(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 979-984

  1. சுந்தரராசு – அழகரசன்
    அறிவிப்பு
    இந்நூலை என் அம்மானாரிடமிருந்து யான் விலைக்கு வாங்கிக் கொண்டமையால், இதன் பதிப்புரிமை எனதாகும்.
    சேலம்,
    சுந்தரராசு என்னும் அழகரசன்
    29, 12. 1949
    நூல் : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
    நூலாசிரியர் : பண்டித புலவ ஞா. தேவநேயனார், பி.ஓ. எல் (சேலம்
    ⁠நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்)
  2. சுந்தரேசன் – எழிலரசன் – எழிலன்
    கவிஞர் வானம்பாடி என்று தமிழர்களால் அழைக்கப்பட், கலைமாமணி, கவிஞர் திலகம், கவிசிரீ கவிஞர் வானம்பாடி துரை சுந்தரேசன் அவர்கள் 1948இல் வானம்பாடி என்னும் வார இதழினைத் தொடங்கிச் சில காலம் நடத்தினார்.
    இளமைக் காலத்திலிருந்தே எழிலரசன், எழிலன் என்னும் புனை பெயர்களில் எழுதி வந்தார். வானம்பாடி பத்திரிகையிலும் ஆசிரியர் எழிலன் என்றே காணப்படுகிறது.
    தி. வ. மெய்கண்டார்
    நூல் : அமரர் கலைாமணி கவிஞர் வானம்பாடி
    ⁠வாழ்க்கைக் குறிப்பு (1987)
  3. பாரதி – ‘கல்வி’ அறிவுள்ளவர்
    பாரதியாருக்கு அவர் தந்தையார் வைத்த பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். தாம் இளம் பருவத்தினராய்ப் இருந்த போதே இவர் கல்வி அறிவுள்ளவராகக் காணப்பட்டமையினால், விருதை சிவஞான யோகியார் என்னும் அறிஞர், கல்வி அறிவுள்ளவர் என்னும் பொருள்படும் பாரதி என்னும் பட்டத்தை இவருக்கு, எட்டயபுரம் சமத்தானத்திலே, குரு குகதாசப் பிள்ளை வீட்டிலே, கற்றோர் புகழும் அவையிலே, அளித்தார்.
    நூல் : தமிழ்ப் பெருமக்கள் பக்கம் – 68, ஏப்பிரல், 1949 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்
    நூலாசிரியர் : எசு. எசு. அருணகிரிநாதர்.
  4. பூதக் கண்ணாடி – உருப்பெருக்கிக் கண்ணாடி
    வானத்தில் – கொசு முதற்கொண்டு பெரிய கழுகுவரையுமாகப் பலவகைப்பட்ட பிராணிகள் பறவைகளாகக் காணப்படுகின்றன. இவை இறக்கைகளைக் கால்களாகக் கொண்டு காற்றென்னும் பாதையில் நடந்தும், பறவைகளாக வான வெளியில் சஞ்சரிக்கின்றன. இவை நம் முகக் கண்கொண்டு கண்டபிராணிகளாகும். உருப்பெருக்கி பூதக் கண்ணாடியும் கொண்டு கண்டால் இன்னும் சிறிய உயிர்ப்பொருள்களையும் காணலாம். நூல் கண் கொண்டு கண்டால் இன்னும் பெரிய உயிர்ப் பொருள்களையும், சிறியவைகளையும் காணலாம்.
    நூல் : மனித இயல்பு (1949) பக்கம் -21
    நூலாசிரியர் : திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர்
    ⁠(பரமாத்துவைத சித்தாந்த ஆசிரியர்)
  5. ஞானேந்திரியம் – புறமறி கருவி
    மிருகாதிகளின் அகவுணர்வு பிறந்ததிலிருந்து பெரும்பாலும் ஒரளவுள்ளதாகவே காணப்படுகிறது. விருத்தியடைவதில்லை. அது புறமறி கருவியான (ஞானேந்திரியமான) கண், காது, மூக்கு, நாக்குப் போன்றதாயிருக்கிறது. பத்து வயதில் இரண்டு கச தூரத்தில் தெரிந்த தினை, 15 வயதில் 4 கச தூரத்திலும், 20 வயதில் 20 கச தூரத்தில் கண்ணுக்கு நன்றாய் தெரியும் என்பது இல்லை. 10 வயதில் எப்படி எவ்வளவு தூரத்தில் தெரியுமோ 30, 40 வயதிலேயும் அப்படி அவ்வளவு தூரத்திற்றான் தெரியும். இந்த ஞானேந்திரியங்களின் அறிவு மனித உடம்பிலானாலும் சரி அவ்வாறு அளந்து போட்டதேயாகும்.
    நூல் : பக்கம் 30
  6. Guide – சுட்டிக்காட்டி
    தனுசுகோடிக்குச் சேது என்றும் பெயர் வழங்குகிறது. வங்காள விரிகுடாவும் இந்து மகாசமுத்திரமும் கலக்கும் இம்முனையில் குளித்தால் நல்ல கதி கிடைக்கும் என்று இராமேச்சுரத்துக்கு வரும் இந்துக்கள் பலர் இங்கு வந்து முழுகிவிட்டுப் போகிறார்கள். இவ்விடத்திலிருந்து தினந்தோறும் நீராவிக் கப்பல்கள் பிரயாணிகளையும், சாமான்களையும் ஏற்றிக் கொண்டு இலங்கைக்குச் செல்கின்றன. இத்தீவில் வசிப்பவர்கள் படகோட்டுதல், மீன் பிடித்தல் முதலிய தொழில்களைச் செய்து பிழைக்கிறார்கள். இராமேச்சுரத்திலும், தனுசுகோடியிலும் அப்புண்ணிய சேத்திரங்களில் உள்ள பழைய சின்னங்களைச் சுட்டிக்காட்டி நற்கதிக்கு வழிகாட்டும் பார்ப்பனரும் பலர் வசிக்கிறார்கள்.
    நூல் : திராவிட நாடு (முதல் பாகம்) (1949)
    ⁠அமைப்பு இயல், பக்கம் – 7
    நூலாசிரியர் : அ. கு. பாலசுந்தரனார், பி.ஏ., எல்.டி.
    ⁠(ஆசிரியர், சிந்தாதிரிப்பேட்டை
    உயர்நிலைப் பள்ளி, சென்னை)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்