செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி)
6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன?
சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன.
சீன நகரங்களில் குடியிருப்பதற்கு, வெளி நாட்டவர் மட்டுமின்றி உள்நாட்டவர்கள் கூட, இவ்வாறான தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டிலிருந்து இவ்விதி செயல்படுத்தப் படுகின்றது.
1970களின் பிற்பகுதியில் மாவோ காலவட்டம் முடியும்வரை, சீனாவில் வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. 1980களுக்கு முற்பகுதியில், உலகிலேயே அதிகளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது சீனா. வேளாண் விலை நிலங்களைக் கொண்டிருந்த சீன உழவர்கள், தங்கள் குடும்பத்துடன் வேளாண் நிலங்களில் உழைக்க வேண்டுமென்ற விதி ஊர்ப்புறங்களில் பொதுவுடைமைக் கட்சியால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், பின்னர் வந்த டெங்கு சியோ பிங்கு (Deng Xiaoping) இது போன்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். மற்றொருபுறத்தில், வேளாண் உற்பத்தியின் மூலம் கிடைத்த மிகுதியில் பெருமளவு நகரங்களுக்கும், நகரமயமாக்கலுக்கும் செலவிடப்பட்டது. மேலும், சீனப் பொருளியலில் அயலக முதலீடுகள் ஏற்கப்பட்டன. ஊர்ப்புற மக்கள் தொகை சற்றொப்ப 73 இலிருந்து 79 விழுக்காடாக உள்ள சீனாவில், அவர்களது மேம்பாட்டிற்கென 10 விழுக்காட்டிற்கும் குறைவான மிகுதியே செலவிடப்பட்டது என்கிறது அமெரிக்கப் பொருளியல் கழகம் (American Economic Association – AEA).
இவை போன்ற காரணங்களின் காரணமாக, நகரமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டது. பணம் ஈட்டும் நோக்குடன் பெருமளவிலான உழவர்கள், வேளாண்மையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
இந்நேரத்தில், தொழில்துறை வளர்ச்சி காரணமாக வேளாண் துறையில் எந்திரங்கள் பெருமளவில் நுழைந்திருந்ததும், கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் காரணமாக, வேளாண் பணியாட்களுக்கு நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. மேலும், கல்வி கற்ற அடுத்த தலைமுறையினர், கல்லூரி – பணி என நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய தேவையும் இருந்தது.
இப்போக்குகள், ஊர்களை விட்டுவிட்டு நகரங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேற உதவின. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக 1986ஆம் ஆண்டு நகரங்களில் தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதற்கு, ஃகியூகௌ (Hukou)என்று பெயர். நகரங்களில் மக்கள் குவிவதை இது ஓரளவு தடுக்கிறது எனச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அது நடப்பதில்லை. இன்றைக்கு உலகிலேயே அதிகளவில் மக்கள் குவிந்துள்ள மக்கள் நெருக்கடியான நகரம், சீனாவின் தலைநகரான பெய்கிங் தான்.
இன்னொருபுறத்தில், 1970களில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கிய சீனா, அதில் மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கியது. இன்று, வட அமெரிக்கா
முதலான முன்னணி முதலாளிய நாடுகளில் இருந்து கணிசமான அளவில் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக மாற்றப்பட்டுவிட்டது சீனம். முதலாளிய அறிவியலாளர்கள், இதையும் ‘வளர்ச்சி’ என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை! சீனாவில் ஒருவரை இழிவுபடுத்த வேண்டுமெனில், அவர்களை ‘உழவன்’ என அழைக்கிறார்கள். அந்தளவில்தான், சீன வேளாண்மையின் ‘வளர்ச்சி’ இருக்கிறது.
சென்னையில் கண்ணகி நகர் – செம்மஞ்சேரி பகுதிகளில் தனிக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு எப்படி குடியமர்த்தப் படுகிறார்களோ, அதே போலவே நகரங்களில் குவிகின்ற சீன மக்கள், பல செயற்கையான வாழ்விடங்கள் ஏற்படுத்தப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். நகர வீதிகளின் அழுக்கான தெருக்களில் வசித்துக் கொண்டு, வேலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். சாலையோர கையேந்தி உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, அப்படியே வேலைக்குச் சென்றுகொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். நகரத்தில் தற்காலிகக் குடியிருப்பு இசைவு காலவதியாகும் நாட்களில், சம்பாதித்த பணத்தை ஊருக்குக் கொண்டு சென்றுவிட்டு, மீண்டும் நகரத்திற்கு வந்து தங்குகிறார்கள்.
சீனாவில் நகர மக்களுக்கும், ஊர் மக்களுக்கும் இருக்கின்ற இடைவெளி மலை போல உயர்ந்து வருவதாக, மேற்குலக முற்றுரிமை நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி, சீன அரசுத் தலைவர்கள் கூட அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் உண்மையாகும். இன்னும் பல நூறு ஊர்களுக்கு, மின்சாரம் – கல்வி முதலான அடிப்படை வசதிகள் அங்குக் கிடைக்காமல் இருப்பது, அவ்வப்போது மேற்குலக நாட்டு ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும்.
மேற்குலக ஊடகங்களின் நோக்கம், சீனாவில் உள்ள ஊர் மக்களை முன்னேற்றுவது அல்ல. சீனாவின் ஊர்களை இல்லாதொழித்து, உலகமய முதலாளிகளின் முதலீட்டிலான நவீன சீன நகரங்களை உருவாக்குவதுதான்! இதற்கு அவர்கள் வைத்திருக்கும் இன்னொரு பெயர்தான் ‘வளர்ச்சி’ !
அதிகரித்து வரும் சீனாவின் “வளர்ச்சி”க் குறியீடுகள், அதன் பின் விளைவாக ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் சாதாரணமானவையல்ல.
வட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முன்னணி முதலாளிய நாடுகளில் காணப்படுவதைப் போலவே, ‘ பொதுவுடைமை’ நாடான சீனாவிலும் மிகப்பெரும் அளவிற்குக் குமுகாய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. கார்டியன், நியூயார்க்கு டைம்சு, தி இன்டிபெண்டென்ட்டு என மேற்குலக ஊடகங்கம், சீனாவின் பல அரசுத் தலைவர்களும் இது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். சீனாவின் பொருளியல் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து வரும் பல ஆய்வு நிறுவனங்கள், 1978க்குப் பின் சந்தைப் பொருளியல் அறிமுகமான பின்னரே இந்த நிலை எனப் புள்ளி விவரங்களுடன் கவலைப்படுகின்றனர்.
ஊரில் இருப்பவரை விட, நகரத்தில் இருப்பவர் 3.33 மடங்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டுகிறார் எனச் சீனாவின் தேசியப் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. அரசுக் கணக்கே இது எனில், உண்மையான கணக்கு இதைவிடப் பல மடங்கு என்பதே உண்மை!
(தொடரும்)
Leave a Reply