தலைப்பு-ஒரு போரால் மட்டும் தோற்றுவிடுவதில்லை :thalaippu_oru_poaraalmattum_thoatruviduvathillai

1/2

 

  ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர்.

 அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18) அகவை மாணவன் ஒருவன் தொடர்வண்டி முன் பாய்ந்து உயிரிழந்த திகைப்புச் செய்தி கிடைத்தது. கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயிலும் இராசேசுவரன் செந்தூரன் என்ற அந்த மாணவன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில் இலங்கை அரசு காட்டும் மெத்தனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இதைச் செய்திருக்கிறான். தன்னுடைய குறிப்பேட்டில் இராசேசுவரன் எழுதி வைத்திருக்கும் சுருக்கமான குறிப்பிலிருந்து அதை அறிய முடிகிறது.

  இராசேசுவரன் தொடர்பான செய்தி கிடைத்ததும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருக்கும் பேரணி, அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தியது. “ஏதுமறியா அரசியல் கைதிகளை இனியாவது விடுதலை செய்” என்று உரக்க முழங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

  “இது போன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது….. மக்கள் ஒன்று திரண்டு போராடுவதுதான் எமக்கு விடுதலை பெற்றுத் தரும்” என்று சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் உருக்கமாக விடுத்திருக்கும் வேண்டுகோள், இளையோர் குறித்த அவர்களது ஆழ்ந்த கவலையைக் காட்டுவதாக இருக்கிறது.

  இராசேசுவரன் தனக்குத் தானே தேடிக் கொண்ட சாவையும் அதன் விளைவுகளையும், அரசின் அச்சுறுத்தல் குறித்தெல்லாம் கவலைப்படாமல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தாயகத் தமிழ் மக்களின் மனநிலையையும் அறியாமல் மைத்திரிபாலா இருளிலேயே இருந்துவிடக் கூடாது.

  ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்கிற விடுதலைப் போராட்ட அமைப்பின் எழுச்சியை, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற தன்னிகரற்ற தலைவனின் எழுச்சியாக மட்டுமே சிங்களத் தலைவர்கள் பார்த்ததால்தான், இன்று வரை சிக்கல் தீராமலிருக்கிறது. அது, தலைமுறை தலைமுறையாகத் தங்களால் நசுக்கப்பட்ட பிறகும், தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காத ஒரு குமுகாயத்தின் (சமூகத்தின்) எழுச்சி என்பதை அவர்கள் உணரவே இல்லை.

“ஒரு விடுதலைப் போராட்டம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கு தடையின்றித் தொடர்கிறது என்றால், மக்களின் பங்களிப்பில்லாமல் அஃது இயலாது. உண்மையில் இது, எமது அமைப்பின் போராட்டம் மட்டுமில்லை… தமிழர் தாயகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டம். தங்களது அரசியல் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவியாக எம்மை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எமது மக்கள்தான் இந்த விடுதலைப் போராட்டத்தின் அடிநாதம்”…………

  இவ்வளவு தெளிவாக, துல்லியமாக ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடிக்கால் எது என்பதை, 2002இலேயே எடுத்துச் சொன்னவர், அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த உடன்பிறவி தமிழினி. 2002இல், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில், மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வில், உடன்பிறவி தமிழினி நிகழ்த்திய அந்த உரை இப்போதும் என் நினைவில் உறைந்திருக்கிறது.

  தமிழினி இதைப் பேசிய மறுநாளே “என்ன படித்திருக்கிறீர்கள்” என்று அவரிடம் கேட்டேன். அவர் படித்தது, பள்ளிப் படிப்புதான் என்பது அப்போதுதான் தெரிந்தது. ஆழ்ந்த பொருளுடன் கூடிய அவரது உரையை வைத்து, குறைந்தது ஒரு பட்டதாரியாகவாவது இருப்பார் என்று நினைத்திருந்த எனக்கு, உண்மையாகவே ஏமாற்றம்.

  தமிழினியின் முகத்தில் தெரிந்த பொறுமையையும் தெளிவையும் போராளிகள் பலரின் முகத்தில் காணும் வாய்ப்பைப் பலமுறை பெற்றிருக்கிறேன். அவர்களில் எவரும், ஆர்வக் கோளாற்றால் போராளிகள் ஆனவர்களில்லை. இனச்சிக்கலின் உள்ளார்ந்த பொருளை நன்றாக விளங்கிக் கொண்ட பிறகே போராளியானவர்கள். வெற்றிகளின்போது அவர்கள் தலை கனத்துத் திரிந்ததுமில்லை…. தோல்விகளின்போது தலை துவண்டு கிடந்ததுமில்லை.

  உலகிலேயே, (ஆனையிறவைக் கைப்பற்றி) வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது போர் நிறுத்தம் அறிவித்த ஒரே ஆயுதப் போராட்ட இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம்தான்! இயக்கத்துக்கிருந்த அந்தப் பொறுமையும் நேர்த்தியும் இயக்கத்தில் இருந்தவர்களுக்கும் இருந்தது.

  ‘செய் அல்லது செத்துமடி’ – என்கிற ஓர்மத்தை அந்த மாவீரர்கள் நெஞ்சில் தாங்கியிருந்தனர்… ‘அது வெறும் சொற்கூட்டமன்று, வாழ்க்கை’ என்பதை மெய்ப்பிக்கும் நச்சுக் குப்பியைக் கழுத்தில் தாங்கியிருந்தனர்.

‘செய் அல்லது செத்துமடி’ – என்கிற ஓர்மம், கொடுமுறையின்/பாசிசத்தின் தொடர்ச்சியன்று! உண்மையில், அது அறவழிப் போராளிகளின் ஓர்மம். உலகெங்கும் நடந்த விடுதலைப் போராட்டங்களில், வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிற ஆற்றலாக இதுதான் இருந்திருக்கிறது.

 இன்னா செய்யாமை(அகிம்சை)க் கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்பும்(சமரசம்) செய்து கொள்ளாத காந்தியடிகள் கூட, ‘செய் அல்லது செத்துமடி’ என்று ஒரு கட்டத்தில் வெளிப்படையாக முழங்க வேண்டியிருந்தது. 1942இல் மும்பை காங்கிரசு மாநாட்டில் காந்தி அப்படி முழங்கியபோது, அவருக்கு 72 அகவை (வயது). நாற்பதுகளில், விடுதலைப் போர் வீரன் ஒருவனுக்கு எது தேவையென்று காந்தி சொன்னாரோ, அதையேதான் நாற்பதாண்டுகள் கழித்துப் பிரபாகரனும் சொன்னார். இருவருமே தத்தமது தாய் மண்ணின் விடுதலைக்காக உண்மையோடும் உறுதியோடும் எழுப்பிய முழக்கம் அது.

  தன்னையே காணிக்கையாக்க ஆயத்தமாக இருந்தவர் என்பதால் அப்படிச் சொல்வதற்கான தகுதி காந்தியடிகளுக்கு இருந்தது. அதனால்தான், காந்தி சொன்னதைக் கேட்டு ஆயிரமாயிரம் விடுதலைப் போராட்ட வீரர்கள் விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதே தகுதி பிரபாகரனுக்கும் இருந்ததால்தான், பிரபாகரன் வழியில் தாய்மண் காக்கும் பணியில் ஈடுபட ஆயிரமாயிரம் இளைஞர்கள் திரண்டார்கள்.

  காந்தியத் தொண்டர்களுக்கும் பிரபாகரனின் தோழர்களுக்கும் இருக்கிற மிக முதன்மையான ஒற்றுமை – அவர்களது கட்டுக்கோப்பும் ஒழுக்கமும்! ஐ.நா மனித உரிமை ஆணையர் செயித் அல் இராத் உசேனின் அறிக்கை மட்டுமின்றி, இலங்கையின் சொந்த அறிக்கையான பரணாகம அறிக்கையும் புலிகளின் ஒழுக்கத்துக்கு உரைகல்லாக இருக்கிறது.

 சிங்களப் படையினரின் பாலியல் வன்முறைகள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் பேசுகிற அந்த இரண்டு அறிக்கைகளும், புலிகள் மீது அப்படியெந்த அருவெறுப்பான குற்றச்சாட்டையும் சுமத்தத் துணியவில்லை.

  இத்தனைக்கும், மாக்சுவல் பராக்கிரம பரணாகம தலைமையில் மகிந்த இராசபக்ச அமைத்த காணாது போனோர் தொடர்பான உசாவல்(விசாரணை) ஆணையம், புலிகள் மீது சேறு வாரி இறைப்பதையே நோக்கமாகக் கொண்டது. அந்தப் பரணாகம கூட, புலிகளின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் முயற்சியில் இறங்க முடியவில்லை. அந்த அளவுக்கு, ஓங்கி உயர்ந்து நின்றன நெறிமுறை பிறழாத புலிகளின் ஒழுக்கக் கோட்பாடுகள்

(தொடரும்)

புகழேந்தி தங்கராசு : pughazhendhi-thangarasu

– ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு

– தமிழக அரசியல் – கார்த்திகை 13, 2046 / 29.11.2015.

 

தரவு : மடிப்பாக்கம் அறிவொளி