எழுக தமிழ்10 ; ezhuga-thamizh10

எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது!

 

  ‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், ‘கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக மிகையளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சூழல் இதுவாகும்’ என்பது.

  ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய மக்களாட்சி இடைவெளியைத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆக்கவழியிலான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளின் போக்கிலும், மிகையான உணர்ச்சியூட்டல்கள் இல்லாமல் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியப் பரப்பினால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை மீளவும் உறுதி செய்யக் கோரும் முகமாகவும் மக்கள் ‘எழுக தமிழ்’ப் பேரணியில் இணைந்திருந்தார்கள்.

  தேர்தல் அரசியலில் ஓரணியில் ஒன்றிக்கும் மக்கள், அதனைத் தாண்டிப் பொது நிகழ்ச்சி நிரலொன்றினூடான அரசியல் உரையாடல்களையும் – ஒன்றிணைவுகளையும் செய்வதற்கும் ஆயத்தமாக இருக்கின்றோம் என்றும் மீண்டும் இதன் மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென்னிலங்கை அளித்த வாக்குறுதிகள் பலவற்றிலிருந்து மெல்ல நழுவிச் செல்லும் செயலினைக் குறிப்பிட்டளவில் கண்டிக்கும் முகமாகவும் மக்கள் இணைந்திருக்கின்றார்கள்.

  இந்தக் கூட்டத்தில் 5000 பேர் கலந்து கொண்டிருந்தால், அதனை வெற்றிகரமான மக்கள் ஒருங்கிணைவாகக் கொள்ள முடியும் என்று கருதியிருந்தேன். ஆனால், அது 8000 பேரினையும் தாண்டியளவில் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆக, எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வெற்றி!

  ‘எழுக தமிழி’ல் ஒருங்கிணைந்த தமிழ் மக்கள் தனிக்கட்சிகளின் சார்பிலானவர்கள் அல்லர். அவர்கள், கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களில் 80 விழுக்காட்டினர். இதனை, எல்லாத் தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்! ஏனெனில், தேர்தல் வாக்களிப்புக்கு அப்பால், முறையான – தீர்க்கமான செய்திகளைச் சரியான வடிவத்தில் சொல்ல முயன்றால் அதன் பின்னால் மக்கள் இணைவார்கள் என்பதன் அடையாளம் இது.

  தாங்கள் செய்கின்ற பிழைகளை அல்லது தங்களின் தோல்விகளைச் சரியான கண்ணோட்டத்தில் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றவர்களுக்கு, ‘எழுக தமிழ்’ தலையாய செய்தியைச் சொல்லியிருக்கின்றது. “ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. மக்களிடம் தமது செய்திகள் சென்று சேரவில்லை” என்கிற பிதற்றல்களுக்கு அப்பால், மக்களின் நம்பிக்கையைப் பெறுதலே வெற்றிகளின் அடிப்படை. ஆக, இம்முறை ‘உதயன்’ எள்ளெண்ணெய் எரிக்குமாறு தொல்லை செய்த பின்னும் மக்கள் ஒருங்கிணைந்திருக்கின்றார்கள். இனி, உதயனின் தொல்லைகள் பற்றிய பிதற்றல்கள் தேவையற்றவை.

  ‘எழுக தமிழ்’, கட்சிகளினால் மட்டும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால் அது சில நூறு பேரோடு கடந்து போயிருக்கும். மாறாக, பொது அமைப்புக்கள் – கட்சிகள் ஆகியவை இணைந்து தமிழ் மக்கள் பேரவையூடாகப் பொதுத் தளத்திற்கு வந்ததன் மூலமே கிடைத்த வெற்றி இது. அந்த வகையில், ஓய்வூதியர்களின் உரையாடல் தளமாக இருந்த தமிழ் மக்கள் பேரவை, எதிர்பார்க்காத அளவிலான வெற்றியொன்றை முதல் தடவையாகப் பதிவு செய்திருக்கின்றது.

  இந்த வெற்றியில் சுரேசு பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கசேந்திரகுமார் பொன்னம்பலம், போராசிரியர் சிற்றம்பலம் முதலானவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், இஃது அவர்களின் தனிப்பட்ட வெற்றியில்லை; அவர்களுடைய கட்சிகளின் வெற்றியும் இல்லை.

  இந்தப் பேரணியில் தமிழரசுக் கட்சி பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், தேவையற்ற சில முயற்சிகளைச் செய்ய முனைந்து தமிழரசுக் கட்சியின் தலைமையாளர்கள் சிலர் மூக்குடைபட்டிருக்கின்றார்கள். அது, கட்சி என்கிற அளவில் கண்ணியக்குறைவாகவும் பதிவாகியிருக்கின்றது.

  இவ்வாறான காட்சிகளுக்கு அப்பால், ‘எழுக தமிழி’ன் முதல் வெற்றியைத் தொடர் வெற்றியாக மாற்றுவதற்கான படிமுறைகளைத் தமிழ் மக்கள் பேரவை எவ்வாறு செய்யப் போகின்றது என்பதில்தான் அதன் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

  இந்த வெற்றியைத் தனிப்பட்ட அரசியலுக்காகப் பயன்படுத்தி, தவறான அணுகுமுறையை யாராவது கையாள்வார்களானால் அது, முதல் வெற்றியோடு தோல்வியாகிப் போய் விடும். தமிழ் மக்கள் பேரவைக்கான வெளியும் இப்பொழுது இதன் மூலம் திறந்திருக்கின்றது. ஆனால், அந்த வெளியைப் பயன்படுத்துதல் என்பது பெரும் ஒப்படைப்புணர்வை(அர்ப்பணிப்பைக்) கோருவது. அதனை வெற்றிகரமாக அவர்கள் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆக மொத்தத்தில், ‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது!

– புருசோத்தமன் தங்கமயில்

நன்றி:  4 தமிழ் ஊடகம்                                                                                                                                                           புதிய யாழ்ப்பாணம்

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்