தலைப்பபு-தக்கவர் சசிகலாவே, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_thakkavar-sasikalaaveilakkuvanar-thiruvalluvan

தக்கவர் சசிகலாவே!

?  அஇஅதிமுகவின்  பொதுச் செயலாளராக  யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா?

  ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள்  அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யைப் பரப்புவதால் நாமும் நம் கருத்துகளைத்தெரிவிக்கலாம்.

? ஆனால், அக்கட்சியில் ஒரு பகுதியினரும் அக்கட்சி சாராதவர்களில் பெரும்பகுதியினரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடாது என்றுதானே சொல்கிறார்கள்!

  உண்மையான கட்சியாளர்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பின் அதனை வெளியே சொல்ல  மாட்டார்கள். தங்கள் கட்சிக்குள்தான் பேசுவார்கள். அக்கட்சிக்கு எதிரான  பலரும் எதிர்ப்பான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். சிலர் அக்கட்சியிலுள்ள சிலரையும் தம் வயப்படுத்தி இவ்வாறு கூறச் செய்கிறார்கள்.

? திண்பண்டத்தின்  மேலே பாதுகாப்பிற்குச் சுற்றப்படும் தாள், திண்பண்டம் ஆகிவிடாது என்கிறார்களே!

  அவர்களே பாதுகாப்பிற்காகச் சுற்றப்படும் தாள் என்ற ஒத்துக்கொள்கிறார்கள் அல்லவா? அந்தத்தாள் இல்லையேல், அத் திண்பண்டம் உட்கொள்ளும் தகுதியை இழந்து விடுகிறது அல்லவா?

? திண்பண்டத்தை உட் கொள்ளும்பொழுது சுற்றியுள்ள தாளைக் குப்பையில்தானே எறிகிறோம்! அதற்கு உள்ள மதிப்பு அவ்வளவுதானே!

 உண்மைதான். ஆனால், உவமை தவறானது.  முன்பு, பின்னணியில் இருந்து இயக்குகிறார் என்று குற்றம் சாட்டியவர்கள்தானே, குப்பையில் எறிய வேண்டும் என்கிறார்கள். பின்னணி இயக்குநர் என்றால், கட்சியிலும் ஆட்சியிலும் அனைத்தையும் அறிந்தவராகத்தானே இருப்பார். அத்தகையவரைக் குப்பையி்ல் எறியப்படவேண்டிய தாளாகக் கூறுவது தவறல்லவா? எனவே, இணைந்தும் பிணைந்தும் இருந்தவரைத் தொடர்பிலாதவராகக் கூறுவது தவறுதானே!

?  தலைவியுடன் வசித்ததாலே வேலைக்காரி வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியுமா என்கிறார்களே!

  தாயாய், சேயாய், உற்றதோழியாய், நல்ல வழிகாட்டியாய் இருந்தவரை வேலைக்காரி என்று  சித்திரிப்பதாலேயே அவ்வாறு கூறுவோர்  நடுநிலை பிறழ்ந்தவர்களே என்பது புரிகிறதே!

? அவர்கள் என்ன காரணத்திற்காகவும் கூறட்டும்! பணிப்பெண் முதலாளியின் மரபுரிமையைக்  கோரக் கூடாதல்லவா?

 வாதத்திற்காகப் பணிப்பெண்-முதலாளி என்பதை ஏற்றுக் கொள்வோம். தங்கள் பணியாளர்களுக்குச் சொத்துகளை எழுதி  வைத்து விட்டுமறைந்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.  அடிமை மரபில் (வம்சம்) கட்டுண்டு கிடந்தவர்கள்தான் நம் நாட்டினர்.

? அடிமை மரபு(வம்சம்) என்றால் என்ன?

