(ஏ, தாழ்ந்ததமிழகமே! 3/8 தொடர்ச்சி)

ஏ, தாழ்ந்த தமிழகமே! 4/8

[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]

கற்பனைக் கொலை


இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத்திற்கும். அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வருணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டை வாழ்க்கையினிடையே புராண மெத்தையில் புரண்ட புலவர்களின் உள்ளத்தையும், இந்தச் சிறு படப் பிடிப்புத் தெளிவாக்கும் என நம்புகிறேன். ஒரு தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக் கொண்டு வந்தவன் முன் ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள். நல்ல அழகி; பக்கத்திலேயே பளிங்கு நீரோடை. கட்டழகன் அந்த மங்கையை மணந்து கொள்ள இச்சைப் படுகிறான். மணந்து கொள்வதென்றால் இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது தேவையில்லாதிருந்த காலம் அது. காதலர் இருவரும் கண்களால் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்த போதிலும் அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள். அஞ்சாதே அஞ்சுகமே என்றான். ஆனால், சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்கிறது. அது என்னவென்று கேட்கிறாள், அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல் என்கிறான். பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது; ‘ஐயோ யானையா! அச்சமாயிருக்கிற’ தென்றாள். ‘அச்சமானால் அருகே வா’, என்றான்; வந்தாள். அணைத்துக் கொண்டான். திருமணம் முற்றிற்று!!


இந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த வீரனை வேலனாக்கி, கிழவனாக்கி, தேனும் தினைமாவும் கேட்டான் என்று சொல்லி, வளையற்காரனாக்கி விட்டார்கள். வைதீகத்தைப் புகுத்தி, மூடநம்பிக்கையை வளர்க்கும் பகுத்தறிவிற் கொவ்வாத ஏடுகள் இருக்குமானால் அவை குற்றம் என்று கருதப்பட்ட காலம். இதனால் அந்தக்காலத்திற்குத் தகுந்தாற்போல், அப்போது கவிதைகள் எழுந்தன. இடைக் காலத்திற்குத் தகுந்தாற்போல், இன்றைய வள்ளிகதை போன்றவை இயற்றப்பட்டன. இப்படி காலத்திற் கேற்றவாறு தான் கவிதைகள் இயற்றி-யிருக்கிறார்கள் என்றால் காலம் என்னும் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்ளாதவன் சிறந்த கவியாக மாட்டான். அவன் கோர்ட்டுகளில் உள்ளவர்களைப்போல, ஒரு காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வைக்கும் ரிகார்டு பேர்வழி. அவன் அழகாக நெல்மணிகளைச் சேகரித்து மிராசுதாருக்குக் கொடுக்கும் பண்ணையாள். அவன் சிறந்த கவி யாகமாட்டான். சிருசுட்டி கருத்தா வாகமாட்டான். எக்காலத்திலும் சீவித்திருக்கும் உயிர்க்கவி யாகமாட்டான்.

காலமெனும் சிறை


இடைக்காலக் கவிகளும் அதற்குப் பின்னால் ஏற்பட்ட அநேக கவிகளும் காலமெனும் சிறையிலே தங்களைத் தாங்களே ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் அதினின்றும் வர முயன்றால், அதைச் சுற்றி உள்ள மதமெனும் மண்டபச் சுவரை ஏறிக் குதிக்க வேண்டும். ஆதலால்தான் அந்தக் கவிகளுக்கு ஆண்டவனின் அவதார லீலைகளைப் பற்றியும், கயிலைக்கும் திருப்பதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், தேவாதி தேவர்களைப் பற்றியும் தேவாதி தேவன் கௌதமர் ஆசிரமத்திலே செய்த ஆபாசத்தைப் பற்றியும் எழுத எண்ணம் பிறந்ததே ஒழியக் காடுகளைப் பற்றியோ, மாடுகளைப் பற்றியோ, மலைகளைப் பற்றியோ, கவிதை செய்யவில்லை. செய்ய வில்லையா? அடாது! காலைக் கதிரவனைப் பற்றியும் மாலை மதியத்தைப் பற்றியும் பாட்டுகளில்லையா? இதோ பார் என்று சொல்லலாம்; இருக்கின்றன.

