எழுக தமிழ் 17 : ezhuga-thamizh17

சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் எழுக தமிழ்போராட்டம்!

 

  தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார்.

  ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

  சிங்களப் படையினரின் தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழர் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்! தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்!

மாயமானவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு உதவி வேண்டும்

என்பன முதலான பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

“(தமிழினப்படுகொலைப்) போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தமிழர்களின் சிக்கல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலைமையை எடுத்துரைக்கவே இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது” என்று சி.வி.விக்கினேசுவரன் கூறினார்.

  தமிழ் மக்கள் தேசிய முன்னணி, பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பல்கலை மாணவர்கள், வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பேரணியில் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

  மைத்திரிபால சிறிசேன கடந்தாண்டு இலங்கைக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற பிறகு, வடக்குப் பகுதியில் பெரிய அளவில் பொதுமக்கள் கூடிப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்