குற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்
‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது?’ என்பது தான்.
‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்;
கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா? கருநிறமானதா என்று அறிய இன்று ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியிருக்கும்போது உங்கள் தோற்றத்துக்கே பெருஞ்சிறப்புத் தரக்கூடிய மீசையைப் பற்றிக் கவிதை எழுதினால் என்ன? என்று ஓர் எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அதனால் எழுதினேன்’ என்று விடையிறுத்தேன்.
‘உனது பாட்டில், இலக்கிய நயம் மிகுந்து காணப்படுகிறது. எனது மீசைக்கு நீ வௌவாலை உவமை கூறியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் உனது பாட்டில் குற்றியலுகரப் பிழைகள் காணப்படுகின்றன. அப்பிழைகள் நேராதவாறு இனிப்பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். உடனே ஒரு தாளை எடுத்து குற்றியலுகர இலக்கணத்தை விளக்கி எடுத்துக் காட்டினார். பாடலில் குற்றியலுகரப் பிழைகள் நேரும்போது, அதைக் கருத்துக் கெடாமல் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதையும் பல எடுத்துக்காட்டுகளால் விளக்கினார்கள். பிறகு மொழிப் புலமை ஒரு கவிஞனுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்கத் தமது வாழ்க்கையிலிருந்து பல நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார்கள்.
அவர் கூறியதாவது:
‘இலக்கணப் புலமை இல்லாத கவிஞன் புலவர்கள் நடுவே சிறப்புப் பெற முடியாது. இப்போது பாடல் எழுதுவோர் இலக்கண வரம்பைச் சரியாகக் கவனிப்பதில்லை. அதுவும் குற்றியலுகரத்தைப் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் விளம்பரம் பெற்ற கவிஞர்கள் கூடச் சிலர் குற்றியலுகரப் பிழையோடு எழுதுகின்றனர்.
பாரதியார் கூடத் தொடக்கக் காலத்தில் இலக்கணத்தைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படமாட்டார். சுட்டுச் சொல்லுக்குப் பின் வல்லினம் மிகும். அங்கு + போனான் = அங்குப் போனான் என்று எழுத வேண்டும். ஆனால் பாரதியார் அங்கு போனான் என்றே எழுதுவார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில், பூ. ஆ. பெரியசாமிப்பிள்ளை, பங்காரு பத்தர், திருப்புளிசாமி ஐயா ஆகிய தமிழறிஞர்கள் அங்கு வாழ்ந்தனர். மூவரும் எனது தமிழாசிரியர்கள் திருவாளர் பெரியசாமிப்பிள்ளை கால்வே கல்லூரியில் புலவர் வகுப்புக்கு ஆசிரியர்; பெரும் புலமை வாய்ந்தவர். இவருக்கு ஒப்பாக மற்றொருவரை அக்காலத்தில் சொல்ல வேண்டுமென்றால் திரு அரசஞ்சண்முகனாரைத்தான் சொல்ல வேண்டும்.
பெரியசாமிப்புலவர் பாரதியார் செய்யும் இலக்கணப் பிழையைப் பார்த்துவிட்டு, ‘‘இவனெல்லாம் பாட்டெழுத வந்திட்டான், இலக்கணம் தெரியாம…’ என்று சினத்தோடு திட்டினார்.
தான் பாரதியாரிடம் வந்து இதைப்பற்றிச் சொன்னேன். அங்கு + போனான் = அங்குப் போனான் என்றுதான் நீங்கள் இனி எழுத வேண்டுமென்று வற்புறுத்தினேன். அதற்குப் பாரதியார் சொன்னார்: அங்குப்போனான் என்று எழுதினால் என்னவோ போல் இருக்கிறது. இயற்கைக்கு முரணாக ஒலிக்கிறதே என்றார்.
