thamizh-hindi01

வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர்
 வைத்தூறு போலக் கெடும்.

1. அழிவுக்கு உண்டான வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல் சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம் பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமைகள் நம்மைப் பயமுறுத்துகின்றன எனபதை இதோ பாரும்.

‘‘தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் இந்தியைக் கட்டாய பாடமாக்குவதே என் முதல் வேலை. அதனை எவ்வகையிலும் செயல்படுத்தியே தீருவேன்’’ கேட்டீரா அமைச்சர் சக்ளாவின் ஆணவ உரையை.

‘‘இந்தி வெறியர்கள், உடனடியாகத் தென்னாட்டார் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது தவறு. அதற்குக் காலம் வேண்டும். மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்வதில் திறமை மிக்கவர்கள் தென்னாட்டார். அவர்கள் இந்தியை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.’’ பார்த்தீரா நண்பரே, தென்னாட்டாரின் முதுகைத் தடவும் வேலையை நடுவணரசின் பொதுநலத்துறையமைச்சர் திருமதி. சுசீலா(நய்யார்) எவ்வளவுப் பக்குவமாகச் செய்கிறார் என்று.

முன்னவர் ‘திணித்தே தீருவேன்’ என்கிறார். பின்னவர் திறமைசாலிகள் என்கின்றார் எதற்கு? தங்கச்சி மொழியான தமிழை உயர்த்தவா? இல்லை நண்பரே! குப்பைமேட்டு மொழியான இந்திக்கே கோபுர வாழ்வு கொடுக்க! உணரும்.

2. என்ன சொல்கிறீர் தொடர்பு மொழியா? அப்படியானால் ‘ஆட்சி மொழி’ தேசிய மொழி என்பதற்கெல்லாம் உமது சொற்களில் என்னய்யா பொருள்? போகட்டும்; அந்தத் தொடர்பு மொழிக்கு நம்மை இணைத்துவைக்கும் உயிரும் சதையுமாவது இருக்கிறதா? வந்துபாரும்.
அண்மையில் ‘காகாசாகீப் கலேல்கர்’ என்ற அறிஞர் அரும்பாடுபட்டுக் ‘கல்லூரி விரிவுரையாளர்’, ‘பேராசிரியர்’ ஆகிய இரண்டு ஆங்கிலச் சொற்கட்குப் ‘பக்வாஷ்’ ‘மகாபக்வாஷ்’ என்ற அரிய இந்திக் கலைச் சொற்களைக் கண்டுபிடித்திருக்கிறார். இதற்குத் தமிழில் என்ன பொருள் தெரியுமா? ‘உளறல்காரன்’ ‘பெரிய உளறல்காரன்’ என்பதாகும். ஏன் அன்பரே! இந்த ‘உளறல்’ மொழியைத்தானே இந்தியாவின் தொடர்பு மொழியாக ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்? தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் இந்திமொழி பற்றிக் கூறுவதைச் சற்றே செவிமடுமின்.
‘‘தனக்கு எனச் சொந்த எழுத்து இல்லாத, பிற மொழி எழுத்துகளைக் கொண்டே எழுதப்பட்டு வருகிற, சொந்தச் சொற்கள் இல்லாத, பிற மொழிச் சொற் கொண்டே பேசப்பட்டு வருகிற, இலக்கண மில்லாத வடக்கே வடமொழியையும் தெற்கே தமிழையும் தழுவி இப்போது இலக்கணம் அமைக்கப்பட்டு வருகிற, பொன் – பொது – பொறு என்று எழுத முடியாத படிக்க முடியாத  மொழி இந்தி.’’ இந்த ஈன மொழியைத்தானே இந்தியாவை இணைத்து வைக்கும் மொழி என்கிறீர்? மன்னிக்க வேண்டும், இதை விட ஈனத்தனமான செயல் வேறொன்றும் இருக்க முடியாது.

