குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே!
தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றக் கட்சித்தலைவராக வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசனைத் தேர்ந்தெடுத்ததும் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் தமிழ்நாடு விரைந்து வந்திருக்க வேண்டும். இது தொடர்பில் அவர் மத்திய அரசின் உரியவர்களைக் கலந்தாய்வதும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதும் முறையானதே! ஆனால், அதை ஒளிவுமறைவாகச் செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வரும் நாளையும் தெரிவிக்கலாம். காலத்தாழ்ச்சி செய்யாமல், ஆளுங்கட்சியின் ச.ம.உறுப்பினர்களின் முடிவை ஏற்றிருந்தால், பன்னீர் வெந்நீரான நிலை ஏற்பட்டிருக்காது.
பன்னீரின் இந்த முடிவிற்குக் காரணம் திமுகவின் தூண்டுதல் என்று சொல்வதைவிட அக்கட்சியின் அரசியல் தந்திரத்திற்கு இரையாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தை இருக்கும்பொழுதே தனக்கு முதல்வர் பதவி, கட்சித்தலைவர் பதவி வேண்டும் என்று போராடி வருபவர் இன்னொருவர் அதுவும் வேறு கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராகவா கட்சி நடத்திக் கொண்டுள்ளார். இதுகூடப் பன்னீருக்கப் புரியாமல் போனது வியப்புதான்.
பணிவிற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டான பன்னீர், இன்று நடிப்பிற்கும் எடுத்துக்காட்டாக மாறியதுதான் வருத்தமாக உள்ளது. அவர் கூறிவரும் கருத்துகள் யாவும் நடைமுறைக்கு ஏற்றனவல்ல!
தன்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகும் மடலைப் பெற்றதாகக் கூறுகிறார். பொதுவாக எந்த அமைப்பிலிருந்தும் ஒருவரை ஏதேனும் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும்என்றால், முறைப்படி விலக்கினால் அவருக்குக் களங்கம் ஏற்படலாம் என்பதற்காகத் தானாகவே விலகியதாக எழுதி வாங்குவதே வழக்கம். சிலர் மட்டுமே இத்தகு சூழலில் நீங்களே விலக்குங்கள் நான் விலகவில்லை என்பார்கள். அவ்வாறு பன்னீர் தெரிவித்திருக்கலாம்.
மேலும் கட்டாயப்படுத்தினால் மடல் எழுதும் இவர், பிற கட்சியினரின் துணையுடன்ஆட்சிக்கு வந்தால் கட்டாயத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? இதுவே இவருக்குத் தகுதி குறைவாகிறதே!
தன்னையே முன்மொழிய வைத்ததாகவும் கூறுகிறார். எல்லாக்கட்சிகளிலும் அமைப்புகள், நிறுவனங்களிலும் போட்டிக்கு வாய்ப்பிருந்து, போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பின், போட்டியாளரை முன்மொழியச் சொல்வதே நடைமுறை. அவ்வாறிருக்க அதனைக் குறையாகக் கூறுவதும் பொருத்தமில்லை.
செயலலிதா காலமானதுடன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி அல்லது வேறொருவரை முதல்வராக்க எண்ணியதாகவும் பா.ச.க.வால் பன்னீர் முதல்வரானதாகவும் அதனால் இருவருக்கும் இடையே காழ்ப்புணர்ச்சியும் பனிப்போரும் ஏற்பட்டுள்ளதாகவும் இதழ்களில் செய்தி வந்தன. ஆனால், பன்னீரே, சசிசலா, அவைத்தலைவர் மதுசூதனரைப் பொதுச்செயலராகவும் தன்னை முதல்வராகவும் ஆக்க விரும்பியதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால், அவர் திட்டமிட்டு முன்னாள் முதல்வரைச் சாகடித்ததாகவும் கட்சி, ஆட்சிப் பொறுப்புகளுக்கு வர முயன்றதாகவும் ஊடகங்கள் கூறி வந்தமை பொய் என்றாகிறது. அவர் கூறியபடி, அவைத்தலைவர் பொதுச்செயலராக வந்திருந்தால், இப்போதைய நிலை வந்திருக்காது. ஆனால், இவரே சசிகலாதான் பொதுச்செயலராக வேண்டுமென்று காலில் விழுந்து இறைஞ்சிமன்றாடிவிட்டு இப்பொழுது வேறுவகையாகக் கூறுவது அவர் பண்பிற்கு ஏற்றதல்ல.
