(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

661. Active Confidence  செயலுறு நம்பிக்கை  

முனைப்பான நம்பிக்கை  

செயற்திறமுடைய  நம்பகத்தன்மை  

ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம்.  

நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு 111 இல் பயன்படுத்தப்படும்  கூட்டுச் சொல்லாகும்.  

ஒரு தரப்பினர் பரிமாற்றத்தில் செயலுறு நம்பிக்கையில் இருக்கும் பொழுது, நன்னம்பிக்கையை மெய்ப்பிப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம்  ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் நலன்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர் என்றும் இதுவே இரு தரப்பாரின் உறவுமுறைக்கு அடிப்படை என்றும் புரிந்து கொள்ளலாம்.

பரிமாற்றம் என்பது இரு தரப்பாரிடையே நிகழும் வணிக நடவடிக்கை.  

வழக்கிடுநர், விற்பனையின் நன்னம்பிக்கையின் மீது வழக்குரைஞர் மீது வழக்கு தொடுத்தால், பரிவர்த்தனையின் நன்னம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு வழக்குரைஞருடையது.  

பிணைப்பு நலன்களைத் தீர்மானிப்பதற்குரிய குறிப்பு அல்லது செயலுறு நம்பிக்கைக்குள் வருவது என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும் தன்மையுடையது.  
662. Active debtநடப்புக் கடன்  

வட்டி வரும் கடன்  

தீர்வு செய்யப்படாத நடப்பிலுள்ள கடன்  
663. Active Memberசெயல்நிலை உறுப்பினர்  

முனைப்புடன் செயல்படுவதால் முனைப்பான உறுப்பினர் என்கின்றனர்.  அதைவிடச் செயல்பாட்டு நிலையிலேயே உள்ளதால் செயல்நிலை உறுப்பினர் என்பது ஏற்றதாக இருக்கும்.  

ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள உறுப்பினரையும் இவ்வாறு குறிப்பர்.
 
664. Actual occupancyகுடியிருக்கை உடைமையாட்சி  

வளாகத்தில் அல்லது மனையில் அல்லது கட்டடத்தில் முழுமையாக அல்லது பகுதியாக  வாடகை அல்லது குத்தகை அடிப்படையில்  வைத்திருத்தல் அல்லது குடியிருத்தல்.
665. Active Partnerசெயற்கூட்டாளி  

தொழில்முறைக் கூட்டாளி,

செயல்நிறைக் கூட்டாளி, ஈடுபாட்டுப் பங்காண்மையர், முனைப்புக் கூட்டாளி என்றும் கூறப்படுகின்றன. 

  பங்காண்மையில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலீட்டாளரே செயற் கூட்டாளியாவார்.  

தொழிலில் அல்லது வணிகத்தில் வருவாயைப் பெருக்கப் பெயரளவிற்கு முதலீடு செலுத்திவிட்டு அமைதியாக இராமல் நாளும் உழைப்பவராக உள்ளார். ஆதலின், மேற்குறித்தவாறெல்லாம் கூறப்படுகின்றார்.
666. Active serviceமுனைப்பான சேவை  

முழுமையான பணி

தொழிலிடத்தில் அல்லது பணியிடத்தில் தன் முழுமையான பணிகளையும் செவ்வனே ஆற்றும் பாதுகாக்கப்பட்ட பணியாளரின் பணியாகும்.  

பணிக்கால ஊழியம்

ஓய்வூதியச் சட்டம் 10.01.இன் கீழ், உட்பணி அயற்பணிகளில் ஏற்கப்பட்ட விடுப்பு நீங்கலான, உண்மையான உறுதியான பணி.  

ஈடுபாட்டு ஊழியம்

நிதிச் சட்டம் 2012 இல், முதன்முறையாக “சேவை” என்பது சட்ட முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 65ஆ(44) இன்படி, ஒருவர் மற்றவருக்காக விளம்பரத்திற்காக அல்லாமல் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளும்  தொண்டு ஊழியம் ஆகும்.   ஈடுபாட்டுப் படைப்பணி   பொதுவாக  service என்பது படைப்பணியைக் குறிக்கிறது.   படைப்பணிக்காலத்தில் போரில் ஈடுபட்டிருந்தால் ஈடுபாட்டுப் படைப்பணி எனப்படுகிறது.
667. Active Titleசெயல்பாட்டுரிமை  

பொதுவாக மனைவணிகத்தில்(real Estate) செயல்பாட்டுரிமை என்பது மிகுதியாகப் பயன்படுத்தப் படுகிறது.  

உரிமையாளர் வேறொருவராகவும் அவர் சார்பில் அதனைச் செயல்படுத்துநர் மற்றொருவராகவும் உள்ள பொழுது மற்றொருவர் செயல்பாட்டுரிமையாளராக அறியப்படுகிறார்.
668. Activismசெயல்முனைவு

ஈடுபாட்டியம்  

நேரடியான தீவிரமான செயலை வலியுறுத்தும் ஒரு கோட்பாடு அல்லது நடைமுறை.

குறிப்பாக ஒரு சிக்கலில் தான் சார்ந்த கட்சி அல்லது அமைப்பின் முடிவிற்கு ஏற்ப, ஒரு புற ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுத்து அதற்காக அமைப்பு கூறுவதற்கேற்பப் பரப்புரை மேற்கொள்பவர் அல்லது போராடுபவர்.
669. Activistசெயல்வீரர்  

ஒரு குழுவின் உறுப்பினராக இருந்து  அரசியல் அல்லது குமுக மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்; செயல்வீரர்.

செயலூக்கத்தை ஆதரிப்பவர் அல்லது நடைமுறைப்படுத்துபவர்: கருத்து மோதலுக்குரிய சிக்கலில் ஒரு பக்கத்திற்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பாக வலுவான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்; முனைப்பான ஈடுபாட்டாளர்.  

தான் சார்ந்த அமைப்பின் சார்பில் ஊர்வலங்கள், கிளர்ச்சிகள், மறியல்கள், கதவடைப்புகள், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்.
670. Activityநடவடிக்கை  

செய்கைப்பாடு  

ஒன்றை நிகழ்விக்க அல்லது ஒரு நிலைமையைக் கையாள மேற்கொள்ளும் செயல்.   நலனுக்காகவோ மகிழ்ச்சிசக்காகவோ குறிப்பிட்ட நோக்கத்தை எய்துவதற்காகவோ செய்யப்படும் செயல்.