54மக்கள்சீனம்-கொடி02

22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்?

  இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை.

  எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி முற்றதிகார வீழ்ச்சியை ஒட்டுமொத்த பொதுவுடைமை வீழ்ச்சியாகவே கொண்டாடுவார்கள். அதுதான் அவர்களுக்குத் தேவையும்! ஒருவேளை, மாவோ காலத்தைப் போல சீன உழைக்கும் மக்கள் மீண்டும் வல்லாளுமைக் கொள்ளைகளுக்கு எதிராகத் திரண்டெழுந்தால், ”சீன மக்கள் குடியரசு” உண்மையான மக்கள் குடியரசாகும். இல்லெயெனில், அடுத்த வட அமெரிக்காவாகவே சீனம் வரலாற்றில் இடம்பெறும்.

  மண்ணின் வளம் சார்ந்து இயங்கக் கூடிய சிறு தொழில்களும், மாற்றுத் தொழில்நுட்பங்களும் வளர்த்தெடுக்கப்படவில்லை எனில், உலகமயப் பொருளியல் கொள்கை எப்படியெல்லாம் ஒரு நாட்டைச் சூறையாடும் என்பதைச் சீனத்தில் மட்டுமல்ல, நம் சொந்தப் பட்டறிவுகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும். நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய நுகர்வு முறையையும், பண்பாட்டு-பழக்க வழக்கங்களையும் கைக்கொள்ள தொடங்கும் ஓர் இனம், தன்னுடைய சொந்த அடையாளங்களை இழந்து, பண்பாட்டு ஏதிலியாகின்றது. அதையே, சீன மக்களின் இன்றைய நிலை உணர்த்துகிறது. இவையே சீனாவிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை!

  இன்றைய உலக ஒழுங்கமைப்பில், வட அமெரிக்கா தலைமையிலான வல்லாளுமை நாடுகள் ஓர் அணியாகவும், சீனா தலைமையிலான பெயரளவு ‘பொதுவுடைமை’ நாடுகள் இன்னோர் அணியாகவும், இந்தியா முதலான நாடுகள் வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.

 54china_flag

  ஆனால், எதிர்காலத்தில் வல்லாளுமைகளுக்கு எதிரான தற்சார்பு பொருளியலோடு இயங்கக் கூடிய தேசிய இனங்களின் தேச அரசுகளைக் கொண்ட ஓர் உலகளாவியக் கூட்டமைப்பே மாற்று உலகைக் கட்டமைக்க வல்லது! இதில், தேச அரசுகளைக் கொண்ட தேசிய இனங்கள் மட்டுமல்லாது, தமிழ்நாடு, தமிழீழம், காசுமீரம், மணிப்பூர், பாலசுதீனம் எனத் தேசிய இறையாண்மையை மீட்கப் போராடும் அனைத்துத் தேசிய இனங்களும் இடம்பெற வேண்டும். இவ்வறான, நான்காம் அனைத்துலக கட்டமைப்பே, வல்லாளுமைப் பன்னாட்டு உலக ஒழுங்கமைவுக்கு மாற்றான மாற்றுக் கட்டமைப்பு ஆகும்! அதற்கு நாம் போராட வேண்டும்.

  விமானத்திலிருந்து வான்வழியே பார்க்கும் போது, தமிழர் கடலின் கடல் அலைகள் ”தமிழ்நாட்டு மண்ணே சீக்கிரம் போராடு! சீக்கிரம் போராடு” என எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கண்டேன். சென்னை நகரின் வெப்பம், இந்தியா மீதான தமிழ் மக்களின் சின உணர்வாக உணர்ந்தேன். இந்தியக் கடவுச்சீட்டுடன் விமானத்திலிருந்து இறங்கிய நான், தமிழ்த் தேசக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை வர வேண்டுமென்ற உணர்வுடன், தாயகத்திற்குள் அடியெடுத்து வைத்தேன். நாம் வெல்வோம்! நமக்கென நாடு பெறுவோம்!

thamizhflag01

(நிறைவு)

ka.arunabharathi4

ஆசிரியர் அறிமுகம்

     இத்தொடர் ஆசிரியர், க.அருணபாரதி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளரும் ஆவார். கணினி மென்பொறியாளரான இவர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார். அவ்விதழில் அரசியல் – பொருளியல் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். உலகமயப் பொருளியல் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கும் ‘கலகத்தை எதிர்நோக்கும் உலகம்’ என்ற ஆய்வு நூலையும் இவர் எழுதியுள்ளார்.