விலகல்மடலைத் திரும்பப் பெறுவதாகக் கூறுகிறார். அப்படியானால், விலகலை ஏற்றதாக ஆளுநர் வாய்மொழியாகத் தெரிவித்ததாகவும் எழுத்து மூலம் தெரிவிக்க வில்லை என்றும் கூறி, இவரையே பெரும்பான்மையை மெய்ப்பிக்க வாய்ப்பளித்து முதல்வராகத் தொடரச் செய்ய வாய்ப்பிருக்கும். அதனால்தான் அவர் இவ்வாறு கூறுகிறார். மத்திய அரசின் – மத்திய ஆளுங்கட்சியான பா.ச.க.வின் ஒத்துழைப்பின்றி இவ்வாறு நிகழ வாய்ப்பில்லை. எனவே, ஆளுநரின் காலத்தாழ்ச்சி, கட்சிக்கு எதிரான பன்னீரின் நிலைப்பாடு முதலானவற்றிற்குப் பா.ச.க.வே காரணம் என்பது தெளிவாகிறது.
ஒருவேளை இத்தகைய வாய்ப்பினை நல்கிப் பன்னீரையே முதல்வராகத் தொடரச் செய்தால், அவர் முதல்வராகத் தொடரக் காரணமானவர்களே அதனை நிலைக்க விடமாட்டார்கள். நம்பிக்கை தீர்மானத்தின் பொழுது தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாய்ப்பளித்தாலும் இவரைக் கவிழ்த்துத் தாம் பொறுப்பிற்கு வருவதில்தான், இப்போதைய ஆதரவாளர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். பா.ச.க. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆள்வதற்குத்தான் இது துணைபுரியும். இதைத்தான் மாண்புமிகு இடைக்கால முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறாரா?
வஞ்சகம்(துரோகம்) இழைக்கவில்லை என்பதுபோன்ற பேச்சுகள் எல்லாமே கட்சியைப் பிளவுபடுத்துபவர்கள் முதலில் பேசும் பேச்சுகள்தாம். எனவே, இவற்றை மக்கள் நம்பவில்லை.
ஒன்றைப் பன்னீர் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருவேளை இச்சூழல் எழாமல் அவரே முதல்வராகத் தொடரும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? இன்றைய ஆதரவு நடிப்பாளர்கள், சேகர்(ரெட்டி) முதலானவர்களுடன் தொடர்புடைய ஊழல் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்றுதானே போர்க்குரல் கொடுத்திருப்பர்? தனக்கு எல்லாவயைிலும் துணை நின்ற கட்சியினரை விட்டு ஆதரவு நடிப்பாளர்களை நம்புவது அறியாமையல்லவா?
மறதியும் அறியாமையும் மிக்க பலர், சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்அல்லர் என்றும் செயலலிதாவிற்காக வாக்களித்தார்களே தவிர, இவருக்காக வாக்களிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். அப்பாவி மக்களில் பெரும்பான்மையர் இதை நம்புகிறார்கள்.
குடியரசுத்தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லரே! மாநிலங்கள் அவை உறுப்பினரல்லாத துணைக்குடியரசுத்தலைவர்தான் மாநிலங்கள் அவைத் தலைவராவார். இராசீவு காந்தி அரசியல்பட்டறிவின்றியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலும்தான் இந்தியத் தலைமையமைச்சரானார், அரதனஃகல்லி தொடே(கௌடா) தேவெ(கவுடா) (Haradanahalli Doddegowda Deve Gowda), மன்மோகன்(சிங்கு) முதலானவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தலைமையமைச்சர் ஆனவர்கள்தாம். கொல்லைப்புறவழியாக முதல்வரானவர் என இராசாசி(இராசாகோபாலாச்சாரியார்) சொல்லப்பட்டாலும் பேரறிஞர் அண்ணாவும் இதேபோல் முதல்வரானபின்னர் மேலவை உறுப்பினராலும் வேறு நிலைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டடவர்களே. ஆனால், மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டவர்களை ஆளுநர்களாகவும் அமை்சசர்களாகவும் அமர்த்தும் வழக்கம் இன்றளவும் தொடர்கின்றது. எனவே, இக்கூற்று பொருந்தாது.
