கவிஞர் முடியரசன்- இ.மறைமலை
கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் பாவலர் முடியரனேயாவார் என முட்டின்றிச் சொல்லவியலும். மறைமலையடிகளாரின் மாண்புடைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தகர்த்தெறிய முற்பட்ட, தீந்தமிழில் திரைக்கவிகளை எழுதித்திரட்டிவிட்ட சில தான்தோன்றிகளைப் போலன்றித், தமிழாலே உயிர் வளர்த்தும் தமிழ்காக்க வகையறியாக் கள்ளதாசர்களைப்போலன்றித், தமிழ்க்கவி உலகிற்குத் தானே தலைவன் எனப் பறையறையும் தம்பட்டங்களைப்போலன்றிக் குடத்திலிட்ட விளக்காகக் குணமென்னும்குன்றேறி நின்ற பான்மையராய் விளங்குகிறார். அவரது மொழிப்பற்று சூழ்நிலை வயத்தால் எழுந்ததன்று; பருவநிலையால் பெருகிவரும் காட்டாறுபோலன்றித் தண்ணென்றொழுக்கம் தழுவிச் செல்லும் வற்றாத ஆறுபோன்று நிலைத்த பான்மையுடையது.
செந்தமிழ் நாட்டினைத் தந்தையர்நாடெனத் தலைமேல் போற்றி அருந்தமிழ்க் கவிதை விருந்தளித்த பெருங்கவிஞன் பாரதி, குன்றிய தோளுடைய இன்றைய தமிழரின் இழிநிலை போக்கிடத் தமிழியக்கம் கண்ட தனிப்பெருந்தகையோன் பாரதிதாசன் ஆகியோர், விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து நடாத்துபவர், தோற்றம் மறைவிலாத் தொல்தமிழ் இன்று வேற்றவரின் மொழியால் வெதும்பி வாடுவதை ஆற்றாது கனன்றெழுந்து ஊற்றாகப் பெருகிவரும் உணர்வுகளை ஆற்றொழுக்காய் அருந்தமிழில் அமைத்து நயமிக்க கவிதைகளாக நமக்களித்த முடியவரனேயாவார் என்பதற்கு அவரது கவிதைகளே கரி பகரும்.
அவரது புதுமை நோக்கிற்கு ஒரு சான்று: நிலவு, விண்மீன்கள், தாமரை ஆகியவற்றை ஒரு சேரக்காணின் நடன அரங்கத்திற்கு ஒப்பிடுதல் கம்பர் வழிவந்தோர் மரபு. குலவி சீர்த்தமிழறிஞர் நிலவுதமிழ்ப்பெருமை பரப்ப மேடையேறி நிற்கும்போது, கல்லெறிந்து காயப்படுத்தும் கீழ்மக்கள் நிறைந்த தமிழ்நாட்டுப் பேச்சு மேடையை நினைவுகூர்கிறார் கவிஞர்.
மதியுடையோர் பேசுவதைக் கேட்டல்நன்று
மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்
அதுமகிழ வானத்து மேடைஏறி
அம்புலியார் சொற்பொழிய, முகிலன் ஓடி
எதிரியெனக் கூட்டத்துள் ஒளி மறைத்தான்
இடியிடித்தான்,குழப்பத்தை ஆக்கிவிட்டான்
இதிலென்ன கண்டனனோ? மதியர்நாளை
ஏறாமல் இருப்பாரோ மேடைமீது?
என அழகாகத் தமிழ்நாட்டுப் பேச்சு மேடையைச் சொற்போர் புரிவோருடன் கற்போர் புரிவோரை வருணனை செய்கிறார்.
“இதிலென்ன கண்டனனோ? மதியர்நாளை
ஏறாமல் இருப்பாரோ மேடைமீது?”
என்ற வரிகளில் அங்கதம் ஒலிக்கிறது. கல்லால் அடித்துவிடுவதால் அறிஞர் வாயிலாக வெளிப்படும் உண்மையை மறைத்துவிடல் இயலாது எனும் உண்மையை உணர்த்துகின்றார். இவர் காலத்துக்கேற்ற கவிஞர் எனக்காட்ட இஃதொன்றே சாலும்.
இக்காலம் தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கேடுகாலமாய் அமைந்துள்ளது. இதனைத் தன் நூல்தோறும் கவிதோறும் உணர்த்துகிறார் கவிஞர். மொழியை வளப்படுத்தும் தனித்தமிழ் இயக்கத்திற்கும் கவிஞரது பாடல்கள் துணை நிற்கின்றன. தென்றலின் மென்சுகத்தில் திளைக்கும் கவிஞர்
இது பிறந்த மலை எங்கள் தமிழகமே
எனும்போது சிலிர்க்கும் உள்ளம்
எனத் தென்றலுக்கும் தனக்கும் உள்ள உறவை எண்ணி மேலும் மகிழ்வெய்துகிறார். தென்றல் மகிழ்விப்பதையும் வாடை வாட்டுவதையும் எண்ணுங்கால் வடக்கிருந்து வருபவையால் (குறிப்பாக இந்தியால், வடமொழியால்) துயருழந்து வாடுவதையும் தெற்கு இன்பம் படைப்பதையும் எண்ணி மகிழ்கிறார்.