ஆனால் வைதிகமெனும் குறுக்குச் சங்கிலியுடனே பிணைக்கப்பட்டிருக்கின்றன. கவிதா ரசத்துடனேயே அவை கல்லூரி மாணவர்களின் நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.

அதனால்தான் நமது புரட்சிக்கவி அந்த இரண்டையும் வெட்டு என்கிறார்; கூரில்லாத வாளைக் கூராக்கு என்கிறார். படி இல்லாத குளத்திற்குப் படி கட்டு என்கிறார். குன்று இல்லாத இடத்திலே செய்குன்றாவது செய் என்கிறார். குள்ள உள்ளத்தைக் கொலை செய் என்கிறார். கூனாதே நிமிர்ந்து நட என்கிறார். மேகத்திலிருந்து நிலவொளி வெளியே வரட்டும் என்கிறார். அந்த லோகத்தைப் பற்றிப் பாடாதே; இந்த உலகத்தைப் பற்றிப் பாடு என்கிறார். நாம் வாழும் இந்த இடத்தைப் பாடு என்கிறார். காலத்துக்கு அடிமையாகாதே என்கிறார்; இலக்கணக் கட்டுப்பாட்டுக்குப் பயப்படாமல் பாடு என்கிறார். அதனால்தான் அவரைப் “புரட்சிக் கவி” என்று அழைக்கிறோம்; உயிர்க்கவி உண்மைக்கவி என அழைக்கிறோம்.

புரட்சிப் புதுமை


புரட்சிக்கவி என்றுதான் அழைக்கிறோமேயன்றிப் புரட்சியில் முதற்கவி என்றழைக்கவில்லை. அவர் இந்த உலகத்தைப் பற்றி இவ்வளவு புரட்சிகரமாகப் பாடுவதற்குக் காரணம் அவர் வாழும் புதுவை ஆகும். புதுவையானது பிரான்சு நாட்டைச் சேர்ந்தது. பிரான்சு சுதந்திரத்தின் பிறப்பிடம். நாம் எல்லாம் ராசாதி ராசாக்களைப் போற்றிய நேரத்தில், அங்கு அரசர்களைச் சிறையில் அடைத்த காலம். அரண்மனைகளை ஆசிரமங்களாக அநியாயக் கோட்டைகளாக ஆக்கிய நேரத்திலெல்லாம் அங்கு பாசுட்டிலி உடைக்கப்பட்ட நேரம். ஆண்டான் அடிமை என்ற வார்த்தைகள் இங்கு உலவிய நேரத்திலெல்லாம் அங்கு சுதந்திரம். விடுதலை, என்ற கோசங்கள் வானைக் கிழித்த நேரம். அந்தப் பிரான்சின் சாயல் அந்த பிரான்சின் தென்றல் அவர் வசிக்கும் புதுவையில் வீசுவதால்தான் அவர் கொடுக்கும் தலைப்புகள் புரட்சிகரமானவையாகப் புத்துலகக் கருத்துக்களைத் கொண்டிலங்குவனவாக இருக்கின்றன.

யாருக்குத் தெரியும்?


பல கவிகளுக்கு, அவர்கள் பாடுகிற பாட்டுகளைப் பற்றி அவர்களுக்கே தெரியாது. ஆனைமுகனைப் பற்றி அழகாகப் பாடுவார்கள்; துதிக்கையைப் பார்த்ததுண்டா? அதன் அகல நீளமென்ன வென்றால் தெரியாது. ஊர்வசியும், இரம்பையும் சிறந்த நாட்டியக்காரிகள்; அவர்களிருப்பது தெய்வலோகம் என்றால், கேள்வி ஞானமே தவிர அனுபவமேது? பத்துத் தலை இராவணணைப் பற்றிப் பாடுகிறார்களெனன்றால், இராவணனைப் பார்த்ததேது? பரமசிவன் பார்வதியுடன் ரிசபவாகன ரூபராய்த் திடீர் திடீரெனத் தோன்றி மறைகிறார் என்றால், என்றாவது கண்டதுண்டா? படித்ததை எழுதுகிறார். கேட்டதை ஒப்புவிக்கிறார். அதாவது ஒருவர் கேள்விப்பட்டு எழுதுவார்; சொல்லுவார். சொன்னதைக் கேட்டவர் அதையே எழுதுவார்; இது பரம்பரை என்பதே தவிரக் கண்டதை, பார்ப்பதை அனுபவபூர்வமாக எழுதுகிறார்கள் என்பதற்கில்லை.