  வட  இந்தியாவில் நம் நாட்டை விட்டு வெளியேறிய இசுலாமிய அரசர், ஆட்சியைத் தன் அடிமையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற வரலாறும், அடிமைகள் தங்கள் அதிகாரத்தைப் பரப்பி, ஆட்சியாளர்களான வரலாறும் உள்ளன. அடிமைக் குலத்தினர் ஆட்சி என்பதால் அடிமை மரபு(வம்சம்) என்று வரலாற்றில் இடம் பெற்றது. 1206  முதல் 1290 வரை  ஆண்டு, இலக்கியத்திலும் கலையிலும் கருத்து செலுத்தியுள்ளனர். கோரி முகமதுவிடம் அடிமையாக இருந்தவர் குத்புதீன் ஐபக். கோரி முகமது அவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுநராக நியமித்தார். கோரி மன்னன்கொலையுண்ட பின், தில்லி சுல்தானகத்துற்கு இவரே ஆட்சியாளரானார்.   

 அடிமைகளின் ஆட்சியில் கண்டுண்டு கிடந்தவர்கள் நாட்டில், தலைவி யாரிடம் கண்டுண்டு கிடந்தாரோ அவரிடம் கட்டுப்படுவதைக் குறை கூறுகின்றனர்.

 ? முன்பு அடிமை ஆட்சியிருந்திருக்கலாம்.  மக்களாட்சி நடைபெறும் இப்பொழுது அது தேவைதானா?

 வாணாள் துணையாய் இருந்தவரை அடிமை என்றும் பணிப்பெண் என்றும் சொல்வது தவறல்லவா?  அவ்வாறு கூறுவோர், செயலலிதாவிற்கு எதிரானவர்களே!

  இன்னோர் உண்மையையும் புரிந்து கொள்ள  வேண்டும். முதலில் சிறுமி என்றனர். இப்பொழுது பணிப்பெண் என்கின்றனர். திருமணமான பின்னர்தான் சசிகலா  செயலலிதாவைச் சந்தித்துள்ளார். அப்புறம் எப்படி, அவர் சிறுமியாக இருக்க முடியும்?

 அடுத்தது விற்பனையாளர் – வாடிக்கையாளர் என்ற முறையிலான சந்திப்பும் பழக்கமும் எப்படி  முதலாளி, வேலையாள் என்றாகும்? அல்லது உதவிக்கு ஒருவர் வந்தால் அவரை வேலையாள் என்று சொல்லி விடுவதா?

  மனம் ஒரு பற்றுக்கோட்டைத் தேடிய நேரம் அமைந்த சந்திப்பு, தோழமையாக, உடன்பிறப்பு அன்பாக  மலர்ந்து சிறந்துள்ளது.  இதனைக் கொச்சைப்படுத்துவது தவறல்லவா?

? அப்படியானால், மருத்துவமனைக்கு இரும்புத்திரை இட்டதேன்? ஒளிவு மறைவு தேவையில்லையே!

  செயலலிதா  திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர். எனவே, தன் பிம்பத்தைப் பேணிக்காப்பதில் கருத்தாக இருந்துள்ளார். நலிந்த நிலையில் சிலர் படம் எடுக்கவும் விரும்பமாட்டார்கள். எடுத்தாலும் அடுத்தவருக்குக் காட்டவும் விரும்பமாட்டார்கள். எனவே, நலிந்த தோற்றத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது இயல்பே. ஒரு வேளை அலைபேசி வழியாகவோ வேறு வகையிலோ படம் எடுத்திருந்தால் பின்னர் வெளிவர வாய்ப்புண்டு. மேலும், செயலலிதா நலம் பெற்று வருவார் என்ற நம்பிக்கையில்தான் மீ உச்ச நிலையான மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. “அவர் நலமடைந்து நல்ல நிலை அடைவார்; அப்பொழுது பொதுமக்களைச் சந்தித்தால் பிறர் ஐயங்களுக்குத்தீர்வு கிடைக்கும். அதுவரை அமைதி காக்கலாம்” என்றிருந்திருக்கலாம்.

? முன்பே செயலலிதா இறந்துவிட்டார் என்றும் பிணத்தைவைத்துத்தான் நாடகம் ஆடினார் என்றும் அல்லவா கூறுகிறார்கள்.

