எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!
எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!
காலங்கள்தோறும் தமிழுக்குக் கேடு செய்வோர் இருந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால், இப்பொழுது இணைய வசதிகளையும் ஊடக வாய்ப்புகளையும்கொண்டு அழிப்புப்பணிகளை விரைவாகச் செய்து வருகின்றனர். தமிழ்க்காப்பு உணர்வாளர்களில் ஒரு சாரார் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கின்றனர். மற்றொரு சாரார் இதைப்பற்றிக் கவலைப்படாமல் வீர உரையாற்றினால் போதும் என வாளாஉள்ளனர். சிலரே எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு உலகத் தமிழன்பர்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.
கிரந்தக் கிறுக்கர்கள்
ஒரு புறம் கிரந்தக் கிறுக்கர்கள் இருந்து கொண்டு அயலொலிகளைப் புகுத்தியும் அயற்சொற்களைத் திணித்தும் தமிழைச் சிதைத்து வருகின்றனர். இதற்குத் தொல்காப்பியரைத் தவறாகத் துணைக்கு அழைக்கின்றனர்
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” (தொல்காப்பியம் : எச்சவியல்.01)
என்னும் மொழியியலறிஞர் தொல்காப்பியர் கூறும் வகைப்பாட்டு அடிப்படையில் அயற் சொற்களைக் கலந்து கொள்ளலாம் எனத் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.
செய்யுளில்தான் வடசொல் குறித்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். எனவே, உரை நடையில் வடசொல் விலக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
செய்யுளிலும்,
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே!
என்னும் நூற்பா மூலம் தமிழுக்கு அரண் அமைத்துக் கொடுத்துள்ளார் மொழியறிவியலறிஞர் தொல்காப்பியர்.
இந்நூற்பாவை விளக்கும் உரையாசிரியர் இளம்பூரணர் ஆரியத்திற்கே உள்ள எழுத்தை நீக்கிவிட்டுத்தான் எழுத வேண்டும் என்கிறார். [“வடசொற்கிளவி என்று சொல்லப்படுவன ஆரியத்துக்கு உரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொது வாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல்”].
உரையாசிரியர் தெய்வச்சிலையார், வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தை நீக்கித்தான் தமிழில் எழுதவேண்டும் என்கிறார். [“வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ்மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்”.]
உரையாசிரியர் சேனாவரையர் வடசொல்லுக்குரிய சிறப்பெழுத்தை நீக்கித்தான் எழுத வேண்டும் என்கறிார்.[“சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம்”]
இந்நூற்பாவை மீண்டும் தெளிவாக விளக்கும் வகையில், “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” (தொல்காப்பியம்.சொல்.302) என்கிறார் மொழியறிவியல் அறிஞர் தொல்காப்பியர்.
இவற்றுக்கு விளக்கம் தரும் தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், “வேற்றுமொழிச் சொற்கள் சொல் வளத்திற்கு வேண்டப்படுவனோ என வினவலாம். ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால், இருவர் மொழியும் கலப்புறுதல் இயற்கை. ஆனால் அக்கலப்புக்கு வரையறையுண்ட. பெயர்ச்சொற்களைத்தான் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே அவ்வரையறை ‘இராமன்’ என்பது வடமொழிச்சொல். அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறின் கற்போருக்குத் தெளிவு தோன்றாது. ஆகவே, அதனைத் தமிழில் வழங்குதல் குற்றமின்று. ஆனால், வேற்றுமொழிச்சொல் தமிழோசைக்கு மாறுபட்டு இருப்பின் தமிழோசையூட்டியே சொல்லுதல் வேண்டும். அவ்வாறு சொல்வதனால் அச்சொல் வடிவில் சிதைந்தாலும் குற்றமின்று. விபீஷணன் – வீடணன் என வருதலும், கர்ணன் – கன்னன் என வருதலும் காண்க. ‘சிதைந்தன வரினும் இயைந்தன வரினும் இயைந்தன வரையார்’ என ஆசிரியர் தொல்காப்பியர் ஆணை தந்துள்ளமையைக் காண்க.” என்கிறார்.
வட சொல் என்பது சமற்கிருதம் மட்டுமல்ல வடக்கே இருந்த எல்லா மொழிகளுக்கும் பொரு்நதும். இன்றைக்கு இது தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் கூறுவதுபோல் அயல்எழுத்துகளை நீக்க வேண்டும் என்ற வகையில் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். அதனை மறந்து நாம் அயலெழுத்துகளையும் அயற்சொற்களையும் அழித்துத் தமிழுக்குச் சிதைவு ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.
கணிணி மூலம் கிரந்தம் புகுந்த பொழுது கடும்போராட்டத்திற்குப் பின்தான் தடை போட முடிந்தது. ஆனால் கிரந்தக் கிறுக்கர்கள் தமிழை ஒழிப்பதற்காகக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டுள்ளனர். தமிழன்பர்களால் மதிக்கப்பெறும் மறவன்புலவு சச்சிதானந்தம் தேவாரத்தைப் பரப்புவதாகக் கூறிக் கிரந்தத்தைத் திணித்துக் கொண்டுள்ளார். சங்கரமடத்தின் நிதியுதவியுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழரசர்கள் ஆட்சி செய்த தாய்லாந்து நாட்டுடன் கிரந்தத் திணிப்பிற்கு உடன்படிக்கை போட்டிருக்கிறார் என்னும் பொழுது இதன் தீமையை விளக்கத் தேவையில்லை.
தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி அயற்சொற்களை எழுதும்பொழுது மூலச்சொல் சிதைந்து போகலாம். அவ்வாறு சிதைந்த வடிவில் பிற மொழிச் சொற்கள் தமிழில் வரலாம். எனினும் அயலெழுத்திற்கேற்றாற்போல் இயைந்து வரக்கூடிய சொற்களைத் தமிழில் பயன்படுத்தக் கூடாது என நாம் எண்ண வேண்டும். இப்பொழுது நாம் அயல் சகர ஒலியைத் தமிழ்ச்சகர ஒலியால் குறிக்கின்றோம் அதுவும் தவறு. சான்றாக நாம் பாக்கிசுதான் என எழுதினால் தமிழ் எழுத்துகளில் சரியாக எழுதிவிட்டோம் என எண்ணுகிறோம். இதுவும் தவறு. பாக்கித்தான் என்றுதான் வரவேண்டும். சுடாலின் அல்லது இசுடாலின் என்பதும் தவறு. தாலின் என்றுதான் எழுத வேண்டும். இவையாவும் பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தும் பொழுதுதான். பிறவற்றிற்கு ஏற்ற தமிழ்ச்சொல்லையே நாம் பயன்படுத்த வேண்டும்.
தமிழ் தனக்குரிய முந்தைய சிறப்பான நிலையைப் பெற, தங்களைத் தமிழ் இனக் காவலர்களாகவும், தமிழ்த்தேசியவாதிகளாகவும் சொல்லிக் கொள்வோராவது முதலில் நல்ல தமிழில் எழுத வேண்டும். தங்கள் கட்சியினர், அமைப்பினர் முதலானோரையும் நல்ல தமிழில் எழுத வழிகாட்ட வேண்டும்.
ஒலிபெயர்ப்புப் போர்வையில் தமிழ்க்கொலைஞர்கள்!
ஒலிபெயர்ப்பின் மூலம் தமிழைச்சிதைக்க எண்ணுவோர் குறித்தும் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ் இணையக் கல்விக்கழகமே தட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது குறித்தும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடத்தியுள்ளோம் இது தொடர்பிலான முனைவர் இராமகி கட்டுரையும் கணிணி வல்லுநர் நாக.இளங்கோவன் செவ்வியும் ‘அகரமுதல’ இதழில் வெளியிட்டுள்ளோம். தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சார்பில் அரசிற்கும் முறையிட்டுள்ளோம். எனினும் இதனை முனைப்பாகத் தமிழன்பர்கள் அனைவரும் எதிர்த்தாக வேண்டும்.
இது குறித்து அண்மையில் பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சிகளின் சார்பான முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார். கேப்டன் செய்தி என்னும் தளபதி செய்தித் தொலைக்காட்சியில் “வாங்க பேசலாம்” என்னும் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கும் ஒரளவு விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்.
கிரந்தத்தைக் கணிணி மூலம் எப்படியாவது புகுத்த வேண்டும் எனத் துடிக்கும் சிறீரமணசருமா என்பவர்தாம் ஒலிபெயர்ப்பு போர்வையில் தமிழ்ச்சிதைவு முயற்சியில் முனைப்பாக இறங்கியுள்ளார். இது தொடர்பான முடிவெடுக்கும் குழுவில் அவரையே உறுப்பினராக்கி அவரது கருத்திற்கு அரசின் அறிந்தேற்பும் உள்ளது என்ற இரங்கத்தக்க நிலையைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏற்படுத்தி விட்டது.
தமிழக அரசு உடனே தலையிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீருரு(ஒருங்குகுறி) சேர்த்தியத்திற்கு எத்தகைய தனிப்பட்டவர் முன்மொழிவிற் கிணங்கவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உலகத் தமிழர்களின் கருத்திற்கிணங்கத்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் மூலமாக வரும் முன்மொழிவுகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்க வேண்டும்.
தமிழக அரசு தமிழ்ப்பகைவர்களின் கைப்பாவையாக இருக்க்க்கூடாது. உலகெங்கிலும் உள்ள தமிழ்ப்பற்றும் தமிழ்நலப்பற்றும் கொண்ட தமிழறிஞர்கள் கருத்தைக் கேட்டு அதற்கேற்பவே முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்த்தாயின் உறுப்புகளைச் சிதைப்பவர்களைக் கைது செய்க!
இந்திய அரசு, அரசமைப்புச் சட்டப்பிரிவு 29(1)இன் கீழ் மொழிகளின் எழுத்து வடிவத்திற்கும் மொழிக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்த்தாயின் உறுப்புகளைச் சிதைக்க ஒவ்வொரு மனநோயாளியாகப் புறப்பட்டுக் கொண்டு வருகிறான். தமிழ் வடிவங்கள் அறிவியல் முறைப்படி வந்தன என்பது குறித்த கட்டுரை இவ்விதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை, தி.ஆ.2041 இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பெற்றும் வாசிக்கப்பெற்றும் பெரும வரவேற்பு பெற்றது. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டிய நோயாளிக்கெல்லாம் நாம் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. திரைப்பாடல்களிலும் இலக்கியத் தரம் வேண்டும் என விழையும் கவிஞரின் மகன் நோயாளியாக இருப்பதுதான் வருத்தமாக உள்ளது. ஆனால், யாராக இருந்தாலும் அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்ளும் மனச்சிதைவர்களையும் அவர்களை ஊக்கப்படுத்தும் ஊடகத்தினரையும் தளையிட்டு உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
கைது செய்! கைது செய்! எழுத்துச் சிதைவர்களைக் கைது செய்!
சிறையில் அடை! சிறையில் அடை!
எழுத்தைக் கொல்வோரைச் சிறையில் அடை!
தண்டனை கொடு! தண்டனை கொடு!
மொழிக் கொலையாளிகளுக்குத் தண்டனை கொடு!
இதுவே தமிழ்காக்க விரும்புவோரின் முழக்கங்களாக இனி இருக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 71: பங்குனி 8, 2046 / மார்ச்சு 22,2015
கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்.
நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்.