பிற கருவூலம்

அனலும் புனலும் :

ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!

 

குவியாடி

உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு!

மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்!

30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார் அவர். இதன் மூலம் ”சசிகலாவால் வரும் புகழைச் செயலலிதா பெறுகிறார் ; செயலலிதாவால் வரும் பழிகளைச் சசிகலா ஏற்கிறார் ” எனச் சசிகலா அன்பர்கள் கூறி வருவதை உண்மை என்கிறார்.

அப்படியானால் இதற்கு முன்பு, “கட்சித் தொடர்பில்லாத சசிகலா, எப்படிக் கட்சிப் பொறுப்பை ஏற்க முடியும்? செயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர் எவ்வாறு கட்சியை வழி நடத்தும் பொறுப்பை ஏற்க முடியும் ” என்றெல்லாம் தொடுத்த வினாக்கள் தவறுதானே?

செயலலிதாவையே அடக்கியவர் சசிகலா என்றால் அவரை எப்படிச் செயலலிதாவால் புறக்கணித்திருக்க முடியும்? செயலலிதாவை நிலை நிறுத்திய சசிகலாதான் கட்சிக்கும் ஆட்சிக்கும் பொருத்தமானவர் என்று மறைமுகமாகப் பன்னீர் கூறுகிறாரா?

தான் அதிமுகவில் இருந்த பொழுது தினகரன் மழலைப் பள்ளி மாணாக்கன் என்கிறார் பன்னீர். இராகுல் காந்தி பிறப்பதற்கு முன்பே காங்கிரசில் இருந்தவர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். மு.க.தாலின்(ஃச்டாலின்) பிறக்கும் முன்பே கட்சிக்காக உழைத்தவர்கள், அவரின் தலைமையில்தான் இயங்குகின்றனர். உலகெங்கும் இதுதான் நிலைமை!

தலைமைப் பதவிக்கு ஆண்டுகள் முதன்மை யல்ல! பணி முதிர்ச்சிதான் முதன்மை. பள்ளி ஆசிரியர் ஆசிரியராகவே இருக்கும் பொழுது அவரது மாணவர் அவருக்கும் மேல் தலைமை யாசிரியராகவோ இயக்குநராகவோ வருவதுதான் வாழ்க்கை. ஆசிரியர் கல்லூரி விரிவுரை யாளராகவே இருக்கும் பொழுது அவர் மாணவர் முதல்வராகவோ துணைவேந்தராகவோ அமர்வதுதான் காலச்சூழல் தரும் பரிசு. இதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள் .

தினகரனுக்கு முன்பே கட்சியில் இருந்தவர் தினகரனின் முதன்மைக்காக ஏன் உழைத்தார்? தினகரனின் ஆளுமையால் கட்சியிலும் ஆட்சியிலும் சிறப்பிடத்தைப் பெற்றார்?

சசிகலாவால் தற்கொலை உணர்ச்சிக்குத் தள்ளப்பட்டவர், செயலலிதா மரணப் படுக்கையில் இருந்து, தான் அரியாசனத்தில் இருந்த பொழுது, ஏன் சசிகலாவை ஓரங்கட்டவில்லை?

செயலலிதா மறைந்ததும் சசிகலாவிடம் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடியது ஏன்? பாசக பக்கம் சாயாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் முதல்வராகத் தொடர்ந்து அவரின் காவல் தெய்வமாகச் சசிகலாதானே இருந்திருப்பார்.

சசிகலாவால் தற்கொலை யுணர்விற்குத் தள்ளப்பட்டவர் அப்பொழுதே அல்லவா ‘தருமயுத்தம்’ தொடங்கியிருக்க வேண்டும்? சசிகலாவால் வரும் முதல்வர் பதவி வேண்டா என உதறித் தள்ளியிருக்க வேண்டும்?

அன்று தன் வாழ்வாதாரமானவர் காலைத் தொழுது நின்றார். இன்று உயர்விற்கு வேறு கால் கிடைத்ததும் இதனை உதறுகிறார். அப்படித்தானே!

செயலலிதாவின் மறைவுக்குப்பின் பன்னீராய் மணம் வீசியவர் இன்று மணமில்லா வெறும் தண்ணீராய்க் காட்சி யளிக்கிறார். அதிமுகவிலேயே இருக்க வேண்டும் என எண்ணுபவர்களையும் தினகரன் பக்கம் தள்ளிவிடுபவர் இவர்தான் எனக் கட்சியினர் கூறுகின்றனர்.

எம்சியாரால் ஓரங்கட்டப்பட்டவர் செயலலிதா எனக் கருதி மக்கள் அவரை ஓரங்கட்டவில்லை. மாறாக அதற்கு முன்பு அவரால் அணைக்கப்பட்டவர் எனச் செயலலிதாவை ஏற்றுக் கொண்டனர்.

செயலலிதாவால் சசிகலா ஓரங்கட்டப்பட்டார் என்று அவரைத் துரத்த கட்சியினர் விரும்பவில்லை. அதற்கு முன்பும் பின்பும் செயலலிதாவால் தாயாய், தோழியாய், எல்லாமுமாகப் போற்றப்பட்டவர் எனச் சசிகலாவை மக்கள் ஏற்கின்றனர்.
இந்த உண்மையைப் பன்னீர் புரிந்துகொள்ள வேண்டும்.

முதல்வர் பதவி பறிபோனபின் கிளர்ச்சிக்காரனாக மாறி அதைவிடக் குறைவான நிலையில் உள்ள துணைமுதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டவர், தனக்குப் பதவி ஆசை இல்லை என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள் என நம்புவது அறியாமை அல்லவா?

பதவியைக் காப்பதற்கென வாழும் அரசியல்வாதி பதவி இல்லாமல் வாழ முடியாது. பன்னீருக்கும் பொருந்தும்! பாசகவின் மடியில் தவழ்ந்ததால் மக்களால் தூக்கி எறியப்பட்டார். இதனால் பாசகவாலும் வீசி எறியப்படுவார். எனவே மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தினகரன் ஆட்சிக்கு வந்தால் அவருடன் சேர முந்துபவராக இருக்கப் போகும் பன்னீர் அதற்கு முன்னதாகவே கட்சியின் ஒற்றுமைக்குப் பாடுபடலாம். அந்த அணி இந்த அணி எனக் கட்சியினரைத் திரியவிட்டுக் கட்சியை உடைக்காமல், பாசக ஆட்டுவிக்கும் பொம்மையாக இராமல், கட்சியை ஒற்றுமைப்படுத்தும் ஆளுமையாளராக மாறலாம்.

அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதற்குக் காரணமாக இராமல், பாசகவால் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து போவதற்கு உந்துதலாக இராமல், தன்மானம் மிக்கத் தமிழ்நாட்டை உணர்த்தப் பாடுபடலாம்.

பன்னீர், அதிமுக என்னும் கப்பலை மூழ்காமல் காப்பாற்றும் மீகாமனாக – கப்பலோட்டியாக மாற வேண்டும். ஒற்றுமை என்னும் தேரைச் செலுத்தும் தேரோட்டியாக விளங்க வேண்டும். பன்னீர் தாழ்ந்தாலும் அதிமுக வாழும். அதிமுக வீழ்ந்தால் பன்னீரால் அரசியலில் நிலைக்க முடியுமா? எனவே அவர் பாசக.வுக்கு அடி பணியாமல் நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது!

 

குவியாடி

நன்றி:  ..தமிழ்