‘எப்படி ஒலித்தால் என்ன? நீங்கள் இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் எழுத வேண்டும். புலவர்கள் இலக்கணம் தெரியாதவன் என்று கேவலமாகப் பேசுகிறார்கள் என்று சொன்னேன். அதற்குப் பிறகு பாரதியார் இலக்கணத்தில் அதிக அக்கறை காட்டத் தொடங்கினார்.
என்னைக் கூடத் தமிழகத்துப் புலவர்கள் நீண்ட நாளாக மதிக்கவில்லை. இவன் என்ன கவிதைபாடுபவன்தானே? இவனிடத்தில் ஆழ்ந்த மொழிப்புலமை இருக்கவா போகிறது? என்று எண்ணினர். நான் யார் தெரியுமா? முப்பத்தேழு ஆண்டுகள் தமிழ்ப் புலவர் வகுப்புக்குப் பாடம் நடத்தியவன். இது பலருக்குத் தெரியாது. பெரும் புலவர்களிடத்தில் ஏழு ஆண்டுகள் இலக்கிய இலக்கணப் பாடம் கேட்டு ஆசிரியன் ஆனவன். என்னுடைய புலமையைத் தமிழ்ப் புலவர்கள் முன்னிலையில் பலமுறை புலப்படுத்தினேன். அதன் பிறகே என்னை மதிக்கத் தொடங்கினர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அதற்குத் தலைமை ஏற்க என்னை அழைத்திருந்தனர். நான் தலைமை ஏற்றிருந்த அந்த மாநாட்டிற்குத் தமிழகத்துப் பெரும் புலவர்கள் பலர் வந்திருந்தனர். முனைவர் மா.இராசமாணிக்கம், ஔவை சு.துரைசாமி(ப்பிள்ளை), மயிலைமடம் கல்லூரித் தலைவர் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அன்று என் கூட்டத்தில் கலகம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்திருந்தது. உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டிருந்த ஒரு தடியன் என் பேச்சினிடையே எழுந்து நின்றான்.
‘பெரியார் இராமணயணத்தை எரிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்! இராதா கீமாயணம் போட்டு இராமயாணத்தை இழிவு படுத்துகிறான்! இது சரியா? இராமன் கடவுளல்லவா?’ என்று என்னைப் பார்த்துக் கேள்விகள் கேட்டான். எனக்குச் சினம் மிகுதியாக வந்துவிட்டது.
‘‘நீ ஒரு சைவன்தானா? நீ சிவஞான சித்தியார் படித்திருக்கிறாயா? சிவஞான சித்தியாரில் அருள்நந்தி சிவாச்சாரியார் வைணவனை முன்னிலைப்படுத்திச் சில கேள்விகள் கேட்கிறார். மாயமான் பின்னால் ஓடி, மாயையில் சிக்கிய இராமன் கடவுளா?’’ என்று கேட்கிறார்.
அப்பாடல்:
மாயமான் தன்னைப் பொய்மான்
என அறியாத ரக்கன்
மாயையில் அகப்பட்டுத்தன்
மனைவியை இழந்தான் தன்னை,
மாயைக்குக் கர்த்தா என்பை;
மதிகெட்டங் கவனைக் கொன்று
நாயனார் தமைப்பூ சித்தான்
கொலைப்பழி நுணுகி டாமே! – என்பதுதான்!
சைவனாகிய நீ இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?’’ என்று கூறினேன். அந்தச் சைவன் நடுநடுங்கிப் போனான். கூட்டம் முடிந்ததும் என்னிடம் வந்தான் ‘’ஐயா! உங்களுடைய புலமையை நான் அறியாது போனேன்! மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறினான்.
இதுபோலப் பல இடங்களில் என்னுடைய ஆற்றலைப் புலப்படுத்திய பிறகுதான் புலவர்கள் என்னை மதிக்கத் தொடங்கினர். திருக்குறளுக்கு நான் உரை எழுதத் தொடங்கிய பிறகுதான், புலவர்களிடையே அச்சங் கலந்த மரியாதை என் மீது தோன்றலாயிற்று’’ என்று கூறினார் பாவேந்தர்
Leave a Reply