 உண்மையிலேயே இறந்தபின்னர் இருப்பதுபோல் நாடகமாடினால், தனியர் மருத்துவமனையான அப்பலோவின் மருத்துவர்கள்,  தமிழக அரசின் கட்டுப்பாட்டிலில்லாத அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்சு மருத்துமனை) மருத்துவர்கள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லாத அயல்நாட்டு மருத்துவர்கள் எப்படி அமைதி காத்திருப்பர்? பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பதுபோல் நடிக்கச் சொல்கிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லி இருக்க மாட்டார்களா? நமக்குச் சில விவரம் தெரியவில்லை என்பதற்காகவே எல்லாவற்றையும் ஐயக்கண்கொண்டு திரித்துக் கூறிப் பரப்புவது தவறல்லவா?

? கட்சிவிதிகளில் சசிகலாவைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்க இடமில்லை என்கிறார்களே!

  விதிகள் என்பன நம் பயன்பாட்டிற்காகத்தான். அவ்வாறு இருக்கின்ற விதிகளில் இடமில்லை என்றால் ஏற்றவாறு மாற்ற அல்லது திருத்தப் போகிறார்கள். இதில் இவர்களுக்கு என்ன வந்தது?

  இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே 101 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனியும் திருத்தங்கள் வரும்.  எனவே, கட்சி விதிகளைத் திருத்துவது இயலாத ஒன்றும் அல்ல, இயலக்கூடாத ஒன்றும் அல்ல.

? வேறு யாரையேனும் இடைக்காலமாகப் பொறுப்பேற்கச்செய்து பொதுச்செயலாளராக ஆக்கி முறைப்படி திருத்தம் மேற்கொண்டபின், சசிகலாவைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்களே!

  அவ்வாறு சுற்றிவளைத்து மூக்கைத் தொட வேண்டிய தேவையில்லை. காலையில் பொதுக்குழு கூடி, யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை எனில், சசிகலாவைத் தேர்ந்தெடுப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றிப் பிற்பகல், அத்தீர்மானத்திற்கிணங்க அவரைப் பொதுச்செயலாளராக அமர்த்தலாம்.

  மேலும் விதி 20, தேர்தலில்  போட்டியிடுவதற்குரிய தகுதிகளைத்தான் கூறுகின்றது. ஆனால், அதிகார வல்லமை மிக்கப் பொதுக்குழு, யாரையும் தலைவராகவோ பொதுச்செயலாளராகவோ, போட்டியின்றித் தேர்ந்தெடுத்து அமர்த்தத் தடையில்லை. பொதுக்குழு கூடி, சசிகலா நடராசன் அம்மையாரைத் தலைவராக அல்லது பொதுச் செயலாளராகப் பொதுக்குழு அமர்த்துகிறது என்று சொல்வதில் எந்தத் தடையுமில்லை.

? என்ன, திடீரென்று தலைவராக என்றும் சொல்கிறீர்கள்.

  தலைவர் கூடாது என விதி இ்ருப்பதாகத் தெரியவில்லை. பேரறிஞர் அண்ணா உருவாக்கிய மரபு அது. புதிய விதியை உருவாக்கிப் புதுப் பதவியை உருவாக்கிக் கொள்ளலாம்.

 சின்ன அம்மா என்று கட்சியினரால் அன்புடன் அழைக்கப்பெறும் சசிகலா நடராசன் அம்மையாரைத் தலைவராகவும் மூத்தக் கட்சி உறுப்பி்னர் ஒருவரைப் பொதுச்செயலாளராகவும், மண்டலப் பொதுச்செயலாளர்கள் சிலரையும் நியமித்துக் கட்சியை வலுப்படுத்தலாம்.

? செயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தான்தான் இரத்தத் தொடர்பான மரபுரிமையர் என்கிறாரே!

 அவர், இத்தனை  ஆண்டு செயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்தானே!  செயலலிதா  இறுதிமுறி(உயில்) எதுவும் எழுதிவைக்காமல் இருந்தால் பிற மரபுரிமையர்போல் அவருடைய சொத்துகளுக்குத் தன் பங்கிற்குரிய உரிமை கோரத் தடையில்லை. ஆனால், கட்சிப் பொறுப்பு என்பது மரபுரிமை அடிப்படையானது இல்லை.

