கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை
மண்ணும் மரபும்
– இளைய தலைமுறையினருக்கு
இனிய அறவுரைகள் நிறைந்த கவிதைநூல்
– கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
‘மண்ணின் மணம்’ என்னும் முதற்பகுதியில் தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில் தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி தமிழ்கொலை புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.
‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில் மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை பெரியார், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., கவி.காமு செரீபு, கருமவீரர் காமராசர், பண்டித நேரு, கவியரசு கண்ணதாசன் ஆகியோரையும் அருமையாகக் கவிதைக் காட்சியாக்கிக் காட்டுகிறார்.
எல்லோரும் பாடிய தலைப்புகளிலேயே திரும்பத் திரும்பப் பாடாமல், புதிய தலைப்புகளில் இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளையே இவர் யாத்துள்ளார். இணையத்தில் இன்பத்தமிழ், இழையோடி ஒளிவீசுவதையும், மனிதநேயத்தின் மாண்பினையும் வற்புறுத்தி, மனித வளத்தை உண்ணும் வன்முறைகளைச் சாடி, அன்பே அடித்தளம் என்பதை எடுத்துரைத்து, வெடிகுண்டு ஒழுகலாற்றை(கலாச்சாரத்தை) வேரறுக்கச் சொல்லும் கவிதைகள் நெஞ்சத்தைத் தொடுகின்றன.
“புதியதோர் உலகம் செய்வோம்” என்று பாடிய புதுவைப் புரட்சிக்குயில் பாவேந்தரை அடியொற்றி “போர்வெறி ஒழிக, புதுயுகம் எழுக” என்கின்றார் இந்தப் புத்துலகக் கவிஞர். மழலைச் செல்வத்தையும் பாடுகிறார். மக்கள் பெருக்கத்திற்கு வழிகோலும் மடமையையும் சாடுகிறார். அரசியல்வாதிகளின் அட்டகாசத்தையும் சுட்டிக்காட்டி இளைய தலைமுறையினருக்கு இனிய அறவுரைகள் வழங்குகிறார்.
– கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
தரவு: முனைவர் மறைமலை இலக்குவனார்
Leave a Reply