3. சரியாகக் கேட்டீர். இதுநாள் வரை கண்ணை மூடிக்கொண்டா காலம் கடத்தினீர்? இரயில்வேதுறை அஞ்சல்துறை இவற்றில் பணியாற்றும் நடு அரசுத் துறை ஊழியர்களைக் கேளும். தக்க பதில் கிடைக்கும்! ஏன், சின்னாட்களுக்கு முன் ‘‘இந்தித் தேர்வு இல்லை’’ என்று கூறிய முதலமைச்சர் இந்தித்தேர்வு இருக்கும்; ஆனால் கட்டாயமில்லை’’ என்று மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளனாமாரே. அது கூடவே உமக்குத் தெரியவில்லை! படை முகாமிலிருந்து ‘ஐ.ஏ.எசு.’ தேர்வு வரை இந்தி இடம் பெற்று விட்டதை அண்மையில் வெளிவரும் செய்திகளின் வழியாக நீர் அறிந்து கொள்ள வில்லையா? ஓ«கோ. தனிமனிதர் பாதிக்கப்பட்டிருந்தால் தான் இதை நீர் ஒப்புக் கொள்வீர் இல்லையா? இதோ பாரும்; ஆந்திராவைச் சேர்ந்த பாராளுமன்றப் பெண் உறுப்பினர் யசோதா(ரெட்டி), அழுது புலம்புவதை;  “என் கணவர் உயர் பதவியடையும் வாய்ப்பை இழந்து விட்டார்; காரணம், அவருக்கு இந்தி மொழி தெரியாததேயாகும்.’’ புரிகிறதா தனி மனிதர் பாதிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் மேலாக ‘‘இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தியில்தான் உரை நிகழ்த்த வேண்டும்’’ என்று பாராளுமன்றத்தில் நடந்ததே ஒரு நிகழ்ச்சி, அது போதுமே ‘பாரதம்’களின் பித்து மனங்களுக்குச் சித்தத் தெளிவூட்ட!

4. முழுப் பைத்தியக்காரன் கூட இப்படியொரு கேள்வியைக் கேட்க முன் வந்திருக்க மாட்டான். ஆனால் நீர் முந்திக் கொண்டு கேட்டிருக்கிறீர்! எனவே முன் எச்சரிக்கை என்னைப் போன்றவர்களுக்கு எப்போதுமே உண்டு. இந்தி ஆட்சி மொழியானால் தமிழும் பிற மொழிகளும் வாழுமா என்பதற்கு 7-3- 54 தினமணிக்கதிர் ஏட்டில் கே.எம்.முன்சி என்பவர் அபாய அறிவிப்புக் கொடுக்கிறார். ஏடு கிடைத்தால் தேடிப்பாரும். ‘‘ஆங்கிலம் எவ்வளவு விரைவில் நீக்கப்படுகிறதோ; அவ்வளவு விரைவில் இந்தி அந்த இடத்தில் நுழையத் துடிக்கிறது. (ஆங்கிலம் அகற்றப்படுமானால் அந்த இடத்தை மற்றப் பதினான்கு மொழிகளுமே அடைய வேண்டுமென்பதுதான் அறிஞர்களின் கருத்து.) ஆங்கிலத்தை அகற்றும் கொள்கை ஏதோ மாபெரும் தேசத் தொண்டு என்று இயல்பாகப் படலாம். ஆனால் இன்றைய நாள் நமக்கு நிகழவிருக்கும் மிகப் பெரிய இடர் வட்டார மொழி (இந்தி) வெறி ஒன்றுதான்.

5. நண்பரே, பாரதியாரின் கவிதைத் தொகுப்பு உருசிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உமக்குத் தெரியுமா? பிறமொழிகளைக் கற்பதாலேயே ஒருவனுடைய தாய் மொழி உலகப் புகழ் அடைய மொழியும் என்ற உமது கருத்துப் படி பார்த்தால், பாரதியார் என்ன உருசிய மொழியை கற்றா இருந்தார்? இல்லையே! ஆக ஒருவனுடைய தாய்மொழி பிறமொழிகளைக் கற்பதால் மட்டுமே உலகப் புகழ் அடைந்து விட முடியாது என்பதை இனியேனும் உணரும். ஒன்றை மனத்தில் பதிய வையும்; பிற மொழி கற்கும் வேகத்தில் தாய்மொழியைப் புறக்கணித்தவனுக்கு பாரதியிட்ட சாபம்,

வேறு வேறு பாசைகள் கற்பாய்- நீ

வீட்டு மொழி கற்கிலாய்

 போ! போ! போ!

என்பதுதான். கூந்தலின் சிக்கெடுக்க கொள்ளி கட்டையினையா நாடுவார்கள்? தமிழைச்சிறக்க வைக்க தரங்கெட்ட இந்தியையா துணைக்கழைப்பார்கள்? மடையன் கூட விரும்பமாட்டான் இதனை.

6. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை நண்பரின் மனச்சாட்சி; அது எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்பதே இவ்வெளியவன் கருத்து. அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதினான்கு மொழிகளும் சமவாய்ப்பிற்கும் தகுதிக்கும் உரியவையே. ஆயின் இந்தி மட்டும் அனைத்திந்தியமொழி என்றால் பிணக்குத்தானே? இது மாநில மொழி; அது அனைத்திந்திய மொழி என்று பிரித்துரைக்கப்படவில்லை சட்டத்தில். உண்மை இவ்வாறிருக்க இந்திக்கு மட்டும் ஆளும் தகுதி கிட்டுமானால்; இட்ட உறுதி மொழிகளும்; ஏக இந்தியச் சம ஒற்றுமையும் காற்றில் பறக்க விட்டதாகத் தானே பொருள்? வரலாற்றுத் துணையோடு இலக்கிய இலக்கண வளத்தோடு தமிழும், வங்காளமும் தலை நிமிர்ந்திருக்க, புறக்கடையில் நுழைந்து வந்த புன்மை மொழி இந்திக்கு அரசாளும் தகுதி எனில் அநீதி வேறுண்டோ? அதனை எதிர்த்துத்தான் தமிழ்றிந்த நாவலர்களும்; தமிழ்க்காவலர்களும், பேராசிரியர்களும் பெரும் போரிடப் புறப்பட்டு இருக்கின்றனர்.

7. அருமை நண்பரின் இந்தக் கேள்வியில் தான் அவரது உண்மை வடிவம் அடங்கி இருக்கிறது என அறிகிறேன். இத்துணைக் கேள்விகளையும் ‘எழிலிமைய’ம் போல் கேட்டு விட்டு; ‘’வேண்டாத இந்த மொழி விசயத்தில்…” என்று கூறி விட்டீரே. வெற்று வேலைதானே இது உமக்கு. மூளைத்தெளி விருந்தால் இப்படிக் குறிப்பிட்டிருப்பீரா? ஆனாலும் சொல்கிறேன் கேளும்; மாநிலைக்கண்ணர்களின் மதி மயக்கத்திற்கு; சோலைக்கொடி பூத்தச்சுந்தரக்’ குறள் நெறி’ மலராம் இது வாடிவிடாது. தமிழ் வளர்ச்சி ஒன்றே குறள் நெறியின் தலையாயக்கடன். அதன் முழக்கம் தனிப்பட்ட கட்சியென்றினுக்குப் பலம் தருவதாக இருக்கிறதென்றால்; உம் போன்றப் பத்தாம் பசலிகள் தமிழின் மீது பற்று வந்து விட்டதாக நடித்துக் கொண்டு, தேசியத் திருவடிக்குத் தாசராகித் தெளிதேன் தமிழை அடகு வைக்கும் தீக் செயலை விடக்கொடிய தல்ல என உணர்த்த விரும்புகிறேன். மொழி வழியும் மொழியின் பாற்பட்ட இனவழி தேசியம் உருவாகாது. என்றோ எக்காரணத்துக்கோ உருவான இந்தியத் தேசியத்திற்கு இன்றமிழைப் பலியிடும் உம்மைப் போன்றவர்கள் தமிழுக்கு மகனாகப் பிறந்ததே தவறு. இனியேனும் உண்மைத் தமிழ்ப்பற்றிருந்தால் தன்மானத்தமிழுணர்வு கொஞ்சமேனும் மீத மிருந்தால் இது போன்ற பொருளற்ற கேள்விகளைக் கேட்டு எல்லாவர்களைப் புண்படுத்தாதீர். துணிவாக இறங்கும் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் துணைக்கு நானிருக்கிறேன்; சாவதெனில் உமக்கு முன் நான் இறக்கிறேன்.

குறிப்பு : நீர் இந்தி ஒழிப்புப் போராட்டத்தில் இறங்கி விடப்போவதாகக் கூறி இருக்கிறீர்; அவ்வளவு சிரமம் கூட உமக்கு வேண்டா. அதற்கு ஆயிரமாயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னுயிரையும் தரும் இலட்சிய வீரர்களுக்காக நீர் ஒரு சொட்டு கழிவிரக்கக் கண்ணீர் கூடவிட வேண்டாம். நீர் பைந்தமிழுக்காக உயிர் நீத்த சின்னச்சாமியைப் பைத்திய மென்று கூறியதாக ஒரு நாளிதழில் படித்தேன் இனியேனும் அது போன்ற பைத்தியக்காரத்தனமான செயலில் ஈடுபடாமலிருந்தால் அதுவே போதும்.

–    குறள்நெறி : பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 7, 16

thamizh-hindi02