suvarotti_kavirimelaanmaiathikaaram

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல்    தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும்

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்

 பெமணியரசன் வேண்டுகோள்

  காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பில் (புரட்டாசி14, 2047/30.9.2016)  கருநாடக அரசின் சட்டமுரண்செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச்  செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது.

   நீதிபதிகள் தீபத்துமிசுரா யூ.யூ.இலலித்து அமர்வு, இது கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு அட்டோபர் 1 முதல்6 வரை தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கருநாடகத்திற்குக் கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது.

 நடுவண் அரசு அட்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுஅமைத்து அறிக்கை தரவேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந் தாழ்ந்த நீதி என்றாலும் தமிழ் நாட்டிற்குப் பயன் தரும் தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள்,அனைத்து வணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட  தமிழ் மக்கள் அனைவர்க்கும்இந்த வெற்றியில் பங்கிருக்கிறது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கான தலைமை வழக்கறிஞராகச் சேகர் நபாதே அவர்களை அமர்த்தியதிலிருந்து நம் தரப்பு வாதம் கூர்மையாக எடுத்து வைக்கப்பட்டது. நடுவண் நீர் வளத்துறை அமைச்சர் கூட்டிய இருமாநில முதலமைச்சர் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் அளித்தஅறிக்கையும் சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு  நம் பாராட்டுகள்.

 பக்குரா – பியாசு மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மைவாரியத்திற்கு வழங்க வேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு கூறுகிறது. இதில் தமிழ்நாடு அரசுவிழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். நடுவண் நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர், காவிரிமேலாண்மை வாரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சில கருத்துகளை    அண்மையில் கூறியிருந்தார். அதுபோல் எதுவும் நடந்தால் அந்தத் தவற்றை உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று சரி செய்திட  தமிழ்நாடு அரசு  தலையிட வேண்டும் .

  இத்தீர்ப்பை எதிர்த்துக் கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால் உடனடியாகப் படையினரை அனுப்பித் தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பெ. மணியரசன்

ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

இடம்: தஞ்சாவூர்