ஆற்றின் இயக்கம், சார்பற்றுத் தனித் தியங்கவல்ல தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்தபோதும் நேர்வுற்று மாசின்றி இயங்கும் பண்பை மட்டும் கவிஞருக்கு நினைப்பூட்டவில்லை. கரையெழுப்பிய கரிகாலனையும் ஆட்டணத்தி வரலாற்றையும் ஏட்டுச்செல்வம் அழித்தொழித்த பதினெட்டாம் பெருக்கையும் நினைப்பூட்டுகிறது. கடலோவெனின் யாதும் ஊர், பிறரெல்லாம் கேளிர் என்ற பற்றுடைய தமிழினத்தார் பரந்த மனப்பான்மையை நினைப்பூட்டுகிறது. சகமெல்லாம் போற்றும் சங்க இலக்கியங்களை அழித்து, புகாரையும் அழித்து இன்று சிங்கநிகர் பன்னீர்ச்செல்வத்தையும் செத்தொழியச் செய்த கடல் நாகையினையும் தரங்கம்பாடியையும் தன் அலைக்கையால் அழிக்கழிக்கிறது. நம் முன்னோர் நெய்த னலெனப் பெயர் சூட்டி, ” இரங்கல் உரிப்பொருளாம் என உரிமைப் பொருளும் தந்ததனால் அழித்தழித்து நம்மை இரங்கச் செய்கிறது என நயத்தோடு கூறுகிறார்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை. கோவில்களிலும் வேறேதோ மொழி வழங்குகிறது. எனவே,
… தமிழ்நாடும் கோவில்மன்றும்
நாதியற்ற சொத்தோ? உம் சொந்தமன்றோ?
சென்றந்த உரிமைபெற வீரம் இல்லை?
இவ்வினா தமிழ் வழங்காக் கோவிலுள்ளே தலைகாட்டேன் என்று கூறிவிட்டுக் கோயிலிலிருந்து வடமொழியை நீக்க வகை செய்யாது கடமையைத் தட்டிக் கழிக்கும் வீரர்க்கு ஒரு சாட்டையடி! கவிஞன் இருளில் வாழும் தன் தனிமைத் துயரைக் களைதற்குப் பாடும் ஒரு கருங்குயில் எனச் செல்லி(Poet Shelly) கூறுகிறான். சாதிச் சழக்காற்றினால், செல்வ வேறுபாட்டால் ஏற்றத்தாழ்வு பெற்றிருக்கும் இருளடைந்த மன்பதையில் ஒருவர்தான் முடியரசன். அவரது பாவெங்கும் பொதுவுடைமை இயக்கமே தலைதூக்கி நிற்கிறது.
அரைவயிறு மட்டும் உண்டு இளைப்பாறும் உழைப்பாளியின் சிறு குடிசைமீதும், பெருவயிற்றுப் பணக்காரன் மாடமீதும், வேறுபாடின்றி ஒளிவீசும் நிலவு ஒன்றே கவிஞருக்குப் பொதுவுடைமை ஆட்சியின் மாண்பினைக் காட்டுகிறது. அவரது கவிதைகளின் தொகுதியில் தொழில் ‘உலகு’ என்னும் பகுதியில் அவரது புரட்சிக் கருத்துகள் இடம் பெறுகின்றன. வளமிக்க நாடெனக் கூறப்படும் இந்த நாட்டில் வாழ ஒரு வழியின்ற வறுமைதன்னால் உளம்நொந்து கூலிகளாய்ச் செல்லுகின்றார் ஒப்பற்ற தமிழினத்தார். இந்நிலை பொறுக்காது,
விதி விதி என்று மக்கள்
வீணினில் மாய்ந்து சூழ்ச்சிச்
சதியினில் சிக்கி அந்தோ!
சாய்ந்திடும் நிலைமை கண்டும்
மதியொரு சிறிது மின்றி
மாற்றிட மனமு மின்றி
வதிவது நன்றோ ?நாட்டீர்!
வளமிகக் காண்போம் வாரீர்!
என அறைகூவல் விடுக்கின்றார் கவிஞர்.
வீரம் மிக்க தமிழ் மறவரே! இலங்கை, பருமா, நாட்டோர், கிழங்கென்றும் கீரையென்றும் எண்ணி நம்மைக் கீழாக்கிவிட்ட இந்த நிலை ஒழிக்கக் களங்காண வாரீர்! கவியரசர் தலைமையிற் படை திரள்போம் வாரீர்! மொழி காக்க, இனங் காக்க வாரீர்! வாரீர்!
-முனைவர் மறைமலை இலக்குவனார்
மாணவப்பருவத்தில் எழுதிய கட்டுரை
குறள்நெறி தை 02, 1996 / 15.01.65
Leave a Reply