(ஒளவையார்:4: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 14

2. ஒளவையார் (தொடர்ச்சி)


ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, “மன்னா, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்றாய்?” என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தலை வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து நின்றான். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று; “மன்னா, யாது செய்தனை! உலகு புரக்கும் வேந்தன் நீ, அருஞ்சுவைக் கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே. அதனை உண்டு நெடுங்காலம் அவனியைக் காக்க வேண்டியவன் நீ அல்லையோ? அந்நீண்ட வாழ்வில் நீ அருந்தமிழைப் புரக்கலாமன்றோ? அவ்வாறன்றி, ‘ஆதல் நின் அகத்து அடக்கி’, அதை எனக்குச் சாதல் நீங்க அளித்தனையே! என்னே உன் கருணை!” என்று பலவும் கூறிக் கண்களில் இன்பக் கண்ணீர் மல்க, உணர்ச்சி வெள்ளம் ஓங்குதிரைக் கடலாய்ப் பொங்கி எழ, பின் வரும் அருந் தமிழ்க்கவிதையைக் கூறினார்:

போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்(று) ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே; தொல்நிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா(து)
ஆதல் நின்னகத்(து) அடக்கிச்
சாதல் நீங்க எமக்(கு)ஈத் தனயே!’         (புறநானூறு, 91)

இவ்வாறு ‘கறைமிடறு அணிந்த கருணைக் கடவுளே போல்வான் அதிகன்’ எனத் தன்னைப் போற்றிப் புகழ்ந்த புலவர் பெருமாட்டியாரின் புகழுரை கேட்ட அதிகமானது முகம் நாணத்தால் சிவந்தது. “அன்னையீர், மண்ணின் காவலன் நான். ஆனால், தண்டமிழ்ச் சான்றேராகிய நீவிர் மக்கள் மனத்தின் காவலர் அல்லிரோ! அம்பின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லை உண்டு. ஆனால், உமது அமுதத் தமிழின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லையுமுண்டோ? எல்லையில்லா வாழ்வுடை இன்பத் தமிழிற்கு ஏற்றமளிக்கும் அன்னையீர், என் வாழ்வினும் நும் வாழ்வு உலகின் நலனுக்கும் இமிழ் கடல் சூழ்ந்த தமிழகத்தின் பொன்றாப் புகழிற்கும் பெரிதும் வேண்டுவதன்றோ?” எனப் பலவும் கூறி ஒளவைப் பெருமாட்டியாருக்குத் தான் மாறாக் கடப்பாடு பெரிதும் உடையவன் என்பதை ஆரா அன்புடன் புலப்படுத்தினான். அதிகன் கூறிய அன்புடை மொழிகளைக் கேட்ட ஒளவையாரின் உள்ளம் நன்றி உணர்வால் முழுமதி கண்ட முந்நீர் போலப் பொங்கியது. ‘மன்னா, அமுதொழுகும் மக்களின் கனிவாயினின்றும் வரும் முற்றா மழலைச் சொற்கள் யாழோசை போன்று கேட்பவருக்கும் இன்பம் செய்யா; காலத்தோடும் கூடியிரா; பொருளோடும் பொருந்தியிரா. எனினும், அப்பிள்ளைக் கனி அமுதைப் பெற்றோர்க்கோ, அவை குழலினும் யாழினும் இனியவையாய் இருப்பனவல்லவோ? அரண் பல கடந்த அஞ்சியே, உன் அருளால் என் சொற்களும் அது போன்றே உனக்கு உயர்வுடையனவாய் விளங்குகின்றன,’ என்னும் கருத்தமைய,

‘யாழொடுங் கொள்ள பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்(கு)
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! அருளன் மாறே.’         (புறநானூறு, 98)

என்ற அமிழ்தனைய தமிழ்ப்பாடலைக் கூறி, அவன் மெய்யும் மனமும் மகிழ்வு வெள்ளத்தில் மிதக்கச்செய்தார்; அதிகமானது விந்தைச் செயலில் சிந்தையைப் பறி கொடுத்து அவன் திருவோலக்கத்தைப் பிரிய மனமில்லாதவராய் அங்கேயே தங்கியிருந்தார்; அவ்வாறு அதிகமான் அரசவையில் தங்கியிருந்த நாளிலெல்லாம் அவன் வாழ்வையும் செயலையும் நுணுகி ஆராய்ந்த வண்ணம் இருந்தார். அவ்வாறு ஆராய்ந்திருந்த அவர் தம் எண்ணக் கடலில் ஆழ்ந்தெடுத்த முத்துக்களை எல்லாம் அருந்தமிழ்க் கவிதைகளாக்கி உலகு உள்ளவரை தம் ஐயன் அதிகமான் புகழ் சுடர் விட்டு ஒளிருமாறு செய்தார்.

அதிகமான் தன் வாழ்வில் அருளையும் ஆண்மையையும் இரு கண்களெனவே போற்றுவதைக் கண்ட அருந்தமிழ்ப் பிராட்டியார் அளவிலா மகிழ்வு கொண்டார். எல்லாவற்றினும் மேலாக, இகல் வேந்தர் கண்டு நடுங்கும் மாறுபாடு மிக உடையவனாகக் கலைஞர்களுக்கு எளிவந்த அவனது நிலையை எண்ணி, ‘ஊரின்கண் உள்ள சிறுவர் தன் வெள்ளிய மருப்புக்களைக் கழுவி மகிழுங்கால் நீர்த் துறையின்கண் படியும் பெருங்களிறு அவர்க்கு எத்துணை எளியதாய்-இன்பம் தருவதாய் – உள்ளது! அது போன்று அதிகமான் எமக்கு உள்ளான். ஆனால், அப் பெருங்களிற்றின் நெருங்குதற்கரிய மதம்பட்ட நிலைபோல அவன் தன் ஒன்னார்க்கு உள்ளான்,’ என்று மனமாரப் போற்றினார். மேலும், அவன் சான்றோர் நடுவண் குழந்தை போல விளங்குவதையும், பகைவர் நடுவண் பைந்நாகம் போலச் சீறிச் செல்வதையும் எண்ணி, ‘எம் அதிகமான், வீட்டின் இறைப்பில் செருகிய தீக்கடை கோல்போலத் தன் வலி தோற்றாது அடங்கியும் இருப்பன்; அடையார் முன்போ, அத்தீக்கடைகோல் கக்கும் காட்டுத் தீப்போலத் தோன்றவும் செய்வன்!’ எனக்கூறி இறும்பூது கொண்டார்.

இவ்வாறு ஆர்கலி நறவின் அதியர் கோமானது, அரும்பெறற்பண்புகளை எல்லாம் உளமாரப் பாராட்டிய ஒளவையார், இல்லோர் ஒக்கல் தலைவனாய்-புலரா ஈகைப் பெரியோனாய்- அவன் திகழும் பெருமிதக் காட்சியையும் போற்றல் ஆயினார்.

“ஆர்வலர் அணுகின் அல்லது கூர் வேல் காவலர் கனவிலும் அணுக முடியாத காப்புடைப் பெருநகர் அவனுடையது. அந்நகரில் மஞ்சு தோய் மலைகளென நிறைந்து விளங்கும் வான் தோய் மாடங்கள் சிலம்பப்பாடி நின்ற பாணர்க்கும் புலவர்க்கும் எஞ்ஞான்றும் அடையா நெடுங்கதவினன் அதிகமான்; தன் தலை வாயில் வந்த புலவரை எல்லாம் தன் தமரெனக்கருதி அருகழைத்து அவர்மேல் கிடந்த ஊருண் கேணிப்பாசி போன்ற மாசு மலிந்த ஆடைகளையெல்லாம் களைந்து, திருமலரன்ன புத்தாடைகளைத் தருவான்; மகிழ்வு தரும் தேட்கடுப்பன்ன நாட்படு தேறலேயன்றி, அமிழ்தனைய கொழுந்துவையொடு குய்யுடை ஊன் சோறும் வெள்ளி வெண்கலத்தில் நிரப்பி, அருகிருந்து உண்ணச் செய்வான். இவ்வாறு பன்னாள் அவர்களைப் போற்றிய பின் அவர்கள் வேற்றிடம் செல்லக்கருதின், பிரியா விடை தருவான். அவ்வாறு அவர்கட்கு விடையளிக்கும் போது களிறும் தேரும் விரிமலர் வேங்கை ஒத்த பகடுதரு செந்நெற்போரொடு கொடுத்து அனுப்புவான்.”[1]- இத்தகைய வள்ளியோனாய் அவன் விளங்கியமையால், ‘அதிகமான் இரவலர் புரவலன்.’ ‘ கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனக் கலங்கி நிற்கும் விறலியே, விரைந்து செல்வாயாக அதியனிடம்; அவன் சேய்மைக்கண்ணனும் அல்லன்; பரிசிலும் நீட்டியான்; எஞ்ஞான்றும் மாற்றார் முனை சுட எழுந்த புகை மலை சூழ்ந் தாற்போல மழகளிறு சூழ ஒன்னார் தேயத்தே ஓயாது இருப்பான்; ஆகலின், அவன் திறை கொண்ட பொருள் கடலினும் பெரிது; நீயும் வேண்டிய வேண்டியாங்கெய் துவை. ஓயாது உண்ணுதலாலும் தின்னுதலாலும் எப்போதும் ஈரம் புலராத மண்டை மெழுகான் இயன்ற மெல்லடை போலும் கொழுத்த நிணம் மிக உலகமெல்லாம் வறுமையுறினும் உன்னைப் பாதுகாத்தல் வல்லன; அவன் தாள் வாழ்க!” [2] என்று அவன்பால் பெருவளம் பெற்றார், அது பெறாது வாடியிரங்கும்
——————
[1]. புறம். 390; [2]. புறநானூறு, 108.
————-
வளைக்கை விறலியரையும் பாணரையும் அவன்பால் ஆற்றுப்படுத்தும் அளவிற்குப் பசிப்பிணி மருத்துவனாய் விளங்கினான்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்