர்குலைந்திருக்கும்போது தமிழ் எவ்வாறு வளரும்?
அரசியல் துறையில்
புதிய கல்விக் கொள்கையிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. உண்மை நிலையை ஆய்ந்து, நடுவு நிலைமையுடன் கல்விக் கொள்கையை வகுத்து, அவ்வவர் தாய்மொழிக்கு ஆக்கந் தந்து, சிந்தனையில் ஒற்றுமையுணர்வு காண விழையாது, ஒரு மொழியால் ஒருமைப் பாட்டை வளர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். இவ்வெண்ணம் பன்மைப் பாட்டை வளர்க்குமே தவிர, ஒற்றுமை யுணர்வை வளர்க்காது. இக் கொள்கையில் அரசியல் நோக்கம் பொதிந்துளதே அன்றி அறிவு நோக்கம் காணப்படவில்லை. பல மொழிகள் வழங்கி வரும் ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மொழி கோலோச்ச விரும்பினால் சிறிதளவேனும் காணப்படும் ஒற்றுமையும் கருகி விடும் என்பதை உணராத அரசியலாலும் தமிழ் இரண்டாம் நிலை மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
மதத் துறையில்
தமிழ்நாட்டு மக்கள், வந்து புகுந்த இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம் என்று பல்வேறு மதங்களைத் தழுவி வருகின்றனர். தாம் தாம் விரும்பிய மதங்களை ஏற்றுக்கொண்டு, ஒழுகி வருவது அவ்வவர்க்கமைந்த உரிமை. தமக்குச் சிறந்ததாகத் தோன்றிய ஒன்றை வழிபாட்டுக்காக ஏற்றுக் கொண்டதுடன் அமையாது, அவ்வந் நாட்டுக்குரிய மொழிகளுக்கும் அடிமைப்பட்டு விட்டனர். தமிழர் என்ற உணர்வை அடியோடு மறந்து விட்டனர்; இழந்து விட்டனர்.
இந்து மதம் புகுந்தோர் சிரீநிவாஃசன், (ஞ்)சகந்நாதன், விருத்த கிரீஃசுவரன், பங்க(ஞ்)சாட்சி, பிரேமலதா, புஃட்பவல்லி என்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு, வடமொழிக்கு வால்பிடித்தனர். இசுலாம் மதத்தைச் சார்ந்தோர் ஃகாசா ஃகமீது, இசுமாயில், இரஃகீம், (ஞ்)சுமீலா, இரஃசீதா என்று அரபுமொழிக்கு மண்டியிட்டனர். கிறித்துவத்தை நம்பியோர் டேனியல், விக்டர், சார்சு, அனவுன் சியா, டெய்சி என்று ஆங்கிலப் பெயர்களுக்கு அடிமையாகினர். எம் மதம் பற்றினும் தமிழராக நின்று, தமிழ்ப் பெயர் களைச் சூட்டிக் கொள்வதால் வரும் குறையென்ன?
ஈண்டு உண்மை நிகழ்ச்சியொன்றைச் சுட்டிக் காட்டுவது பயன்தரும். மதுரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொறியியல் வல்லுநர் ஒருவர், ஈரான் ஈராக்கு முதலிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஆங்குத் தங்கியிருந்தபொழுது, அந் நாட்டவர் இவரை நோக்கி, ‘உங்கள் பெயரென்ன?’ என்று வினவினர்.
‘அப்துல்லா’ இவர் தந்த மறுமொழி.
‘ஏன் எங்கள் மொழியில் பெயர் வைத்துள்ளீர்?’ அவர்கள் வினா.
‘நான் முசுலிம்’ இவருடைய விடை.
‘அது தெரியும்; எங்கள் மொழியில் நாங்கள் பெயர் வைத்துக் கொள்கிறோம்; எங்களுக்கு அதன் பொருள் தெரியும்; உங்களுக்குப் பொருள் விளங்குமாறு உங்கள் மொழியில் அல்லவா பெயர் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்காரரா யிற்றே! தமிழிலல்லவா பெயர் வைத் திருத்தல் வேண்டும்?’ என்று வினவ, மறுமொழி தர வாயில்லாமல் இவர் பேசாதிருந்துவிட்டார்.
(இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா மலரில் வெளியிடப் பட்டது)
கவிஞர் முடியரசன்
(தொடரும்)
Leave a Reply