மூன்றுமுறை முதல்வர் பொறுப்பு வகித்ததன் அடிப்படையிலும் அரசியலில் உரிமைகோரல் இயலாது. இடைக்காலத் தலைமையமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தாவும் இடைக்கால முதல்வராக இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனும் உரிய பதவிகளில் அமர முடியவில்லையே! பணி மூப்பை ஓரங்கட்டிவிட்டுத் தமக்கு முன்னுரிமை அளிக்கும்பொழுது தாமே தகுதியுடையவர் என மகிழ்வதும், தமக்குப் பாதிப்பு வரும் பொழுது மூப்பு நிலை மீறுவதாகக் குமுறுவதும் பலரின் இயல்பு. ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரானதும் முதல்வரானதும் இவரைவிட அக்கட்சியில் மூப்புநிலையில் இருந்தவர்களும் அணிமாறாமல் கட்சியிலேயே கட்டுப்பாட்டுடன் இருந்தவர்களும் கட்சியின் முடிவிற்குக் கட்டுப்பட்டுள்ளனர். இன்றைக்கு அவர், தன்னைப் புறக்கணிப்பதாகக் கூறுவது ஏற்புடைத்தல்ல.
சசிகலா மீதுள்ள பொருளாதராக் குற்ற வழக்கில் விடுதலை செய்யப்பெற்று மேல் முறையீட்டு நிலையில் உள்ளார். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவர்களும் பதவிகளில் அமர்த்தப்படுவது வழக்கமாக உள்ள நாட்டில் இதனைக் காரணம் காட்டுவது எப்படிப் பொருந்தும்? நீதிமன்றம் எடுக்க வேண்டிய முடிவை தானே எடுத்துக் குற்றவாளி என்ற கோணத்தில் ஆளுநர் முடிவெடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகாதா?
இவ்வாறு சசிகலாவிற்கு எதிராகப் பரவலாகக் கூறப்படுவன யாவும் தவறான ஊகங்கள் அடிப்படையிலானவையே! நடைமுறையில் அவை யாவும் பொருந்தா.
நம்மைப்பொறுத்தவரை யார் ஆட்சியில் அமர்ந்தாலும் அந்த ஆட்சியானது அதன் காலம்முழுவதும் நிலைத்திருக்க வேண்டும். அந்த வகையில் அதிமுக ஆட்சி நிலைக்க வேண்டும். தி.மு.க.வும் குறுக்குவழியில் வரவிரும்பவில்லை என அதன் (செயல்)தலைவர் தாலின் கூறியுள்ளார். தேர்தல் மூலம்வந்தால்தான் நிலைக்க முடியும் என்ற நல்ல நிலைப்பாட்டில் உள்ளார். ஆனால், தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் பன்னீர் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடா. அவரை அந்த நிலைக்குப் பிற கட்சிகள் தள்ளினாலும் மத்தி அரசு அதற்கு உடன்பாடாக இருக்கக்கூடாது..
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் பேர அரசியலுக்கு இடமளிக்காத வகையில் சட்டமன்றப் பெரும்பான்மைக்கட்சி உறுப்பினர்களின் கருத்திற்கிணங்கச் செயல்பட்டு, மக்களாட்சியின் மாண்பைக் காக்க வேண்டும்.
பதவியில் அமர்வதும் பதவி இழப்பதும் இயற்கையே! ஆனால், அவ்விரு நிலைகளிலும் நடுவுநிலை அறத்தைக் கடைப்பிடித்தலே சிறந்ததாகும்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 115)
– இலக்குவனார் திருவள்ளுவன்
திரு-படைப்புகள் வலைப்பூ: பிப்.08, 2017
http://thiru-padaippugal.blogspot.in/2017/02/blog-post_8.html
Leave a Reply