(அதிகாரம் 083. கூடா நட்பு தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 084. பேதைமை

அறிய வேண்டுவன அறியாமையும்,

   அறிய வேண்டாதன அறிதலும்.

  1. பேதைமை என்ப(து)ஒன்று யா(து)…?எனின், ஏதம்கொண்டு,

   ஊதியம் போக விடல்.

 

      தீமையைப் பிடித்துக் கொண்டு,

         நன்மையைப் போகவிடும் அறியாமை.

 

  1. பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை

     கைஅல்ல தன்கண் செயல்.

 

      ஒழுக்கம் அல்லாத செய்கை,

       அறியாமையுள் பெரிய அறியாமை.

 

  1. நாணாமை, நாடாமை, நார்இன்மை, யா(து)ஒன்றும்

   பேணாமை, பேதை தொழில்.

 

      வெட்காமை, தேடாமை, அன்புஇலாமை,

       மதியாமை அறியார்தம் தொழில்.     

 

  1. ஓதி உணர்ந்தும், பிறர்க்(கு)உரைத்தும், தான்அடங்காப்

   பேதையின், பேதையார் இல்.

 

      கற்றும், கற்பித்தும், அவ்வழியில்

       செல்லாதான், இணைஇல்லா அறிவிலி.

 

  1. ஒருமைச் செயல்ஆற்றும் பேதை, எழுமையும்,

     தான்புக்(கு) அழுந்தும் அளறு.  

 

    ஓர்பிறப்பில், ஏழ்பிறப்புத் துன்பப்

       புதைகுழியை அறிவிலி அமைப்பான்.    

 

  1. பொய்படும் ஒன்றோ? புனைபூணும், கைஅறியாப்

   பேதை, வினைமேற் கொளின்.

 

     கைத்திறன் அறியார்தம் செய்தொழில்,

       தோற்கும்; சிறைத்துயரை ஆக்கும்.

 

  1. ஏதிலார் ஆரத், தமர்பசிப்பர், பேதை

   பெரும்செல்வம் உற்றக் கடை.  

 

      அறியார் செல்வர்ஆயின், உறவார்

       பசிப்பார்; அயலார் உண்பார்.   

 

  1. மையல் ஒருவன் களித்(து)அற(று)ஆல், பேதை,தன்

 கைஒன்(று) உடைமை பெறின்.

 

      அறியாதான் கைப்பொருள் பெற்றால்,

       கள்குடித்த பித்தன்போல் ஆவான்.

 

  1. பெரி(து)இனிது, பேதையார் கேண்மை; பிரிவின்கண்,

   பீழை தருவ(து)ஒன்(று) இல்.

 

     அறிவிலி நட்பு, நனிஇனிது;

       பிரிந்தாலும், துன்பம் தராது.

 

  1. கழாக்கால் பள்ளியுள் வைத்(து)அற்(று)ஆல், சான்றோர்

     குழாஅத்துப், பேதை புகல்.        

 

     அறிஞர் கூட்டத்துள் அறியாதார்

       புகுதல், விரும்பத் தகாச்செயல்.

பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan03
(அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை)