திலீபன் மண்ணுக்காக இறந்தான்

 – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி

 

“எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.

ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.

அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி.

உலகத்தின் மனச் சான்றைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி. திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்புக்காக இறந்தான். உங்கள் விடுதலைக்காக, மதிப்பிற்காக இற்நதான்.

ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது உரிமை. எமது விடுதலை. எமது மதிப்பு-கௌரவம்!

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்நத இலட்சியப் போராளி என்ற வகையில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு.

இந்தியா கவலை

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது  பொருளற்ற சாவு என்று இந்தியத் தூதர் கூறியிருக்கிறார்.

தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும். எமது மக்களுக்கு, எமது மண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழ்மக்கள் தமது பரம்பரைப்  பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்-இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம்.

எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.  இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்குத் தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்கியது.

சிங்கள் அரசின்  காவல்துறை தமிழ்ப் பகுதிகளில் விரிவாக்கப்பட்டது.

அவசர, அவசரமாகச் சிங்கள இனவாத அரசயந்திரம் தமிழ்ப்பகுதிகளில் ஊடுருவியது. அமைதி ஒப்பந்தம் என்ற போர்வையில் அமைதிப் படையின்  ஒத்துழைப்புடன் சிங்கள் அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலை கொள்ள முயன்றது.

இந்தப் பேராபத்தை உணர்ந்துகொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணத் திடசங்கற்பம் கொண்டான்.

தருமயுத்தம்

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் பொருளில்லை. பாரதம்தான் எமது சிக்கலில் தலையிட்டது. பாரதம்தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவைத்தது.

ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமைக் கோரிப் போராட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் அறப்போர் – தருமயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான் திலீபன். அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட இன்னா செய்யாமை – அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.

நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக் கொள்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னரே, இந்தியத் தூதர் தீட்சித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்தோம்.

உண்ணாநோன்பு தொடங்கி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை. மாற்றாக இந்திய அரசின் கீழுள்ள தொடர்புச் சாதனங்கள் எம்மீது  நச்சுத்தனமான பொய்ப்பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தின.

ஒன்பதாவது நாள் இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதிமொழிகளைத் தந்தார்.

வெறும் உநுதிமொழிகளை நம்பி எமது இனம் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகிறது.

“உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள். எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள். அதுவரை உண்ணாவிரதம் கைவிடப்படமாட்டாது”  என்றேன்.

“உங்களுக்குத் திலீபனின் உயிர்மீது அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்களுக்கு முன்பாக அவனிடம் உறுதிமொழிகளைக் கூறுங்கள். நாம் உண்ணாவிரத்தைத் திரும்பப் பெறுகிறோம்” “என்றேன். அதற்கு இந்தியத் தூதர் மறுத்துவிட்டார்”

தமிழ்ஞாலத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
திலீபன் உயிர்க்கொடையில் தன்னை ஈந்த பொழுது விடுத்த செய்தி.