?அப்படித்தானே அரசியலில் நடக்கிறது.

  அரசியல் என்பது தொழிலாகப் போய்விட்டது. எனினும் மரபு  உரிமை அடிப்படையில் மட்டும் வழிவழி மக்கள் பதவிகளைப் பெறுவதில்லை. கட்சியில் ஒருவர் வைத்துள்ள பிடிப்பும் கட்சியினர் அவர்மீது வைத்துள்ள மதிப்பையும்  பொறுத்துத்தான் இது அமையும். எம்ஞ்சியாருக்குப்பிறகு, சானகி இராமச்சந்திரன் மனைவி என்ற உரிமையில் களத்தில் இறங்கினாலும் கட்சியினர் புறக்கணித்ததால் பொறுப்பிற்கு வர இயலவில்லை அல்லவா?

? சொல்வது சரிதான். ஆனால், இவர்தான் மரணத்திற்குக் காரணம், உசாவல் (விசாரணை) வேண்டும் என்கின்றனரே!

  கடந்தகாலம் அறியாதவர்களும் வேண்டுமென்றே பழிச்சொல் சொல்ல வேண்டும் என்பவர்களும்தான் அவ்வாறு கூறுவர்?

? கடந்தகாலத்தில் என்ன நடந்தது?

  பெரோசு கந்தி இறந்தபொழுது அவர் மனைவியான இந்திராகாந்தியும் மாமனாரான சவகர்லால் நேருவும்தான் கொன்றனர் என்றனர்.

  இலால்பகதூர் இறந்தபொழுது இந்திராகாந்திதான் இரசியா மூலம் கொன்றதாகக் கூறினர்.

  சஞ்சய்காந்தி இறந்தபொழுது அவரது அன்னை இந்திராகாந்திதான் காரணம் எனவும் யாருக்கும் தெரியாமல் அவரது கைக்கடிகாரத்தில் இருந்த சுவிசுவங்கிக்கணக்குக் குறியீட்டை அறிந்து வந்தபின்  உலகறிய போய்ப்பார்த்ததாக நடித்தார் எனவும்  கூறினர்.

  இராசீவு காந்தி இறந்தபொழுது அருகே காணாமல் போன அவர் கட்சித்தலைவர்கள்தான் காரணம் என்றனர்.

  எம்ஞ்சியார் இறந்தபொழுது  அவர் மனைவி சானகி அம்மையார்தான் மோரில் நஞ்சு கலந்து கொன்றதாகக் கூறினர்.

  இவற்றையெல்லாம் உசாவி முடித்தபின்னர் செயலலிதா மரணம் குறித்து ஆராயட்டும்!

? நிழலாக இருந்தவர்தானே! இவருக்கு என்ன நேரடியாகக் கையாளும் திறமை இருக்கப்போகிறது?

  நிழலாக இருந்தார் என்றால் செயலலிதாவின் செயல்பாடுகளில் முதன்மை பங்கு வகித்தார் என்றுதானே பொருள். இருப்பினும் தேவை வரின் களத்தில் இறங்க அஞ்சமாட்டார் என்பதற்கு முன் சான்று உள்ளது.

? என்ன சான்று அது?

  அதிமுக சா. அணி, செ. அணி எனப் பிளவுபட்ட பொழுது இராசீவு காந்தி எந்தத் தனிப்பட்ட அணிக்கும் தன் கட்சி ஆதரவு இல்லை என்றும் ஒன்றுபட்டு வந்தால் ஆதரவு தருவதாகவும் கூறினார்.  தலைவர்கள் இருவருக்கும் தம் நிலையிலிருந்து இறங்கி வர மனம் இடம் தரவில்லை. சசிகலா முயற்சியால்தான் இருவரும் விட்டுக்கொடுத்து இணைந்தனர். எனவே, சூழலுக்கேற்ப  நேரிடையாகவும் வாகை சூடும் திறன் மிக்கவர்தான் சசிகலா. செயலலிதா மறைவிற்குப்பின்னர் அவரை அடக்கம் செய்தது தொடர்பான பாதுகாப்புப்பணிகளிலும் பிறவற்றிலும் இவரது ஆளுமை நன்கு தெரிந்துள்ளது. எனவேதான், முன்பே ஆள்வினைச் செல்வி எனக் குறிப்பிட்டுள்ளோம்