சிந்தனை சொல்லிற்று

பாரதிதாசன் மாத்திரம்தான், தாம் கண்டதை எழுதுகிறார்; பார்த்ததை எழுதுகிறார், புரியாத விசயங்கள் தெரியாத விசயங்கள் வழிக்கே போகமாட்டார்; காணாத கடவுளைப் பற்றி எழுதமாட்டார்; இன்று இல்லாவிட்டாலும் நாளை பரிகாசத்திற்கு இடமாகும் என்று, நான் வேதாந்தத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கையாய் இருக்கும். சங்கராச்சாரி பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கையாயிருக்கும். மானையும் மடந்தையையும் பற்றிப் பாடவேண்டிய புலவர்கள், ஆறுமுகத்தைப் பற்றியும் ஆறுமுகத்தில் எந்த முகம் வள்ளிக்கு முத்தம் கொடுத்த சொந்த முகம் என்பதைப் பற்றியும், பரமசிவத்தின் வேலாயுதத்தைப் பற்றியும் அந்த வேல் மொட்டையாயிருந்தால், மேருமலையின் எந்தப்பாகம் தீட்ட உபயோகப்படும் என்பதைப் பற்றியும், பாடினால் வேடிக்கையாயிருக்கும் என்பது மட்டுமல்ல; ஏதோ ஒரு புலவர் தம் விருப்பம்போல் கதையளக்கிறார் என்றுதானே நினைக்க நேரிடும்!

பண்டிதர்களின் பரம்பரையிலே, பாரதிதாசனும் கொஞ்ச நாள் இருந்தார். கவிபாடினார், மற்றவர்களைப் போல, மயிலையும் முருகனையும் பற்றிப் பாட்டுகள் பாடினார். வள்ளியைப் பற்றி லாலிகள் பாடினார்.

அவரது பாக்களும் வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வைத்த நேரத்தில், மஞ்சள் பெட்டியில் வைத்துப் பூசிக்கப்பட்டன. இதைப் பார்த்தார் நம் கவிஞர். நாம் இவ்வளவு நாட்கள் புளுகிவிட்டோமே; எவ்வளவு மக்களை மருளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம்; அவர்களுக்கு உண்மையை உரைக்கவில்லையே; நாம் அகப்பட்டுக் கொண்டோமோ; நெற்றிக்கண் பரமசிவத்தைப் பாடிவிட்டு, பிறகு ஓர் பகுத்தறிவுவாதி, ‘ நீ பரமசிவத்தைப் பார்த்தாயா?‘ என்று கேட்டால், என்ன சொல்வது என்று சிந்தித்தார். அந்தச் சிந்தனை அவருக்குச் சொன்னது, “உனக்குக் கவிதை பாடக் கயிலாயம் தானா தேவை? கடவுள் தானா வேண்டும்? சுனையைப் பற்றிப் பாடு; பறவையைப் பற்றிப் பாடு: தென்றலைப் பற்றிப் பாடு; நீலவானைப் பற்றிப் பாடு; கோலவிழியைப் பற்றிப் பாடு; முழுநிலவைப் பற்றிப் பாடு; கூர்வாளைப் பற்றிப் பாடு; வீரனின் தோளைப் பற்றிப் பாடு; வட்டத் தாமரையைப் பற்றிப் பாடு; அவை உன் பேனா முனையின் கட்டளைக்குக் காத்துக்கிடக்கின்றன” என்று இதை ‘ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட‘ என்னும் அவரது கவிதையிலே பார்க்கலாம். அது அவரது கவிதை மட்டுமல்ல; அவரது சுய சரித்திரமுமாகும்.

(தொடரும்)

ஏ, தாழ்ந்த தமிழகமே!

பேரறிஞர் அண்ணா