kaikal

  ‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான்  கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே பாடல் சுவை கருதி அவ்வாறு குறிக்கப்பட்டிருக்கலாம். எனினும் இவையெல்லாம் பொதுமக்கள் வழக்கமல்ல. ஆண்கள் கற்பை உணர்த்தும் பல பாடல்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. உலக மொழியியல் அறிஞர் தொல்காப்பியர்,

மறையின் வந்த மனையோள் செய்வினை
பெறையின்று பெருகிய பருவரல் கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகைஎனக் குறித்த கொள்கைக் கண்ணும்                 (கற்பியல் 10)

எனச் சொல்லுமிடத்தில் இரு மனைவியர் மிகை எனத் தொல்காப்பியம் வழி உணர்த்துகிறார்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு என்பதை நாம் உள்ளத்தில் நிறுத்துவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்