கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

  1. திருமாவளவன் விளக்கம் சரிதானே!

தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. தீ பரவுவதுபோல் தான் கொண்ட கொள்கையை முனைப்புடன் வாதிட்டுப் பரப்புவது தீவிர வாதம். ஒரு வேளை அந்தக் கொள்கை தவறாக இருந்தாலும் அது தீவிரவாதம்தான்.  அதே நேரம் தான் கொண்டுள்ள கருத்தை அல்லது கொள்கையைச் செயல்படுத்துவதற்காக வன் முறையில் இறங்குபவன் பயங்கரவாதி. பயங்கரவாதி என நாம் கூறினாலும் கொடுங்கோலன் என்றும் இதற்குப் பொருளுண்டு.பேராயக்(காங்.)கட்சியில் சில தலைவர்களைத் தீவிரவாதிகளாகக் குறிப்பிட்டுள்ள வரலாறு உண்டு. பிறரை இதனால் மிதவாதிகள் என்றனர். நாம் தவறாகப் புரிந்து கொண்டதை மாற்றி, முனைப்பான வாதமே தீவிரவாதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தீவிர நிலையில் இருந்து மாறித் தன் கொள்கைக்காக ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்பவனே பயங்கரவாதி என்றும் அவ்வாறு ஆயுதத்தைக் கையில் எடுப்பவனே வன்முறையாளன் அல்லது கொடுங்கோலன் என்பதைப் புரிந்து கொள்ள  வேண்டும். 

வழக்கில் வாதிடுபவரை வாதி என்றும் எதிர் வழக்காளரை எதிர்வாதி என்றும் கூறுகின்றோம். தீவிரவாதி என்பது தவறென்றால் இதுவும் தவறுதான். எந்த அகராதியை எடுத்துப் பார்த்தாலும் வாதி என்பது தவறாகக் குறிக்கப்பெறவில்லை. எனவே தீவிர வாத விளக்கத்தை வன்முறைச் செயலாகக் கருதுவது வன்முறையாகும் என்பதை உணர வேண்டும். இத்தகைய சொல் விளக்கத்தைக் கருத்து விளக்கத்தால் மறுக்க வாய்ப்பிருந்தால் மறுக்கலாம். மாறாக வழக்கு தொடுப்பது என்பது வன்முறைச் செயலாகும்.

 13.தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?

 ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரும் ஒரே கட்சியினராகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சியினராக இருப்பதும் இயற்கைதான். பேராயக்(காங்.)கட்சித் தலைவரான குமரி அனந்தன் மகள் தமிழிசை பா.ச.க.கட்சியில் இருப்பதுபோல் அவரது மகன் சுகநாதன் அன்னைக்கு எதிரான கருத்து கொண்டிருந்தால் அஃது இயற்கையே!

கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் பா.ச.க தலைவர் தமிழிசை செளந்தரராசன், செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது, பா.ச.க. தொண்டர்கள் பலரும் இருந்துள்ளனர். அதுபொழுது, அவரது மகன் மருத்துவர் சுகநாதன் பா.ச.க.விற்கு எதிராக / பா.ச.க. ஒழிக என – முழக்கமிட்டதாகவும் அவரைப் பா.ச.க. தொண்டர்கள் அப்புறப்படுத்தியதாகவும் செய்தி வந்தது.

இது குறித்து ஊடகங்கள் எழுதியதற்காகத் தமிழிசை, குடும்ப நிகழ்வை அரசியலாக்குவதாகக் குறிப்பிட்டு வேதனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிரில் பா.ச.க.விற்கு எதிரான முழக்கமிட்ட  ஆராய்ச்சி மாணவி சோபியாவின் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பொழுது வாளாவிருப்பது ஏன் என்பது பலரும் தொடுக்கும் வினா. இதனால் தன் கட்சிப்பதவிக்கு ஏதும் இடர் வருமோ எனத் தமிழிசைக்குக் கவலை. கட்சியினரிடம், முதலில் குறிப்பிட்டதுபோல் மாறுபட்ட அரசியல் கருத்து என்பது இயல்பானது என்றுதான் அவர் விளக்க வேண்டும். மாறாகப் பிறரைக் கண்டித்துப் பயனில்லை.

இதனைக் குடும்ப நிகழ்வாகக் கூறுகிறார். நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தால் குடும்ப நிகழ்வாகக் கருதலாம். ஆனால், மக்கள் கூடும் பொதுவெளியில் நிகழ்ந்துள்ளது. மேலும் அவரது மகன் சிறுவனும் அல்லன், பாமரனும் அல்லன்; மருத்துவர். சிறுபிள்ளைத் தனமாக அவர் சினந்து கத்தினார் என்பது ஏற்பதற்கில்லை. மாணவி சோபியா மீது நடவடிக்கை எடுத்த இவர் மருத்துவ மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்பது இயல்புதான். இக்கருத்தினைக் கண்டுங் காணாமல் ஒதுக்கியிருக்க வேண்டும். மாறாகச் சப்பைக்கட்டுக் கட்டிக் கண்டனம் தெரிவிக்கக் கூடாது.

குடும்பத்திற்கு வெளியே நடக்கும் எந்நிகழ்வும் குடும்ப நிகழ்வாகாது என்பதைத் தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்