? செயலலிதாவால் நீக்கப்பட்டவர்தானே சசிகலா. கட்சிப்பணிகளில் இருந்து விலகியிருப்பதாகவும் மடல் அளித்துள்ளாரே!

 அரசியலில் நிலையான உறவும் இல்லை, நிலையான பகையுமில்லை. செயலலிதாவே எம்ஞ்சியாரால் விலக்கிவைக்கப்பட்டவர்தானே! ஒருவரைக் கடுமையாக எதிர்ப்பவர் அவரிடமே சரண் புகுவதும், அவரும் அவரை ஏற்றுக் கொள்வதும் இயல்பான ஒன்று.  இந்திராகாந்தியை எதிர்த்துப் போட்டியிட்டவர் இந்திரா காங்கிரசில் சேர்ந்ததையும் கலைஞர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர், தி.மு.க.வில் சேர்ந்து அ்வர் தலைமையை ஏற்றதையும் நாம் கண்டுள்ளோம். இவ்வாறு நூற்றுக்கணக்கான முன் எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே, இது ஒரு தடையே அல்ல. மேலும் அவ்வாறு எழுதிக் கொடுத்தபின்னர்தான் செயலலிதா சசிகலாவின் பேச்சைக் கேட்டுக் கட்சியில் சில நடிவடிக்கைகள் எடுத்துள்ளார்.  யார் யாருக்கோ போட்டியிட வாய்ப்பு அளித்த சசிகலா தானே போட்டியிட்டிருக்க முடியாதா?  தன் உடன்பிறவாத் தமக்கையின் அருகிருந்து உதவ இயலாமல் போய்விடும் என்றுதான் இதற்கு முன்பு போட்டியிடும் வாய்ப்பையும் கட்சிப்பதவி வாய்ப்பையும் புறந்தள்ளினார். இப்பொழுது தன் உடன் பிறவாத் தமக்கையின் பணிகளைத்  தொடர வேண்டிய கடமை உள்ளது. எனவே, அவர் வழியில் கட்சிப்பணியில் நேரடியாக  ஈடுபடுவது சரிதான்.

? சசிகலாவைத் தோழி என்ற முறையில்தானே முன்னிலைப் படுத்துகிறார்கள்.

  அப்படிக் கருதினால் அது தவறு. மறைந்த முதல்வர் செயலலிதாவிற்கு எத்தனையோ தோழிகள் உள்ளனர். ஆனால், சசிகலா அவ்வாறல்லர்! அவருக்கு நிழலாக இருந்து ஆட்சியமைப்பிலும் கட்சியமைப்பிலும் வேர்களையும் விழுதுகளையும் உணர்ந்தவர். வேறு யாரையும் விட அவருக்குக் கூடுதல் தகுதிகள் உள்ளன. இந்தச் சூழலில் வேறு யாரேனும் பொறுப்பில் வந்தால்,  பிளவு ஏற்படவும், மாற்றுக் கட்சியினரின் கைக்கூலிகள் பெருகவும்  வாய்ப்பு உண்டு. கட்சியில் அணிகள் இருந்தாலும் பிறரின் தலைமையைவிட இவரின் தலைமையில் எதிர்ப்பு அணிகள் அடங்கி விடும்.

எனவே, கட்சியையும் ஆட்சியையும் கட்டுக்கோப்பில் கொண்டு செல்லத் தகுந்தவர் ஒருவரே! அவர்தான் சசிகலா!

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்   (திருவள்ளுவர், திருக்குறள் 504)

– இலக்குவனார் திருவள்ளுவன்