செஞ்சீனா சென்றுவந்தேன் 2– பொறி.க.அருணபாரதி
(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி)
2. சியான் நகரம்
பண்டைத் தமிழகத்தில், மதுரை, தஞ்சாவூர் முதலானஉள்ளிட்ட நகரங்கள் எப்படி முதன்மைத் தலைநகரங்களாக விளங்கினவோ, அதே போல சீனாவிற்கு 4 பண்டையத் தலைநகரங்கள் இருந்தன. அவை, பெய்சிங்(கு), நான்சிங்(கு), (தெற்கு சீனா), (உ)லோயங்(கு), சங்கன் ஆகிய நகரங்களாகும்.
மேலுள்ள நான்கு நகரங்களில் சங்கன் என வழங்கப்பட்ட அவ்விடம்தான் இன்று சியான் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் சீனத் தலைநகரமாக உள்ள பெய்சிங்(கு)/(பீகிங்கு) நகரம், நவீன சீனாவின் அடையாளமாக உள்ளதைப் போல், ஒரு காலத்தில் சீனாவின் முதுன்மைத் தலைநகரமாகப் போற்றப்பட்டு வந்த இடம் தான் சியான் நகரமாகும்.
வெப்பநிலை 1 முதல் 10 வரை நிலவும் குளிர்ப்பகுதி இது என்பதால், மக்கள் அனைவரும் குளிருக்குத் தேவையான ஆடைகளுடனே வலம் வந்தனர். நெடுஞ்சல்லடம்(Jeans),குறுஞ்சட்டை (T-Shirts) ஆகியனவே இங்கு அடிப்படை உடைகளாகக் காணப்படுகின்றன.
வட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலான பல மேற்குலக முதலாளிய நாடுகளில், கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே, அங்குள்ளவர்கள் மொத்தமான ஆடைகளை அணிந்தால்தான் குளிரில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால், அந்நாடுகளில் வாழும் மக்கள் அவரவர் வசதிக்கேற்க குப்பாயம்(Coat), நெடுஞ்சல்லடம் போன்ற மொத்தமான ஆடைகளை அணிந்து வருகின்றனர். சீனாவிலும் அதே போல ஆண்களும் பெண்களும் எனச் சீனர்களில் பெரும்பாலானவர்கள் நெடுஞ்சல்லடம், குறுஞ்சட்டைகளுடன் மேலே குளிருக்கான குறுந்தோற்சட்டை(Jerkin) வகை ஆடைகளை அணிந்திருந்தனர். குறிப்பிடத்தக்க வெகு சிலரே, காற்சட்டை-மேற்சட்டைசட்டை வகை அணிந்திருந்தனர். சாக்கிசான் – செட்லீ ஆகியோரின் படங்களில் மட்டுமே சீனாவை பார்த்திருக்கும் நமக்கு, அந்தக் காட்சி புதிதாகத்தான் இருந்தது.
இது போன்ற நாடுகளில் வாழும் மக்களின் தேவைக்காக உருவான இந்த உடையே, பின்னர் வெப்பம் கடுமையாக வீசும் இந்தியா, ஆப்பிரிக்கா முதலான மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய உடையாக அறிமுகமானது. ஆனால், இன்று மூன்றாம் உலக நாடுகளில்தான் அந்த உடைகளுக்கான பெரும் சந்தையை முதலாளிய நாடுகள் உருவாக்கியிருக்கின்றன. இன்றைக்கும், தமிழகத்தில் திருமண மேடைகளில் குப்பாயம்(கோட்டு), பிற நாள்களில் நெடுஞ்சல்லடம் போன்ற உடைகள் பயன்படுத்தப்படுவது, வெகு இயல்பாகிவிட்டது. உடுத்தும் உடையிலிருந்து செயல் – சிந்தனை ஆகியவை வரை அனைத்திலும் நம்மை ஆதிக்கம் செலுத்துவது முதலாளியமே அன்றி வேறில்லை..
(தொடரும்)
Leave a Reply